
சமூக வலைதளமான டிவிட்டரில் #இந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக்கும் #திமுக_வேணாம்_போடா என்ற ஹேஷ்டேக்கும் மாறி மாறி டிரெண்டாகி இணையத்தில் ஒரு வார்த்தைப்போரே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் இந்தி திணிப்பு சர்ச்சை அவ்வப்போது தலைதூக்கும். சமீபத்தில் தேசியக் கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை தொடங்கி அடுத்தடுத்து இந்திக்கு எதிரான குரல்கள் வலுக்கத்தொடங்கியுள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு திமுக எம்.பி,கனிமொழியிடம் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றிய பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் "இந்தியாவில் இருந்துகொண்டு இந்தி தெரியாதா? நீங்கள் இந்தியர் தானா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் கனிமொழி. அதனை அடுத்து, அந்த அதிகாரியிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
கனிமொழியிடம் பாதுகாப்பு அதிகாரி அவ்வாறு கேட்ட கேள்விக்கு பின்னர் தொடங்கிய சர்ச்சை, பின்னர் ஆயுஷ் அமைச்சக கூட்ட விவகாரத்தில் இன்னும் சற்று பெரிதாகியது. ஆயுஷ் அமைச்சக கூட்டத்தில் பேசிய செயலாளர், இந்தி தெரியாதவர்கள் கூட்டத்தைவிட்டு வெளியேறலாம் என்று கூறிய சம்பவம் தென் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் தலைத்தோங்கியது.
அப்போதே இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த இணையவாசிகள், பின்னர் யுவன் சங்கர் ராஜா அணிந்த டி-சர்ட் புகைப்படத்தை வைரலாக்கினர். அதாவது, சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறன் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் சில மணி நேரம் காக்கவைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பலர் இந்திக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
இந்த நிலையில், பிரபல இசையமைப்பளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் சிரிஷ், 'I am a தமிழ் பேசும் இந்தியன்' மற்றும் 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகங்கள் அடங்கிய டி-சர்ட் அணிந்து அந்த புகைப்படத்தை தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அந்த புகைப்படம் வைரலாகி பின்னர் இணையவாசிகள் பலர் #இந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்யத்தொடங்கினர். மேலும், திமுக எம்.பி கனிமொழி யுவன் சங்கர் ராஜாவுக்கு பாராட்டு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
யுவன் சங்கர் ராஜாவின் பதிவை அடுத்து, பல பிரபலங்கள் இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டை அணிந்து சமூகவலதளங்களில் பதிவிடத்தொடங்கினர். அதுமட்டுமல்லாமல், பலர் அந்த டி-சர்ட் அணிந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் சமூகவலைதளப் பக்கங்களை நிரப்பினர். பொதுமக்கள் மட்டுமல்லாமல், இந்தி திணிப்புக்கு எதிரான அரசியலவாதிகள் பலர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்களது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தனர். #இந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக் மட்டுமல்லாமல், #TamilSpeakingIndian #HindiTheriyathuPoda #StopHindiImposition #Imaதமிழ்SpeakingIndian போன்ற ஹேஷ்டேக்குகளையும் டிவிட்டரில் டிரெண்ட் செய்தனர். அந்த வாசகத்தை வைத்து டி-சர்ட் மட்டுமல்லாமல், செல்போன் கவர்கள், மாஸ்க் போன்றவற்றையும் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர்.
இது ஒருபுறம் இருக்க, #திமுக_வேணாம்_போடா என்ற ஹேஷ்டேக்கை சிலர் டிவிட்டரில் டிரெண்டாக்கினர். இந்தி திணிப்புக்கு எதிரான கருத்துக்களை திமுகவினர் தான் அதிகப்படியாக பதிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் #திமுக_வேணாம்_போடா என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கிவருகின்றனர். பலர் இந்த வாசகம் அடங்கிய டி-சர்ட்டுகளையும் தயாரித்துள்ளனர். இன்னும் சிலரோ, "ஒரு உண்மையான தமிழர் தனது மொழியைப் பற்றி பெருமிதம் கொள்வார், ஆனால் வாக்கு வங்கிகளைப் பெறுவதற்காக தமிழ் மொழியுடன் அரசியல் செய்யும் திமுகவினரைப் போல அல்லாமல், பிற மொழிக்கும் சம முக்கியத்துவம் கொடுப்பார்." என்று பதிவிட்டுவருகின்றனர். இவ்வாறு டிவிட்டரில் இணையவாசிகள் வார்த்தைப் போரில் ஈடுபட்டுவருகின்ற நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜகவைச் சேர்ந்த வானதி ஸ்ரீநிவாசன்,
"டி-சர்ட் மூலம் தமிழை ஒருபோதும் வளர்த்தெடுக்க முடியாது. தமிழை வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள், 5ம் வகுப்பு வரை கட்டாயமாக தமிழகத்தில் தாய்மொழியில் தான் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்று சொன்னால் அதை நாங்கள் வரவேற்கின்றோம். ஏன் தமிழை ஒடுக்குகிறீர்கள்? உண்மையாகவே பள்ளிக்கூடத்தில் தமிழை சொல்லிக்கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்." என்று கூறியுள்ளார்.
அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலர் பல்வேறு விதமான கருத்துக்களை
பதிவிட்டுவருகின்ற நிலையில் இன்னும் சிலரோ, "ஒரு மொழியை கற்பதும்
கற்காததும் அவரவரது தனிப்பட்ட விஷயம். இதில் எந்த ஒரு திணிப்பும்
நடைபெறக்கூடாது. ஒரு மொழியை கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது" எனவும்
பதிவிட்டுவருகின்றனர். சாதாரணமான நாட்களில் டிவிட்டரில் வார்த்தைப் போரில்
ஈடுபடும் இணையவாசிகள், ஊரடங்கு நேரத்தில் அதிக நேரம் சமூகவலைதளங்களை
பயன்படுத்துவதில் செலவிடுவதால் இதுபோன்ற ஹேஷ்டேக்குகள் மிகவும் எளிதில்
இந்திய அளவில் டிரெண்டாகிவிடுகிறது என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment