Latest News

அயோத்தி பாபர் மசூதி இடிப்பின் 4 முக்கிய இந்துத்துவ முகங்கள் - அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வினய் கட்யார், அசோக் சிங்கால்

மீண்டும் ஒரு முறை முதுபெரும் பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி மீது மக்களின் பார்வை திரும்பி இருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் ஒரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வினய் கட்யார் மற்றும் பிற இந்துத்வா தலைவர்கள் மீது இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாபர் மசூதி 1992 டிசம்பர் 6ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

அத்வானி - மோதியின் முன்னோடி

2000வது ஆண்டுக்குப் பிந்தைய தலைமுறையினருக்கு தங்கள் பெற்றோரின் காலத்தில் அத்வானி எப்படிப்பட்ட அடையாளபூர்வமான தலைவராக, எப்படிப்பட்ட அந்தஸ்தில் இருந்தார் என்று தெரிந்திருக்காது. புதிய வழியை உருவாக்கி வழிநடத்திச் செல்லும் தலைவராக இருந்தவர் அவர். பிரசாரங்களின்போது வகுப்புவாத வன்முறைகள் நிகழ்ந்து, ரத்தத் தடங்கள் உருவாகிய நிலையில், ஆட்சி அதிகாரத்துக்கு பாஜக வருவதற்கான பாதையை வகுத்து வழிநடத்தியவர்.

பல தலைமைகளைக் கொண்ட இந்துத்வாவில் யாருக்கு உச்சபட்ச அந்தஸ்து என்ற கேள்வி குறித்து, பிற்கால வரலாற்றாளர்கள் விவாதிக்க வேண்டிய அவசியமே கிடையாது. இயல்பாகவே எல்லோருடைய தேர்வாக இருந்தவர் நரேந்திர மோதி. ஆனால், மோதியின் முன்னோடியாக இருந்த லால் கிருஷ்ண அத்வானி ரொம்பவும் குறைந்தவர் கிடையாது.

அத்வானியால் தொடங்கி நடத்தப்பட்ட ராமர் கோயில் இயக்கத்தில் கர சேவகராக இருந்த சாபீலி சரண் அயோத்தியில் சாமியாராக இருக்கிறார். ``ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக கடந்த நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது பரவசம் அடைந்து போனேன். மனதிற்குள் அத்வானி ஜி-க்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன். அவரைப் பின்தொடர்ந்த, முகம் தெரியாத லட்சக்கணக்கான கரசேவகர்களில் நானும் ஒருவன். ராமர் கோயில் உருவாகக் காரணமாக இருந்தவர் அத்வானிஜி. அதை முடித்துக் கொடுத்தவர் மோதிஜி,'' என்று அவர் கூறினார்.

ராமரின் தீவிர பக்தரான அவர் மற்ற ஆதரவாளர்கள் மத்தியில் ஒத்திசைவைக் காண்பதாகக் கருதுகிறார்.

திட்டமிட்டபடி 2024ல் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும் போது, 1990ல் எல்.கே. அத்வானி தொடங்கிய ராமர் கோயில் இயக்கம் முழுமை பெறும்.

அரசியல் தலைவராக உருவெடுப்பதற்கு முன்பிருந்தே அத்வானியை அறிந்த முதுபெரும் பத்திரிகையாளரும், கட்டுரையாளருமான பங்கஜ் வோரா, குதுப்மினார் ஒப்புமையைக் கூறுகிறார்.

``அதற்கு அடிக்கல் நாட்டியது அல்ட்மாஷ் என்பவரா அல்லது குத்புதீன் ஐசக்கா, யார் அதை கட்டி முடித்தது? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக ராமர் கோயில் கட்டுமானம் தொடங்கியது. நம்பிக்கைகள் சம்பந்தமான விஷயங்களை நியாயப்படுத்த முடியாது என்பது அத்வானியின் நிலைப்பாடு. இப்போது இதை அவர் வரவேற்றாலும்கூட, இந்த விஷயம் நீதிமன்றத்துக்கும் போகும் அளவுக்கு விட்டுவிட்டதில் அதிருப்தி இருக்கிறது. உலை கொதித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அத்வானியின் இழுத்தடிப்பால் பயன்பெற்றிருப்பவர் மோதி. அவர் தொடர்ந்து கோயில் விஷயத்திற்கு ஆதரவு கொடுத்து வந்தார். அவர் அதிகாரத்தில் இருப்பதால் அதன் பெயரை அவரே எடுத்துக் கொள்கிறார்,'' என்று அவர் கூறினார்.

