Latest News

நடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது எப்படி?- ஐஏஎஸ் தேர்வில் வென்ற சின்னி ஜெயந்த் மகன் சிறப்புப் பேட்டி

பிரபல நகைச்சுவை நடிகரும் குணச்சித்திரக் கலைஞருமான சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75-வது இடத்தைப் பெற்றுள்ளார். இதையடுத்து திரைத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஸ்ருதனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு நடிகரின் மகனுக்கு ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது எப்படி, குடிமைப்பணித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஸ்ருதன் ஜெய் நாராயணன் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் விரிவாகப் பேசினார்.

''இந்தத் தருணத்தை எப்படி உணர்கிறீர்கள்?

பெருமிதமாகவும் ஆசிர்வதிக்கப்பட்டவனாகவும் உணர்கிறேன். நான் தேர்வானதில் என்னைவிட அப்பாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஒட்டுமொத்தக் குடும்பமும் சந்தோஷத்தில் ஆழ்ந்திருக்கிறோம்.

திரை வெளிச்சம் உங்களின் படிப்பில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது?

அப்பா சினிமாத் துறையில் இருந்தாலும் அவர் அதில் மட்டுமே நின்றுவிடவில்லை. அவருக்குத் துறைசார் வல்லுநர்கள், தொழிலதிபர்கள், சமூக சேவையாளர்கள், சினிமா என எல்லாத் துறைகளிலும் நட்பு இருந்தது. அப்பா, அம்மா, என்னுடைய நண்பர்கள் எல்லோருமே பன்முகத்தன்மை கொண்டவர்களாக இருந்தார்கள் அவர்கள் அனைவரிடம் இருந்தும் உத்வேகம் பெற்றேன். சினிமாத் துறையில் இருந்து கடின உழைப்பைக் கற்றுக்கொண்டேன்.

உங்களின் ஆரம்பக்காலப் படிப்பு எவ்வாறு இருந்தது, ஆட்சிப் பணியில் ஆர்வம் வந்தது எப்படி?

சிறு வயதில் இருந்தே அப்பா, அம்மா இருவரும் நான் படிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பார்கள். நானும் நன்றாகப் படித்தேன். ஆனால், அதை அனுபவித்துக்கொண்டே செய்தேன்.

குடும்பத்தினருடன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்

சென்னையில் பள்ளி, கல்லூரியை முடித்துவிட்டு டெல்லியின் அசோகா பல்கலைக்கழகத்தில் 'யங் இந்தியா ஃபெல்லோஷிப்' எனப்படும் டிப்ளமோ படிப்பை முடித்தேன். சமூகவியல், கலாச்சார அறிவியல் படிப்புகளுடன் யூபிஎஸ்சி பயிற்சிக்குத் தயாராக அது உதவியாக இருந்தது. அங்கே சர்வதேசப் பேராசிரியர்கள், யூபிஎஸ்சி தேர்வர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினரைச் சந்திக்க முடிந்தது.

அதற்குப் பிறகு நாஸ்காம் அறக்கட்டளையில் வேலைக்குச் சேர்ந்தேன், பின் ஐ.டி. தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் வேலை. இதற்கிடையில்தான் ஐஏஎஸ் பயிற்சிக்குத் தயாரானேன். என்னுடைய நிறுவனத்தினரும் என்னை உற்சாகப்படுத்தினர்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எங்கு, எப்படித் தயாரானீர்கள்?

சென்னையில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில்தான் படித்தேன். சங்கர் சார் உயிருடன் இருந்தபோது அத்தனை உற்சாகப்படுத்துவார். தொடர் வழிகாட்டியாக இருந்தார். ரெஜிதா மேடம் உதவியுடன் சமூகவியலை விரும்பிப் படித்தேன். முதல்முறை தோல்வியடைந்த போதும் இரண்டாம் முறை வெற்றி பெற்றேன்.

எப்போதாவது சோர்வடையும்போது அடிக்கடி யூடியூபில் தன்னம்பிக்கை உரைகளைக் கேட்டு என்னை நானே உற்சாகப்படுத்திக் கொள்வேன். எல்லாவற்றில் இருந்தும் கற்றுக்கொள்வது, மகிழ்ச்சியுடன் படிப்பதைப் பின்பற்றினேன்.

ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

முதலில் விரும்பிப் படிக்க வேண்டும். கடின உழைப்புடன் தொடர் முயற்சியும் பொறுமையும் முக்கியம். நம் ஆசிரியர்கள், வழிகாட்டிகள் சொல்வதை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். படிப்பைத் தாண்டி குடும்பம், நண்பர்கள் என நம்மைச் சுற்றி நல்ல சூழலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

தேர்வில் வெற்றி பெற குடும்பத்தின் ஆதரவு மிகவும் முக்கியம். ஏனெனில் யூபிஎஸ்சி தேர்வு முறை மிகவும் நீண்ட காலம் எடுக்கும் நடைமுறை. தற்போது எல்லா இடங்களிலும் யூபிஎஸ்சி தேர்வுக்கான வழிகாட்டல்கள், கற்றல் உபகரணங்கள் சுலபமாகக் கிடைக்கின்றன. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திட்டமிடல்கள் இருக்கும். அத்துடன் குறிக்கோளோடு கூடிய பயிற்சி அவசியம். அதைத் தொடர்ச்சியாக மேற்கொண்டாலே போதும். வெற்றி கிடைத்துவிடும். இதுதான் எனக்கு நடந்தது. மற்றவர்களுக்கும் நடக்கும்.

குடிமைப் பணியில் எந்தப் பணியில் விருப்பம், யாருக்காகப் பணியாற்ற விரும்புகிறீர்கள்?
என்னுடைய தேர்வு ஐஏஎஸ் ஆகத்தான் இருக்கும். அடுத்தகட்டமாக ஐஎஃப்எஸ்.

சமூகத்தில் பாதிக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்காகப் பணியாற்றுவேன். அனைத்துக் குடிமக்களுக்கும் அரசிடம் இருந்து சரியான சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வேன். சொந்த மாநிலத்தில் ஆட்சியர் ஆகப் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசை'' என்றார் ஸ்ருதன் ஜெய் நாராயணன்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.