Latest News

தூத்துக்குடி: காவலர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிக்கொன்ற சந்தேக நபர் பலி - என்ன நடந்தது?

சித்தரிப்புக்காக

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மணக்கரை வனப்பகுதியில் குற்றவாளிகளைத் தேடிச் சென்ற காவலர்கள் மீது வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் ஒருவர் பலியானார். வெடிகுண்டு வீசியதில் ஒருவராகக் கூறப்படும் துரைமுத்து என்பவரும் பலியாகியுள்ளார்.

2012 நவம்பர் 24ஆம் தேதி ஏரல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வினோத், ராமச்சந்திரன் என்ற இருவர் கொல்லப்பட்டனர். இதில் துரைமுத்து என்பவர் சந்தேக நபராக கருதப்பட்டு தேடப்பட்டு வந்தார். இவர் மேலமங்கலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர். திருநெல்வேலியில் கடந்த ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கிலும் இவர் தேடப்பட்டுவந்தார்.

இந்த நிலையில், வல்லநாடு அருகே உள்ள மணக்கரை என்ற பகுதியில் துரைமுத்து, அவருடைய நண்பர் பலவேசம் உள்ளிட்ட நான்கு பேர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து ஆழ்வார் திருநகரி காவல்துறை துணை ஆய்வாளர் முருகப்பெருமாள் தலைமையில் தலைமைக் காவலர் சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் தேடுதல் வேட்டையை நடத்தினர்.

இதில் ஏரல் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினரும் பங்கேற்றனர்.

இந்த தேடலின்போது, துரைமுத்து குழுவினர் காவலர்களைப் பார்த்து வெடிகுண்டுகளை வீசியதில் சுப்ரமணியன் என்ற காவலர் உயிரிழந்தார். இதற்கு பிறகு துரைமுத்துவும் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. அவரது உயிரிழப்பிற்கான காரணம் தெளிவாகவில்லை.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஆழ்வார் திருநகரி முதல்நிலைக் காவலர் சுப்பிரமணியத்தின் குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல்துறை என்ன கூறுகிறது?

இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வலம்வந்த நிலையில், சந்தேக நபரான துரைமுத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததாலேயே காவலரும் அவரும் பலியானதாக காவல்துறையின் தென் மண்டல ஐ.ஜி. முருகன் விளக்கம் அளித்திருக்கிறார்.

துரைமுத்து, அவருடைய உறவினர் சுடலைக் கண்ணன், துரைமுத்துவின் தம்பி சாமிநாதன், சிவராமலிங்கம் ஆகியோர் ஏதோ ஒரு மிகப் பெரிய குற்றத்தைச் செய்வதற்காகக் கூடியிருந்தபோது தகவல் அறிந்து காவலர்கள் குறிப்பிட்ட வனப் பகுதிக்குச் சென்றனர். அப்போது துரைமுத்தை சுப்ரமணியனும் மற்றொருவரும் விரட்டி சென்றனர். கையில் ஒரு பையை வைத்திருந்த துரை முத்து, அதிலிருந்து ஒரு நாட்டு வெடிகுண்டை எடுத்து காவலர்கள் மீது எரிந்தார். அந்த குண்டு வெடிக்கவில்லை.

இதற்குப் பிறகு தொடர்ந்து துரை முத்தை சுப்ரமணியன் விரட்டிச் சென்றார். ஒரு கட்டத்தில் மேடுபள்ளமான தரையில் இருவரும் கட்டுப் புரளும்போது குண்டு வெடித்தது. அதில் சுப்ரமணியனின் தலை சிதறியது. துரைமுத்துவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் பாளயம்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்குக் கொண்டுவந்தபோதே இறந்துவிட்டனர் என ஐ.ஜி. முருகன் தெரிவித்தார்.

தற்போது சுடலைக் கண்ணன், சாமிநாதன், சிவராமலிங்கம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். துரைமுத்துவுக்கு உறவினரான சுடலைக் கண்ணன் வனத்துறையில் பணியாற்றிவந்தார் எனத் தெரிவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

சர்ச்சையாகும் சந்தேகம்

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், காவல்துறையே துரைமுத்து மீது நாட்டு வெடிகுண்டை வீசியதாகக் கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

"காவல்துறை குண்டை வீசியதாகச் சொல்வது தவறு. அப்படியிருந்தால் காவலர் இறந்திருக்க மாட்டார்" என விளக்கமளித்த ஐ.ஜி. கைது செய்யப்பட்டவர்களிடமிருது அரிவாள், வெடிகுண்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்த தேடுதல் நடவடிக்கைக்கு காவலர்கள் போதுமான முன்னெச்சரிக்கையுடன்தான் சென்றதாகவும் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியிருந்தால், யார் மீது படும் என்பது தெரியாததால் அதனைப் பயன்படுத்தவில்லையென்றும் தேடுதல் வேட்டைக்கு ஒரு துணை ஆய்வாளர் மற்றும் ஏழு காவலர்கள் சென்றதாகவும் ஐ.ஜி. முருகன் தெரிவித்திருக்கிறார்.

 source: bbc.com/tamil

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.