Latest News

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை: முக்கிய துளிகள்

 

காலணி நாடான இந்தியா, பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்று, அதன் பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. தற்போது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் 74-ஆவது சுதந்திர தினம் நெருங்குகிறது. இந்நிலையில், பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று, இரு நாடுகளாக பிரிந்தபோது ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் இரண்டாம் பாகம் இது.

சுதந்திரம் என்பது மகிழ்வான நினைவாக இருந்தாலும், சந்தோசமாக கொண்டாடப்பட்டாலும், பிரிவினை என்பது நினைத்த மாத்திரத்திலேயே வருத்தத்தை கொடுப்பது. இது 74 வருடங்கள் பழமையான கதை என்றாலும் பிரிவினை இன்றும் வேதனையை ஏற்படுத்துவது. இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவு வரலாற்றின் சில முக்கிய துளிகள் இவை.

பாகிஸ்தான் உருவான பிறகே சுதந்திரம் என்பதில் ஜின்னா உறுதியாக நிற்க, சுதந்திரமே முன்னுரிமை என்றார் காந்தி
 • 1885 டிசம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் இருபது ஆண்டுகளில் முதன்முறையாக விடுதலை வேண்டும் என்று கோரிக்கையைவிட, பிரிட்டன் ஆட்சியில் வாழும் இந்திய மக்களின் நிலையை மேம்படுத்துவது தொடர்பாக வலுவாக முன்வைக்கப்பட்டது.
 • 1905இல் வங்கப்பிரிவினைக்கு பிறகு, அரசியல்ரீதியிலான மாற்றங்கள் தேவை என்ற கோரிக்கையை காங்கிரஸ் வலுவாக முன்வைத்தது. அத்துடன் முழுமையான சுதந்திரம் தேவை என்ற குரலும் ஓங்கி ஒலித்தது.
 • 1906இல், 'இந்திய முஸ்லிம்களின் அதிகாரத்தை பாதுகாப்பதற்காக' முஸ்லிம் லீக் உருவானது.
 • இந்து - முஸ்லிம் மக்களிடையேயான பதற்றங்களை தீர்ப்பதற்காக 1938 பிப்ரவரியில் மகாத்மா காந்திக்கும், முகம்மது அலி ஜின்னாவுக்கும் இடையே தொடங்கிய பேச்சுவார்த்தை ஜூலையில் தோல்வியடைந்தது. 'முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை' விசாரிக்க குழு ஒன்றை முஸ்லிம் லீக் அமைத்தது.
 • பாகிஸ்தான் உருவாவதற்கான பிள்ளையார் சுழி 1940 -ஆம் ஆண்டு மார்ச் 23இல் போடப்பட்டது. அன்றைய தினம்தான் லாகூரில் முஸ்லிம் லீக், 'பாகிஸ்தான் தீர்மானம்' என்பதை முன்மொழிந்தது. இதன்படி, முழுமையான சுதந்திரமான நாடு முஸ்லிம்களுக்கு தேவை என்று வெளிப்படையாக கோரப்பட்டது.
பிரிட்டன் ஆட்சியில் வாழும் இந்திய மக்களின் நிலையை மேம்படுத்துவது என்பது காங்கிரஸின் முக்கிய கோரிக்கையாக இருந்தது
 • பிரிட்டன் வைஸ்ராய் லினிலிதோகோ 1940இல், 'ஆகஸ்ட் முன்மொழிவு' என்ற திட்டத்தை முன்வைத்தார். அதில், வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய போர் பிரதிநிதி ஆலோசனைக் குழுவிற்கு இந்திய பிரதிநிதிகளை நியமிப்பது உள்ளிட்ட பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. காங்கிரசும், முஸ்லிம் லீகும் 'ஆகஸ்ட் பிரேரணையை' ஒட்டு மொத்தமாக நிராகரித்தன. அக்டோபர் 17 இல் காங்கிரஸ், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியது.
 • பிரிட்டன் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில், பிரச்சனைகளை தீர்க்க முயன்றார். 1942 -ஆம் ஆண்டு மார்ச் 11ம் தேதியன்று, இங்கிலாந்தின் பிரபல சோசலிச தலைவரான சர் ஸ்டீஃபர்ட் கிரிப்ஸ், அரசியல் சீர்திருத்த யோசனைகளுடன் இந்தியாவிற்கு அனுப்பப்படுவார் என்று சர்ச்சில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

