Latest News

இலங்கை தேர்தல் முடிவுகளும் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவமும்

(இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருப்பவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்)

சுதந்திர இலங்கையின் 15ஆவது நாடாளுமன்றத்தை நிறுவுவதற்காக ஆகஸ்ட் 5ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் தேசிய ரீதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண 145 இடங்களுடன் வெற்றி ஈட்டியுள்ளது.

இதன்மூலம் தமக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ள மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு மிக இலகுவாகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் பொதுஜன பெரமுண ஆட்சியமைக்கவுள்ளது.

பொதுஜனப் பெரமுணவை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது 54 ஆசனங்களையே பெற்று, தமது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளது. நாட்டை ஆளும் கனவுடன் போட்டியிட்ட இக்கட்சியால் இதன்மூலம் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையே எட்டிப் பிடிக்க முடிந்துள்ளது.

இந்த நாட்டை பல தசாப்தங்களாக ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கிட்டத்தட்ட இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள போதும், முன்னாள் பிரதமர் ஒருவர் உள்பட 65க்கு மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் தோல்வியைத் தழுவியமை என இத்தேர்தலில் வேறுபல வினோதங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

முக்கிய தேர்தல்

சிறுபான்மை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இது மிகவும் முக்கியமானதொரு தேர்தலாகும். அநேகமாக பொதுஜன பெரமுணவே ஆட்சியமைக்கும் என்பது முன்னமே உணரப்பட்ட நிலையில், தேர்தலுக்குப் பின்னர் அரசியலமைப்பில் திருத்தம் மற்றும் தேர்தல் முறைமையில் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திருத்தங்களை மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.

அவ்வாறு நடைபெற்றால் சிறுபான்மையினருக்கு ஒரு காப்பீடாக கருதப்படும் இப்போதிருக்கின்ற விகிதாசாரத் தேர்தல் முறைமையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற நிலையும் இருந்தது. எனவே சிறுபான்மை மக்கள் தங்களது பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் இருந்தது.

குறிப்பாக, கடந்த ஆட்சியில் 21 நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருந்த முஸ்லிம்கள் இந்த முறையும் தமது இன விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற நிலைப்பாடும் முஸ்லிம் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவுக்குப் பின்னரான 20 வருடங்களில் முஸ்லிம் அரசியல் என்பது முஸ்லிம்களுக்கான அரசியலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு தவறி விட்டது. அது சமூகத்தை அன்றி, தலைவர்களையும், அரசியல்வாதிகளையும் மையப்படுத்திய, அவர்களின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கின்ற ஒரு கலையாக மாற்றப்பட்டிருக்கின்றது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுண்டு.

எனவே இம்முறை எண்ணிக்கை அடிப்படையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது மாத்திரமல்லாமல், அவ்வாறு தெரிவு செய்யப்படும் முஸ்லிம் எம்.பி.க்கள் தகுதி வாய்ந்தவர்களாக, சமூக சிந்தனையுள்ளவர்களாக, மக்களை ஏமாற்றாதவர்களாக இருக்க வேண்டும் என்ற அழுத்தங்களும் சிவில் சமூகத்தில் இருந்து முன்வைக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது. நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற 'சவால்களுக்கு' முகம் கொடுப்பதற்கு இது இன்றியமையாததும் ஆகும்.

கிழக்கின் வாய்ப்பு

இந்தப் பின்னணியிலேயே, கொவிட்-19 வைரஸ் பரவலுக்குப் பின்னர் தென்னாசிய நாடொன்றில் இடம்பெற்ற இந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டனர். முஸ்லிம்களைப் போலவே பல கேள்விகள், மனக் குழப்பங்களுடனேயே தமிழ் மக்களும் ஆகஸ்ட் 5 வாக்கெடுப்பிற்கு முகம் கொடுத்தனர் என்பது வேறுகதை.