1992ல் கரசேவகர்கள் மத்தியில் தம்மை இணைத்துக் கொண்ட மூத்த பத்திரிகையாளரும், இந்தியாவில் அத்வானியிண் தாக்கம் பற்றி கூர்ந்து கவனித்து வருபவருமான மூத்த பத்திரிகையாளர் சஞ்சய் காவ் வேறு மாதிரி கூறுகிறார். தனிப்பட்ட முறையில் "அத்வானியின் அரசியலை ஒருபோதும் பிடிக்காது'' என்றாலும், ராமர் கோயிலுக்கான முழு பெயரும் அத்வானிக்குத்தான் போக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

``அத்வானி தான் அயோத்தி என்ற உணர்வைத் தூண்டியவர். எனவே ராமர் கோயிலுக்கான பெயர் அவருக்குத்தான் போக வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. 1990களில் அவருடைய தலைமையின் கீழ் பாஜக அபாரமான வளர்ச்சி கண்டது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

1980ல் தொடங்கப்பட்டதில் இருந்தே அடல் பிகாரி வாஜ்பாயி தலைமையில் பாஜக ஒருபோதும் இயங்கியது கிடையாது. கராச்சியில் பிறந்து வளர்ந்த அத்வானி, கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவர். மக்களை ஒருமுகப்படுத்தும் திறன், முஸ்லிம் விரோத மற்றும் தீவிர இந்துத்வா அரசியல் மூலம் தேசிய அளவில் பெரிய அளவில் வேகமாக வளர்ந்தவர் அவர்.

குஜராத் மாநிலம் சோம்நாத்தில் தொடங்கி பிகாரில் சமஸ்டிபுர் வரையில் மேற்கொண்ட பத்தாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கான ராமர் ரத யாத்திரை பயணம் முழுக்க "கோயிலை அங்கு கட்டுங்கள்" என்ற கோஷத்தை அத்வானி முன்வைத்தார். 1990 செப்டம்பர் - அக்டோபரில் பிகாரில் யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

அத்வானி கைது செய்யப்பட்டதை அடுத்து ரத யாத்திரை நிறுத்தப்பட்டு, கூட்டம் கலைந்து போனது. ஆனால் சுதந்திர இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெரிய இயக்கத்தை உருவாக்கி, உணர்வுகளைத் தூண்டுவதாக அமைந்தது. அவருடைய உரைகள் ராமருக்குக் கோவில் கட்டுவதை வலியுறுத்துவதாகவும், அதுவும் பாபர் மசூதி உள்ள அதே இடத்தில் கோவிலைக் கட்ட வேண்டும் என்பதாகவும் இருந்தன.

``ராமர் பெயரில் நாங்கள் கோயில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது, ராமர் பிறந்த அதே இடத்தில் கோயில் கட்டப்படும்'' என்று அவர் பேசினார்.

நம்பிக்கை சார்ந்த விஷயத்தை முடிவு செய்வதில் நீதிமன்றத்திற்கு என்ன பங்கு உள்ளது என்று அவர் கேள்வி எழுப்பினார். பாபர் மசூதி உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று இந்து நம்பிக்கையாளர்களுக்கு உள்ள நம்பிக்கை குறித்த விஷயத்தில் அரசு எப்படி தலையிடலாம் என்றும் அவர் கேட்டார். ``எங்களை யார் தடுக்க முடியும்? எந்த அரசு தடுக்க முடியும்?'' என்று கூறினார்.

அப்போதைய பிரதமர் வி.பி. சிங் தலைமையில் சாதி அரசியல் நடப்பதாகவும் ரத யாத்திரையின் போது பேசப்பட்டது. ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக மண்டல் கமிஷன் அறிக்கையை வி.பி.சிங் அரசு அமல் செய்துவிட்டது என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

``சோம்நாத்தில் இருந்து அயோத்தி வரையிலான அத்வானியின் ரத யாத்திரைக்கு ஆர்.எஸ்.எஸ். ஒப்புதல் கிடையாது. ஆனால் வி.பி.சிங் ஆட்சியில் மண்டல் கமிஷன் அறிக்கை அமல் செய்யப்பட்டதால் எழுந்த சாதிய அரசியலை எதிர்த்து இந்த ரத யாத்திரையை அவர் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார்'' என்று பங்கஜ் வோரா கூறினார்.

