Latest News

நீட் தேர்வு: மருத்துவராக வேண்டும் என்பதே அவளின் கனவு - சுபஸ்ரீயின் பெற்றோர் உருக்கம்

 

சுபஸ்ரீ

'நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வந்தது முதல், அவள் சற்று சோகமாகவே இருந்தாள். ஆனால், இப்படி ஒரு முடிவு எடுப்பாள் என நினைத்துக்கூட பார்க்கவில்லை' என்று கூறியவாறு கண்ணீர் வடிக்கிறார் சுபஸ்ரீயின் தாய் சுமதி.

கோவையைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, செவ்வாய்கிழமை இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை செய்துள்ளார் என காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீட் நுழைவுத் தேர்வு குறித்த தேசிய அளவிலான விவாதத்தில் சமீபத்திய பேசுபொருளாக சுபஸ்ரீயின் மரணம் மாறியுள்ளது. மற்றொருபுறம் தங்களது ஒரே மகளை இழந்த சோகத்தில் தவித்து வருகின்றனர் சுபஸ்ரீயின் பெற்றோர்.

கோவை நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் வாடகை வீட்டில் 19 வயது சுபஸ்ரீ, அவரது தந்தை ரவிச்சந்திரன் மற்றும் தாய் சுமதி வசித்து வந்துள்ளனர்.

சுபஸ்ரீ உயிரிழந்த பாதிப்பில் இருந்து வெளிவரமுடியாத துக்கத்தில் பிபிசியிடம் பேசத்துவங்கினார் ரவிச்சந்திரன்.

"நான் அரசு பணியில் இருப்பதால் பணியிடமாற்றம் வந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஊரிலும் 2 அல்லது 3 ஆண்டுகள்தான் இருக்க முடியும். கடந்த ஆண்டு நாமக்கல்லில் குடியிருந்தபோது, சுபஸ்ரீ பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி பாடப்பிரிவில் 500க்கு 412 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

கடுமையான பயிற்சிகள் செய்து நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். அப்போது, எனக்கு திருச்சிக்கு பணிமாற்றப்பட்டது. என்னால், சுபஸ்ரீயின் நீட் தேர்வு பயிற்சி பாதிக்க கூடாது என்பதற்காக, நான் மட்டும் திருச்சிக்கு சென்று வருவேன்.

தினமும் பேருந்தில் பயணித்து வேலைக்கு செல்வதால் உடல் வலி ஏற்படும். ஆனால், நான் அதை பொருட்படுத்திக் கொள்வதில்லை. எனது மகள் மருத்துவராகி என் முன் வந்து நிற்பாள் என்ற கனவு மட்டுமே, எல்லா வலிகளையும் பொறுத்துக்கொள்ள வைத்தது. ஆனால், எங்களைப் பற்றி நினைக்காமல் இந்த முடிவை எடுத்துவிட்டாள்" என கூறி முடித்ததும் அழத்தொடங்கிவிட்டார் சுபஸ்ரீயின் தந்தை ரவிச்சந்திரன்.

"சென்ற ஆண்டு நீட் தேர்வில் 720க்கு 451 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பொது மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்தது. ஆனால், எங்களிடம் அந்த அளவுக்கு பணமில்லை. அரசுப் பிரிவில் பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இருந்தும், அரசு மருத்துவ கல்லூரியில் பொது மருத்துவம் படிக்க வேண்டும் என உறுதியாக இருந்ததாள் மீண்டும் நீட் தேர்வுக்கு பயிற்சியை துவங்கினாள்"

"இரு மாதங்களுக்கு முன்னர், கோவைக்கு பணி மாறுதல் கிடைத்தது. நாமக்கல்லில் இருந்து கொண்டே நீட் தேர்வுக்கு தயாராகுமாறு நான் சுபஸ்ரீயிடம் கூறினேன்.

'ஏற்கனவே பயிற்சி பெற்று மதிப்பெண் எடுக்க முடியாத பயிற்சி மையத்தில், மீண்டும் சக மாணவர்களோடு சேர்ந்து படிப்பது மனஅழுத்தத்தை தரும்' என அவள் கூறியதால் குடும்பத்தோடு கோவைக்கு குடிபெயர்ந்தோம்.

கோவைக்கு வந்ததும் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து நீட் தேர்வுக்கு தயாரானாள். நேரத்தை வீணடிக்க மாட்டாள், எப்பொழுதும் படிப்பு மட்டுமே. ஒவ்வொரு ஊராக பயணிப்பதால் அவளுக்கென நிலையான நண்பர்கள் இல்லை, எங்களிடமும் அதிகம் பேச மாட்டாள்.