இலங்கையில் இரண்டாவது சிறுபான்மையினமாக வாழும் முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பங்கினர் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழ்கின்றனர். எனவே இவ்வாறு தென்னிலங்கையில் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்களின் தொகை அதிகம் என்றாலும் அவர்கள் முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிக்கும் கோஷத்தை ஒரு தேர்தலிலும் தூக்கிப்பிடிக்க முடியாது என்பதே யதார்த்தமாகும்.

எனவே, மூன்றில் ஒரு பங்கான முஸ்லிம்கள் செறிவாக வாழும் இடமான கிழக்கு முஸ்லிம் வாக்காளர்களுக்கு இதுவிடயத்தில் கூடிய வாய்ப்பும் பொறுப்பும் இருந்தது எனலாம்.

இம்முறை நாடு முழுவதும் 16 இலட்சத்திற்கு அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தார்கள். கிழக்கில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்குகள் செறிவாகக் காணப்படுவதுடன் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தக் கூடிய பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை, மூதூர் தொகுதிகளும் காணப்படுகின்றன. இதனாலேயே முஸ்லிம் அரசியல்வாதிகளின் 'பசுமையான மேய்ச்சல் நிலம்' என்று கிழக்கு வர்ணிக்கப்படுகின்றது.

முஸ்லிம் வேட்பாளர்கள்

இந்தப் பின்னணியில் கிழக்கை மட்டும் எடுத்துக் கொண்டால் போனஸ் ஆசனம் (சீட்) உள்ளடங்கலாக 7 ஆசனங்களைக் கொண்ட திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

முன்னாள் அமைச்சர் ஏ,எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் பொதுஜன பெரமுணவுடன் இணைந்து மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசித் தருணத்தி;ல் வேட்பாளர் இடஒதுக்கீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டால் அக்கட்சி தனது கன்னி நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் தனித்து களமிறங்கியது. தே.கா. கட்சி மட்டக்களப்பில் போட்டியிடவில்லை என்பதுடன் திருமலையில் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

5 ஆசனங்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. மக்கள் காங்கிரஸ் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இதேவேளை முன்னாள் அமைச்சர் சேகுதாவூத் பசீரை தவிசாளராகக் (சேர்மன்/தலைவர்) கொண்ட ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எனும் கட்சி போட்டியிட்டது.

திருமலை மாவட்டத்தின் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 4 ஆகும். இத்தேர்தலில் இங்கு இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசிச் சின்னத்திலேயே தமது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.

கிழக்கில் அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் பற்றிய கடுமையான அதிருப்தி நிலவிய போதும், தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தின் காரணமாக இம்முறை முஸ்லிம் பிரதேசங்களில் சரசாசரியாக 70 சதவீதத்திற்கும் குறைவில்லாத வாக்களிப்பு இடம்பெற்றிருக்கின்றது.

தேர்தல் முடிவுகள்

வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி முன்னாள் முஸ்லிம் எம்.பி.க்கள் 8 பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர். ஆனால், 3 பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் 16 முஸ்லிம் வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இதுதவிர பொதுஜன பெரமுணவின் தேசியப் பட்டியல் முன்மொழிவில் 3 முஸ்லிம்களின் பெயர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் 6 பேரின் பெயர்களும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தன. இப்போது பொதுஜன பெரமுண ஊடாக 3 முஸ்லிம்களின் பெயர்கள் தேசியப்பட்டியல் எம்.பி-க்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக இரு கட்சிகள் ஊடாகவும் 4 அல்லது 5 முஸ்லிம்களுக்கு தேசியப்பட்டியல் உறுப்புரிமை கிடைக்கலாம்.

இத்தேர்தலில் கட்சித் தலைவர்களான றவூப் ஹக்கீம் (கண்டியில்) மற்றும் றிசாட் பதியுதீன் (வன்னியில்) வெற்றிபெற்றுள்ள சமகாலத்தில் கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் கட்சித் தலைவரான ஏ.எல்.எம்.அதாவுல்லா திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார்.

குறிப்பிடத்தக்க அபிவிருத்திசார் சேவைகளைச் செய்தவரான அதாவுல்லா கடந்த 2015 தேர்தலில் எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக தோல்வியைத் தழுவியிருந்தார். அவர் இம்முறை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை மிக முக்கியமான விடயமாகும்.

புதிய எம்.பிக்கள்

இதேவேளை, கிழக்கின் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மு.கா. சார்பில் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிட்ட எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹ்றூப் ஆகியோர் முஸ்லிம் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் எம்.பி.அப்துல்லா மஹ்ரூப் தோல்வியடைந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரம் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் நஸீர் அகமட் மாத்திரமே முஸ்லிம் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதே கட்சியில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி. அலிசாஹிர் மௌலானா மற்றும் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிட்ட, மக்கள் காங்கிரஸ் சார்பு வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அமீரலி ஆகியோர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

முன்னாள் ஆளுனரும் அபிவிருத்தி அரசியலில் மிக முக்கிய இருவரில் ஒருவராகவும் கருதப்படும் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இம்முறையும் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களிடத்தில் ஒருவித மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்.

அதிக முஸ்லிம் பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய வாய்ப்புக்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் அதாவுல்லாவுக்கு மேலதிகமாக ஐக்கிய மக்கள் சக்தியில் மு.கா நிறுத்திய வேட்பாளர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். தனித்து மயில் சின்னத்தில் முதன்முதலாக களமிறங்கிய ஊடகவியலாளர் எம்.முஷாரப் வெற்றி பெற்றிருக்கின்றார்.

இம்மாவட்டத்தில் முன்னாள் எம்.பிக்களாள எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நஸீர், எஸ்.எம்.இஸ்மாயில் போன்றோர் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.

எண்ணிக்கையில் குறைவு

கடந்த நாடாளுமன்றத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் 11 பேர் அங்கம் வகித்தனர். இதில் தேசியப் பட்டியல் உறுப்பினராக பதவி வகித்த ஹிஸ்புல்லாவும் உள்ளடங்குவார். இந்த முறை இந்த எண்ணிக்கை 7ஆக குறைந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கின்ற 7 தேசியப்பட்டியல் உறுப்பினர்களில் 2 உறுப்பினர்கள் இரு முஸ்லிம் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு, எதிர்காலத்தில் சுழற்சி முறையில் அவை இரண்டும் கிழக்கிற்கு வழங்கப்பட்டாலும் இந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது என்பது கவனிப்பிற்குரியது.

நாட்டில் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற 16 முஸ்லிம் எம்.பி.க்களில் 7 பேர் கிழக்கில் இருந்து தெரிவாகியுள்ளமை கிழக்கு முஸ்லிம்கள் தமது பொறுப்பை ஓரளவுக்கேனும் நிறைவேற்றியுள்ளனர் என எடுத்துக் கொண்டாலும், கிழக்கிற்கு தலைமைத்துவம் வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்று வரும் சூழ்நிலையில், பிரிந்துநின்று அரசியல் செய்யும் வியூகங்களால் இன்னும் உறுப்பினர்களை தெரிவதற்கான வாய்ப்புக்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.

எது எவ்வாறிருப்பினும், பொதுஜன பெரமுண மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பல 'நகர்வுகளை' செய்வதற்கு திட்டமிட்டிருக்கின்ற இந்த நாடாளுமன்றத்திற்கு, தெரிவு செய்யப்பட்டிருக்கிற மற்றும் தேசியப்பட்டியல் மூலம் வரவுள்ள முஸ்லிம் எம்.பி.க்கள் அனைவரும் தமது பதவியின் கனதியும், தாத்பரியமும் உணர்ந்து செயற்படுவார்கள் என்று நம்புவதைத் தவிர முஸ்லிம்களுக்கு இப்போது வேறு தெரிவுகள் இல்லை. 

source: bbc.com/tamil

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.