அத்வானி முன்னெடுத்துச் சென்ற, தீவிரமான இந்துத்வா அரசியல் நல்ல பலனைக் கொடுத்தது. 1996 தேர்தலில் 161 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. 1984 தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற கட்சிக்கு அது மிகப் பெரிய முன்னேற்றமாக அமைந்தது. ஆனால் இவர் பிரபலமாக இருந்தார் என்றாலும், முதலாவது பாஜக அரசு அடல் பிகாரி வாஜ்பாயி தலைமையில் பதவியேற்றது. பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாததால் அது 13 நாட்கள் மட்டுமே பதவியில் நீடித்தது.

2007ஆம் ஆண்டில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அத்வானியுடன் பிரதமர் மோதி

அத்வானியின் அரசியல் சரிவு மெல்ல மெல்ல நடந்தது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் ஆரம்பம் 2005ல் உருவானது என்கிறார்கள். அப்போது ஜூன் மாதத்தில் கராச்சி சென்ற அத்வானி, ஜின்னாவை மதசார்பற்ற தலைவர் என்று குறிப்பிட்டார். பிறகு நவம்பரில் மும்பையில் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.

ஜின்னா பற்றிய அவரது கருத்தால் அரசியலில் சர்ச்சைகள் உருவாயின. தீவிர இந்துத்வா தலைவராக இருப்பவர், எதிரியின் நாட்டிற்குச் சென்றதும் மென்மையான இந்துவாக மாறிவிட்டார் என்று விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அத்வானி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவே இல்லை.

``பாகிஸ்தானில் நான் பேசிய அல்லது செய்த எவற்றுக்காகவும் வருத்தப்படவில்லை. நான் முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்திற்கு அது உண்மையில் பங்களிப்பு செய்திருக்கிறது என்றுதான் கருதுகிறேன். என் இந்துத்வம் பற்றி நான் பெருமை கொள்கிறேன். நான் முஸ்லிம்களுக்கு எதிரானவன் கிடையாது, நான் இஸ்லாத்துக்கு எதிரானவன் கிடையாது, நான் பாகிஸ்தானுக்கு எதிரானவன் கிடையாது. என் பணியை நான் செய்துவிட்டேன், என்னுடைய சித்தாந்தத்திற்கு ஆற்ற வேண்டிய சேவையை ஆற்றிவிட்டேன் என்றே நான் நினைக்கிறேன்'' என்று பாகிஸ்தான் பயணத்திற்கு ஆறு மாதங்கள் கழித்து, சஞ்சிகை ஒன்றின் மூத்த ஆசிரியரிடம் அத்வானி கூறியுள்ளார்.

கட்சி தொடங்கப்டட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் 2005ல் மும்பையில் நடந்தபோது இந்தச் செய்தியாளர் செய்தி சேகரித்தார். கட்சியின் பிரபலமான தலைவர்களில் ஒருவராக இருந்த பிரமோத் மகாஜன் அதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அத்வானி தன் கையில் இருந்து பேட்டனை ராஜ்நாத் சிங்கிடம் வழங்கினார். இப்போது ராஜ்நாத் சிங் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கிறார். ``இது ஒரு புதிய தொடக்கம். நாங்கள் 2004 தேர்தலில் தோற்றுவிட்டோம். 138 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றோம். இளம் தலைமையை ஆதாரமாக வைத்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதே என்னுடைய பணி'' என்று புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்த ராஜ்நாத் சிங், இந்த செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

தன்னுடைய செல்வாக்கு மிகுந்த காலத்திலும் கூட அத்வானியின் நிலைமை உறுதியானதாக இல்லை. ரத யாத்திரை முடிந்து சில மாதங்கள் இடைவெளியில் 1991ல் நடந்த தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் அத்வானி போட்டியிட்டார். பாலிவுட் நட்சத்திரமான ராஜேஷ் கன்னா காங்கிரஸ் வேட்பாளராக அங்கு நிறுத்தப்பட்டார். அரசியலைப் பற்றி எதுவுமே தெரியாத அவர், அத்வானிக்கு மிகுந்த நெருக்கடியை உருவாக்கிவிட்டார். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் அவர் தோற்றார். அத்வானியின் வெற்றி உறுதி செய்யப்பட்டதாக இல்லை. இரு வேட்பாளர்களின் பிரச்சாரத்திலும் இந்த செய்தியாளர் செய்தி சேகரித்துள்ளார். கன்னாவுக்கு அதிக கூட்டம் வந்ததை இவர் கவனித்துள்ளார்.

