
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மத்திய மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வகுத்துள்ள புதிய கல்விக்கொள்கை குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநில மொழிகளில் பட்டப்படிப்பு வழங்கவேண்டும் என்பதை ஏற்கனவே தமிழகம் நிறைவேற்றியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கை குறித்து விளக்கமளிக்க ஏழு வல்லுநர்கள் கொண்ட குழு தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் முதற்கட்டமாக இரு மொழி கொள்கை, தேசிய தேர்வு முகமை வாயிலாக நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளதாகக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
''2035ல் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் 50 சதவீதமாக இருக்கவேண்டும் என புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. ஆனால் தமிழகத்தில் 2019-20கல்வி ஆண்டில் மொத்த சேர்க்கை விகிதம் 49 சதவீதமாக உள்ளது. 2035ல் அந்த எண்ணிக்கை 65 சதவீதமாக உயருவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன. அதேபோல, உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்-மாணவர் விகிதம் தேசிய அளவில் 1:26ஆக உள்ளது. தற்போது தமிழகத்தில் அந்த விகிதம் 1:17ஆக உள்ளது,'' என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தேர்வு முகமை மூலம் நுழைவுத் தேர்வு நடத்துவதை தமிழக அரசு ஏற்கவில்லை என்றும் அந்த தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு மேலும் ஒரு சுமையாக இருக்கும் என்பதால் அதனை மாநில அரசு ஆதரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின்படி, மாநில மொழிகளில் பட்டப்படிப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது என்றும் தமிழகத்தில் தொடர்ந்து இருமொழி கொள்கை பின்பற்றப்படுவதால், மாநில மொழியில் பட்டப்படிப்பு வழங்கப்படுகின்றது என்றும் அந்த கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
source: bbc.com/tamil
No comments:
Post a Comment