நீட் தேர்ச்சி மட்டுமே அவளது குறிக்கோளாக இருந்தது. அவளின் மனநலனையும் கவனித்திருந்தால் இன்று அவளை இழந்திருக்கமாட்டோம். கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள தனிமை, நீட் தேர்வு குறித்த பயம் இவைதான் எனது மகளை தற்கொலை முடிவுக்கு தள்ளியிருக்கும்" என்கிறார் இவர்.

நீட் தேர்வு தேவைதானா? என்ற கேள்விக்கு, அதன் அவசியம் குறித்து ஆராயும் மனநிலையில் நான் இப்போது இல்லை என பதிலளித்தார் ரவிச்சந்திரன்.

பயிற்சி மையங்களில் மதிப்பெண்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, மாணவர்களின் மனநலனில் பயிற்சியாளர்கள் காட்டுவதில்லை என அழுத்தமாக கூறுகிறார் சுபஸ்ரீயின் தாய் சுமதி.

"சுபஸ்ரீ, சிறுவயது முதலே நன்றாக படிப்பவள். மருத்துவராக வேண்டும் என்பதே அவளின் கனவு, அவளின் கனவை நிஜமாக்க எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தோம். ஆனால், அவளின் மனநலனை கவனிக்கத்தவறிவிட்டோம்" என பேசத்துவங்கியதும் கண்கலங்கிவிட்டார் சுமதி.

அடக்கமுடியாத அழுகைக்குப் பின்னர் நிதானமாக மீண்டும் பேசத்தொடங்கினார், "நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களில் மதிப்பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எப்படியாவது தேர்வில் தேர்ச்சி அடையவேண்டும் என்பது மட்டுமே மாணவர்களின் குறிக்கோளாக முன்வைக்கப்படுகிறது. இதனால், தேர்வில் தோல்வியடைந்தால் வாழ்க்கை முடிந்துவிடும் என பலரும் நினைத்துக்கொள்கின்றனர். அப்படிதான் எனது மகளும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறாள். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்து அறிவிக்கப்பட்ட நாள் முதல், அவள் சோகமாகவே இருந்தாள். சென்ற ஆண்டு கிடைத்த மதிப்பெண் கூட இந்த ஆண்டு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் அவளிடம் இருந்துள்ளது. அதனால், தான் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்."

"மனஅழுத்தத்தால், தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவர்களில் கடைசியானவளாக சுபஸ்ரீ இருக்கட்டும். இனிமேல், அனைத்து பயிற்சி மையங்களிலும், மனதளவில் வலிமையில்லாமல் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு அரசும் முக்கியத்துவம் அளித்து கண்காணிக்க வேண்டும்" என கோரிக்கை வைக்கிறார் சுபஸ்ரீயின் தாய்.

மூத்த மனநல மருத்துவர் வெள்ளைச்சாமி

மனஅழுத்த மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் தான் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதாக கூறுகிறார், மூத்த மன நல மருத்துவர் வெள்ளைச்சாமி.

"குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளும், மதிப்பெண்களும் மட்டுமே எதிர்காலத்தை சிறப்பானதாக்கும் என மாணவர்கள் பலர் நினைத்துக்கொள்கின்றனர். அது அவர்களுக்கு கிடைக்காதபோதோ, கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இந்த நிலையை மாற்ற, அனைத்து பாடப்பிரிவுகள் பற்றியும், அதில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். நினைத்த விஷயம் கிடைக்காத போதும் வாய்ப்புகளை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் ஆலோசனைகள் வழங்கவேண்டும். கல்வி நிறுவனங்களிலும், நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களிலும் மனநலம் சார்ந்த தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். அதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் மனநிலையை ஆராய்ந்து ஆலோசனைகள் வழங்கிட வேண்டும்.

தங்களது குழந்தை தனிமையை விரும்பும்போது, சோகமாக இருக்கும்போது, வெறுப்பாக பேசும்போது பெற்றோர்கள் அவர்களோடு அமர்ந்து கனிவாக பேசி நம்பிக்கை கொடுக்க வேண்டும். மனஅழுத்த மேலாண்மை குறித்து மாணவர்களும், பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் அறியாமல் இருப்பதால் தான் இதுபோன்ற தற்கொலை மரணங்கள் நிகழ்கிறது" என்கிறார் மருத்துவர்.

source: bbc.com/tamil

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.