2004-2009ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது எதிர்க்கட்சித் தலைவராக அத்வானி இருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சவால்களை உருவாக்க அவர் தவறிவிட்டார். அவருடைய தலைமையில் 2009 தேர்தலை சந்தித்த போதும் கட்சி தோல்வி அடைந்தது. 2012 ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி, மத்திய அரசை குறிவைத்து முன்னேறிக் கொண்டிருந்த காலக் கட்டம். பாஜக தேர்தல் பிரசாரத்தின் தலைவராக 2013 ஜூன் மாதம் மோதி நியமிக்கப்பட்டார். அடுத்து என்ன நடக்கும் என்பதை அத்வானி கணித்து, தன் பதவியை ராஜிநாமா செய்தார்.

``கட்சியின் இப்போதைய தலைவர்கள் தங்களுடைய சொந்த ஆதாயங்கள் பற்றி கவலைப்படுபவர்களாக இருக்கிறார்கள்'' என்று கூறினார். அது மோதி மீதான விமர்சனமாகக் கருதப்பட்டது. வற்புறுத்தலின் பேரில் ராஜிநாமா முடிவை அத்வானி வாபஸ் பெற்றார். ஆனால் அவரை மிஞ்சியவராக முன்னேறினார் மோதி.

2014 தேர்தலில் அபாரமான வெற்றிக்கு கட்சியை அழைத்துச் சென்றார் மோதி. அதனால் அரசியல் சன்னியாசத்தை நோக்கி மேலும் தள்ளப்பட்டார் அத்வானி.

ராமர் கோயில் இயக்கத்தின் அடையாளமாக இருந்த இந்தத் தலைவரை ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடந்த ராமர் கோவில் பூஜையின் போது காண முடியவில்லை என்பது முரண்பாடான விஷயம். 1990களில் இந்திய அரசியலின் திசையை மாற்றி அமைத்தது தாம் தான் என்று அறிந்துள்ளதில் பாதுகாப்பாக உணர்கிறார் 93 வயதான மூத்த இந்திய அரசியல்வாதி அத்வானி.

நல்லதோ கெட்டதோ? தீர்ப்பு கூறுவோர் இன்னும் வெளியில் இருக்கிறார்கள்.

அசோக் சிங்கால் - 'அயோத்தி ராமல் கோயிலின் சிற்பி'

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக எல்.கே. அத்வானி ரத யாத்திரை தொடங்கியதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு விசுவ இந்து பரிஷத் (வி.எச்.பி.) ராமர் கோவில் இயக்கத்தைத் தொடங்கியது. அந்த அமைப்பின் செயல் தலைவராக இருந்த அசோக் சிங்கால், அந்த இயக்கத்தின் முதுகெலும்பாக இருந்தார். அந்த இயக்கமே சிங்காலின் மூளையில் உதித்ததுதான் என்று அயோத்தியில் உள்ள பல பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

சொல்லப்போனால், அதை அத்வானி அரசியல் பிரச்சனையாக மாற்றி, இந்துக்களை ஒன்று திரட்டினார். ஆனால் சிங்கால்தான் அதற்கு முன்னோடி. பொறியாளரான சிங்கால் 1984ல் `தர்ம சன்சாட்' நடத்தினார். அயோத்தி ராமர் கோயிலுக்கு சாமியார்கள் மற்றும் மடங்களின் தலைவர்களின் ஆதரவைத் திரட்டத் தொடங்கினார். அப்போது அவர் வி.எச்.பி.யின் பொதுச் செயலாளராக இருந்தார். விரைவிலேயே அவர் அந்த அமைப்பின் செயல் தலைவராக உயர்ந்தார். கோயிலுக்கான இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற முயற்சி மேற்கொண்டார். இவருடைய உச்ச செயல்பாடுகளைப் பார்த்திருக்கும் மூத்த பத்திரிகையாளரான மகேந்திர சர்மா, இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, பாஜகவுக்கும் இந்து மத குருமார்களுக்கும், மடங்களின் தலைவர்களுக்கும் இடையில் பாலமாக இருந்தது இவர்தான் என்று தெரிவித்தார். ``பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் விஷயத்தை சேர்க்க வேண்டும் என்று பாஜக தலைவர்களை சம்மதிக்க வைத்தவர்களில் ஒருவராக இவர் இருந்தார் என்பது நிச்சயமான உண்மை'' என்று அவர் கூறுகிறார்.