 • 1942, மார்ச் 22-23இல் டெல்லி வந்த சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ், இந்தியத் தலைவர்களுடன் நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு மார்ச் 30ஆம் தேதியன்று கிரிப்ஸ் தனது திட்டத்தை வெளியிட்டார்.
 • கிரிப்ஸ் குழுவின் திட்டத்தை இந்தியத் தலைவர்கள் நிராகரித்துவிட்டார்கள்.
 • 1942இல் மகாத்மா காந்தி தலைமையில் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தொடங்கப்பட்டது.
 • 1944, செப்டம்பர் மாதத்தில் மகாத்மா காந்தியும், ஜின்னாவும் பாகிஸ்தான் கோரிக்கை பற்றி நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இருவரிடையேயும் இதுதொடர்பாக ஆழமான கருத்து வேறுபாடுகள் நிலவின.
 • பாகிஸ்தான் உருவான பிறகே சுதந்திரம் என்பதில் ஜின்னா உறுதியாக நிற்க, சுதந்திரமே முன்னுரிமை என்றார் காந்தி.
 • 1946இல் இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த பிரிட்டனால் அனுப்பப்பட்ட அமைச்சர்களின் தூதுக்குழுவில் இருந்து விலகிய முஸ்லிம் லீக், போராட்டங்களை தொடங்கியது. அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கலகங்கள் ஏற்பட்டன.
 • கலகங்கள் வன்முறையாக உருவெடுத்து 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 இருந்து 18க்கு இடைப்பட்ட காலத்திற்குள் கலவரப் படுகொலைகளாக மாறின. 'கொல்கத்தா பெருங்கொலைகள்' (Great Calcutta Killings) என்று சரித்திரத்தில் பதிந்துவிட்டன. இதில் கிட்டத்தட்ட நான்காயிரம் மக்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர், சுமார் ஒரு லட்சம் மக்கள் வீடுகளை இழந்தனர். இந்த கலவரங்கள் கிழக்கு வங்காளத்தின் நவகாளி மாவட்டத்தில் இருந்து பிஹார் வரை பரவியது.
 • ஜனவரி 29இல் முஸ்லிம் லீக் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையை புறக்கணிப்பதாக அறிவித்தது, பிப்ரவரி மாதத்தில் பஞ்சாபிலும் வகுப்புவாத வன்முறைகள் தொடங்கின.
 • 1948 ஜூன் மாதத்திற்குள் இந்தியாவை விட்டு பிரிட்டன் வெளியேறுவதாக பிரிட்டன் பிரதமமந்திரி க்ளேமெண்ட் எட்லி அறிவித்தார். லார்ட் மவுண்ட்பேட்டன், வைஸ்ராயாக பதவியில் இருப்பார் என்றும் அறிவிப்பு வெளியானது.
இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இருந்து விலகிய முஸ்லிம் லீக், போராட்டங்களை தொடங்கியது
 • மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று லார்ட் மவுண்ட்பேட்டன் வைஸ்ராயாகவும், இந்திய கவர்னர் ஜெனரலாகவும் பதவியேற்றார்.
 • ஏப்ரல் 15 ஆம் தேதியன்று, பொதுமக்கள் அமைதி காக்கவேண்டும், வன்முறையை கைவிடவேண்டும் என்று காந்தியும் ஜின்னாவும் கோரிக்கை வைத்தனர்.
 • ஜூன் இரண்டாம் தேதியன்று, பிரிவினை திட்டத்தை மவுண்ட்பேட்டன், இந்தியத் தலைவர்களிடம் முன்வைத்தார். அடுத்த நாள், நேரு, ஜின்னா மற்றும் சீக்கிய சமுதாய பிரதிநிதி பல்தேவ் சிங் ஆகியோர் ஆல் இந்திய ரேடியோவில் பிரிவினைத் திட்டம் பற்றி நாட்டு மக்களிடம் எடுத்துரைத்தனர்.
 • இறுதியில் பாகிஸ்தான் என்ற புதிய நாடு 1947 ஆகஸ்ட் 14இல் பிறந்தது.
பாகிஸ்தான் என்ற புதிய நாடு 1947 ஆகஸ்ட் 14இல் பிறந்தது
 • 1947, ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையே அதிகார பரிமாற்றம் நிகழ்ந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திர காற்றை சுவாசித்தது.
 • ஏறக்குறைய ஒன்றேகால் கோடி மக்கள், நாடு, வீடு, வசிப்பிடம், சொத்துக்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 5 முதல் 10 லட்சம் மக்கள் வன்முறைகளில் இறந்திருக்கலாம் என்று கணிப்புகள் கூறுகின்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். சரித்திரத்தின் பக்கங்களில் இதுபோன்ற கொடூரமான, சோகமான நிகழ்வுகள் வேறு எதுவும் இருக்கமுடியாது.
 • பிரிவினை, ஒரு புதிய நாட்டை மட்டும் உருவாக்கவில்லை, வன்முறை எழுப்பிய கொடூர நினைவுகள், கோபத்தையும் கையறுநிலையையும் ஏற்படுத்தியது. இரு நாடுகளுக்கு இடையில் எழுப்பப்பட்ட எல்லைக்கோடு, மக்களிடையே ஆறாத் துயரத்தின் நினைவலைகளை எழுப்பும் ஒரு அதிர்வலையாகவே இருக்கிறது. பிரிவினையின் மன வேதனைகளுக்கு மருந்திடுவது என்பது சாத்தியமானதில்லை. 
 • source: bbc.com/tamil

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.