
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் தெரு விளக்குகள் எரியாததால் கொள்ளையர்கள் நடமாட்டம் உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால் தெருவிளக்கு பராமரிப்புப் பணிகளைக் கோவை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்று சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சியில் உள்ள பகுதிகளில் உயர்மட்ட மின் கோபுர விளக்குகள், சாலையின் மையப்பகுதியில் உள்ள மின் கம்பங்கள், சாலையோரத் தெருவிளக்குக் கம்பங்கள் எனப் பல்வேறு வகையான தெருவிளக்குகள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 74.70 கோடி ரூபாய் செலவில் மாநகர் முழுவதும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எல்.இ.டி ஆக மாற்றப்படும் எனக் கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் பெரும்பாலான தெருவிளக்குகள் மாற்றப்படவில்லை. மின் சாதனப் பெட்டிகள் பல இடங்களில் திறந்து அபாயகரமான நிலைமையில் உள்ளன. குறிப்பாக, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி மற்றும் பீளமேடு பகுதிகளில் இந்தப் புகார் உள்ளது.
இதுகுறித்து சிங்காநல்லூர் எம்எல்ஏ கார்த்திக் கூறியதாவது:
''மாநகராட்சி அலுவலர்கள் பழுதான பல்புகளை மாற்றாமல், மாற்றியதுபோல் கணக்குக் காட்டியுள்ளர். புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பல இடங்களில் மின்கம்பங்கள் அமைக்கப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் சரியான முறையில் தெருவிளக்குகளைப் பராமரிக்காத காரணத்தால் முக்கியமான சாலைகள், தெருக்கள், காலனிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. ஒவ்வொரு வட்டத்திலும் சராசரியாக 150 தெருவிளக்குகள் முதல் 200 தெருவிளக்குகள் வரை எரியாமல் உள்ளன.
இதுவரை சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரிவதில்லை என்பது எங்கள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மாநகரில் சுமார் 3 ஆயிரம் மின்கம்பங்கள் சரி செய்யப்படாத நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. துருப்பிடித்தும், கான்கிரீட் சேதமடைந்தும் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் மீதும் விழுந்து விடும் வகையில் அபாயகரமான நிலைமையில் மின்கம்பங்கள் இருக்கின்றன. தெருவிளக்குகள் எரியாத காரணத்தால் இருளில் வழிப்பறி, கொள்ளைகள் நடைபெறுகின்றன.
கடந்த மாதம் கொள்ளையர்கள் சிலர் ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் பகுதியில் சுற்றி வந்தார்கள். இருட்டான பகுதியில் திருடர்கள் சுற்றுவதாகப் பொதுமக்கள் தகவல் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில இடங்களில் சாலை சீரமைப்புப் பணியின்போது அகற்றப்பட்ட மின்கம்பங்கள், மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்படவில்லை. இரவு 10 மணிக்கு மேல் நகரின் முக்கியப் பகுதியில்கூடத் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் திருடர்கள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாரம் ஒருமுறை தெருவிளக்கு பராமரிப்புப் பணிகள் ஒவ்வொரு வட்டத்திலும் நடைபெற வேண்டும். ஆனால், பராமரிப்புப் பணியாளர்களும், அதற்குண்டான வாகனங்களும் குறிப்பிட்ட நாளில் எந்த ஒரு வட்டங்களுக்கும் வருவதில்லை. திமுக ஆட்சியின்போது 3 மாதத்திற்கு ஒருமுறை மண்டலம் வாரியாகக் கோவை மாநகராட்சியில், தெருவிளக்கு பராமரிப்புப் பணிகள் கூட்டம் நடத்தப்பட்டு தெருவிளக்கு பராமரிப்புப் பணிகள் முறைப்படுத்தப்பட்டன. ஆனால், தற்பொழுது இந்தப் பணிகள் முறையாகப் பின்பற்றப்படாத காரணத்தால் கோவை மாநகரம் முழுவதும் இருளில் மூழ்கும் சூழல் உள்ளது.
ஆகவே, கோவை மாநகராட்சி நிர்வாகம், உடனடியாக தெருவிளக்கு பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு தெருவிளக்குகள் எரிவதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கோவை மாநகர் கிழக்கு மாவட்டத் திமுக சார்பில் பொதுமக்களுடன் இணைந்து மாபெரும் அறவழிப் போராட்டம் நடத்தப்படும்.''
இவ்வாறு கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்தார்.
No comments:
Post a Comment