கோயிலுக்கு ஆதரவாக அரசியல் இயக்கத்தை அத்வானி நடத்தியபோது, சிங்கால் தலைமையில் கோவில் கட்டுமானத்துக்கான ஆயத்தங்களை வி.எச்.பி. மேற்கொண்டது. ``சிங்காலின் தொலைநோக்கு சிந்தனை காரணமாகத்தான் ``கோயில் கட்டுமானத்துக்கு சுமார் 30 ஆண்டுகளாக எங்களை நாங்கள் தயார்படுத்தி வைத்துக் கொள்ள முடிந்தது'' என்று வி.எச்.பி. செய்தித் தொடர்பாளர் ஷரத் ஷர்மா கடந்த நவம்பர் மாதம் அயோத்தியில் என்னிடம் கூறினார். வேலைப்பாடுகள் மிகுந்த கற்பலகைகளை ஆய்வு செய்வது, அயோத்தியில் கர்சேவக் புரம் வளாகத்தில் பரந்த நிலப்பரப்பில் அவற்றை தொகுப்புகளாகப் பிரித்து வைப்பது ஆகிய பணிகளை அவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். ``1990 செப்டம்பரில் கோவில் கட்டுமான வேலையை நாங்கள் தொடங்கியபோது, எங்கள் உழைப்புக்கு ஒரு நாள் பலன் கிடைக்கும் என்பதை அறிந்திருந்தோம். நாங்கள் சிங்கால் ஜி -க்கு நன்றி சொல்ல வேண்டும்'' என்று அவர் கூறினார்.

வி.எச்.பி. நிர்வகித்து வரும் ராம ஜென்ம பூமி நியாஸ் என்ற தனியார் டிரஸ்ட், கோவிலுக்குத் தேவையான கற்பலகைகள் மற்றும் தூண்களை வடிவமைத்து, உருவாக்கும் பணிகளை கடந்த 29 ஆண்டுகளாகச் செய்து வருகிறது. இதற்காக இந்த அமைப்பு அசோக் சிங்காலுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளது.

சிங்கால் தான் ராமர் கோயிலின் வடிவமைப்பை உருவாக்கியவர். அவர்தான் சிற்பி. ``அவருடைய கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது'' என்று ராமர் கோயில் இயக்கத்துடன் தொடர்புடைய முன்னாள் எம்.பி.யான ராம் விலாஸ் வேதாந்தி கடந்த நவம்பர் மாதம் என்னிடம் கூறினார்.

தனது 89வது வயதில் 2015ல் காலமான அசோக் சிங்கால், ராமர் கோயில் வரலாற்றில் தனது பெயர் பதிவு செய்யப்படுவதை கால காலத்துக்கும் உறுதி செய்துவிட்டார்.

தனிமைப்படுத்திக் கொண்ட முரளிமனோகர் ஜோஷி

எல்.கே. அத்வானி மற்றும் அட்டல் பிகாரி வாஜ்பாயி போல, முரளி மனோகர் ஜோஷியும் பாஜகவை உருவாக்கியவர்களில் ஒருவர். 34 ஆண்டுகள் கழித்து, இந்துத்துவாவின் புதிய பிராசார முகமான நரேந்திர மோதி தலைமையில் 2014 தேர்தலில் பாஜக பெரிய வெற்றி பெற்ற நிலையில், இநத மூவரும் புதிதாக உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அந்தக் குழுவில் பிரதமர் மோதி, ராஜ்நாத் சிங் ஆகியோரும் உண்டு. ஆனால் அதுதான் தங்களை அவமானப்படுத்தும் உச்சகட்ட செயல் என்று கட்சியின் நிறுவனர்கள் குழுவில் இருந்த அவர்கள் கருதினர். அதன் பிறகு, வழக்கமான அளவில் அவர்கள் மீண்டும் பொது வாழ்விற்கு வரவே இல்லை.

அத்வானியைப் போல ஜோஷியும் மௌனத்துக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். தங்கள் மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அப்படி விலகி இருந்து கொண்டார்கள் என அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

முனைவர் பட்டம் (இந்தி மொழியில்) பெற்றவரான முரளி மனோகர் ஜோஷி, கட்சியின் தலைவராக இருந்தபோதும், பிரதமர் வாஜ்பாயி தலைமையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோதும் நல்ல செல்வாக்கைப் பெற்றிருந்தார். 13 நாட்கள் மட்டும் நீடித்த வாஜ்பாயி தலைமையிலான முதலாவது ஆட்சிக் காலத்தில் இவர் உள்துறை அமைச்சராக இருந்தார்.

நவீன சாதனங்களை ஜோஷி விரும்புவது கிடையாது. அவர் செல்போன் வைத்துக் கொள்வதில்லை. அவரிடம் பேச வேண்டுமானால், சாதாரணமான வீட்டு தொலைபேசி எண்ணில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். ஆனால் ட்விட்டரில் பதிவு செய்து கொண்டுள்ளார். விழாக்கால நாட்களில் எப்போதாவது அவர் ட்விட்கள் பதிவிடுவார். நவீன பாஜகவின் தலைவர்கள் சிலர் இன்னும் அவருடைய ட்விட்டரை பார்க்கிறார்கள் என்பதை, இவருடைய ட்விட்டர் பதிவை கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.

இந்தச் செய்தியாளர் எண்ணற்ற தருணங்களில் ஜோஷியுடன் தொலைபேசி மூலம் பேசியிருக்கிறார். ஆனால் எல்லாமே `ஆஃப் தி ரெக்கார்டு.' (வெளியில் பகிருவதற்கான அனுமதி அற்றவை) . முறைப்படியான ஒரு நேர்காணலுக்கு அவர் ஒருபோதும் சம்மதிக்கவே இல்லை. இருந்தபோதிலும், பலதரப்பட்ட தலைப்புகளில் கலந்துரையாடல் இருக்கும். தீவிர அரசியலில் இருந்து அவர் விலகி இருக்கலாம். ஆனால் தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான அரசியல் விஷயங்கள் அனைத்தையும் அறிந்து வைத்துள்ளார். தன்னுடைய கூர்மையான கருத்தாக்கத்தை அவர் இன்னும் பராமரிக்கிறார். ``இன்றைய அரசாங்கம் தலைப்புச் செய்திகளால் நடத்தப்படுகிறது'' என்று எளிதாக சமரசம் செய்துவிட முடியாது. அரசியல் குறித்து சுருக்கமாகவும், நுட்பமாகவும் அவர் வெளியிடும் கருத்துகள், அவருக்குப் பிறகு வந்த தலைவர்களின் சொல்லாடலுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

சர்ச்சைக்குரிய கட்யார்

சர்ச்சைக்குரிய மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளைக் கூறுவதால் பிரபலம் அடைந்த வினய் கட்யார், இந்துத்வா தலைவர்களில் நிரந்தரம் இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார். பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள இவர், பஜ்ரங் தளம் (வி.எச்.பி.யின் இளைஞர் பிரிவு) அமைப்பை உருவாக்கியவர். அத்வானி, முரளிமனோகர் ஜோஷி மற்றும் புதிய பாஜகவின் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்ட 1990 காலத்தைய மற்ற இந்துத்வா தலைவர்களைப் போல, இவரும் ஓரங்கட்டப்பட்டவராகவே கருதப்படுகிறார்.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) -ல் இருந்து தனது அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் வினய் கட்யார். வணிகவியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். 1980 ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக ஆனார். நான்கு ஆண்டுகள் கழித்து ராம் ஜென்ம பூமி இயக்கத்துக்காக பஜ்ரங் தளம் அமைப்பை உருவாக்கினார்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி உடன் சேர்த்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வினய் கட்யார், 1991, 1996, 1999 ஆண்டுகளில் பைசாபாத் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இப்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.