Latest News

ஒரே தேசம் ஒரே சந்தை' கோஷம் மூலம் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவார்கள்: விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கண்டனம்

வர்த்தக நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து மலிவான விலையில் வாங்கி அவற்றின் குடோன்களில் பெருமளவில் இருப்பு வைத்துக்கொள்ள முடியும். இதன்மூலம் இந்த நிறுவனங்கள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அத்தியாவசியப் பொருட்களை அதிகக் கடுமையான விலையில் விற்று பெரும் லாபம் ஈட்ட முடியும் என்று விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் அகில இந்தியக் கமிட்டி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் அகில இந்தியக் கமிட்டி இன்று வெளியிட்ட அறிக்கை:

''நாடு முழுவதிலுமுள்ள விவசாயிகளின் நீண்டகால இரண்டு முக்கியக் கோரிக்கைகளான, 'கடனிலிருந்து விடுதலை மற்றும் விளைபொருட்கள் உற்பத்தி விலையை விட ஒன்றரை மடங்கு கட்டுப்படியான விலை' வேண்டும் என்பதை அலட்சியம் செய்து, மத்தியிலிருக்கும் பாஜக அரசாங்கமானது கடினமான கரோனா ஊரடங்கைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறது. ஜூன் மாதம் 5 ஆம் தேதியன்று விவசாயிகள் விரோத மூன்று அவசரச் சட்டங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன.

விவசாயிகள் நலன்களை, குறிப்பாக சிறு, நடுத்தர விவசாயிகள் நலன்களை விலைகொடுத்து, உள்நாட்டு மற்றும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கு ஆதரவாக, கிராமங்கள் முதல் நாடாளுமன்றம் வரை விவசாயிகள் எழுப்பிய குரலை அலட்சியம் செய்து, இந்த மூன்று அவசரச் சட்டங்களை பாஜக அரசாங்கம் சட்டமாக்கியிருக்கிறது. அகில இந்திய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்-ஏஐகேகேஎம்எஸ் (AIKKMS) இந்தக் கொடிய நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது.

அத்தியாவசியப் பண்டங்கள் சட்டம் 1955-ஐ பாஜக அரசாங்கம் திருத்தியிருப்பதன் மூலம், மக்களின் அன்றாட உணவுக்குத் தேவைப்படும் அனைத்து தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக்கொள்ள அனுமதித்திருக்கிறது.

வர்த்தக நிறுவனங்கள், இத்தகைய அத்தியாவசியப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து மலிவான விலையில் வாங்கி அவற்றின் குடோன்களில் பெருமளவில் இருப்பு வைத்துக்கொள்ள முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இந்த நிறுவனங்கள் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, இந்த அத்தியாவசியப் பொருட்களை அதிகக் கடுமையான விலையில் விற்று பெரும் லாபத்தை ஈட்ட முடியும்.

விவசாயிகள் மட்டுமின்றி, ஏழை நுகர்வோர்களும் அந்த அதிகபட்ச சுமையைத் தாங்க வேண்டியிருக்கும். அது, ஏற்கெனவே நாட்டிலுள்ள கடுமையான ஊட்டச் சத்தின்மையையும் பட்டினியையும் இன்னும் அதிகரிக்கப் போகிறது. வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம் 2020-ஐ நிறைவேற்றியிருப்பதன் வாயிலாக, ஏபிஎம்சி (Agricutural Products Marketing Committee) சட்டத்தின்படி விவசாயிகளுக்குச் சாதகமாக இதுவரையில் இருந்த அனைத்து ஷரத்துகளையும் முற்றிலும் நீக்கியிருக்கிறது.

இச்சட்டம் மூலம் அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருக்கும் வேளாண் மண்டிகள் ஏற்கெனவே இருந்த இடங்களில் மட்டுமே இயங்கும். ஆனால், நாடு முழுவதும் பெரும் நிறுவனங்களின் எண்ணற்ற தனியார் வேளாண் மண்டிகள் இயங்க இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சந்தைப் பகுதிகளுக்கு அப்பாற்பட்டு, பகாசுர பன்னாட்டு நிறுவனங்கள் விவசாயிகள் உற்பத்தி செய்தவற்றை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் இப்போது அவை விருப்பப்படி கொள்முதல் செய்துகொள்ள முடியும்.

இதனால் விவசாயிகள் இடைத்தரகர்களிடமிருந்து விடுதலை பெற்றவர்களாக ஆகியுள்ளனர் என்றும் அவர்களைத் தவிர்க்க இப்போது 'பாதுகாப்புக் கவசம்' இடப்பட்டுள்ளது என்றும் வாதிடப்படுகிறது. இது அப்பட்டமான பொய் மட்டுமின்றி, ஒரு ஏமாற்றுப் பிரச்சாரமாகும்.

அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருக்கும் மண்டிகளுக்கு வெளியே, 'ஒரே தேசம் ஒரே சந்தை' என்ற கோஷத்தை முழங்கிக்கொண்டு, முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளின் விளைபொருட்களை இப்போது வாங்கிக்கொள்வார்கள். இவர்கள் என்ன கெஞ்சிப் பேசியா விவசாயிகளிடம் வாங்குவார்கள்? இவர்கள் வியாபாரிகளல்லவா? இன்றைய விவசாயச் சந்தைகளில் வர்த்தகம் செய்வோரைவிட அந்நிறுவனங்கள் ஆயிரம் மடங்கு பெரியவையாகும்.

இந்த உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் பல நாடுகளைச் சேர்ந்த கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிறுவனங்கள், ஒன்றாம் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என விளைபொருட்கள் தாங்களே தரப்படுத்தி, பண்டங்களின் தரத்தை முடிவு செய்து, இஷ்டப்படி அவை நிர்ணயித்த விலைகளில் வாங்கிக்கொள்ளும்.

உண்மையில், இப்புதிய சட்டத்தில் பாதுகாப்புக் கவசம் இருக்கிறதென்றால், அது இத்தகைய தனியார் நிறுவனங்களுக்குத்தான் இருக்கிறது. அரசாங்கப் பள்ளிக்கூடங்களின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் நிர்மூலமாக்கிவிட்டு அதனிடத்தில் செலவு மிகுந்த தனியார் பள்ளிகள் இப்போது நிறுவப்பட்டிருப்பது போலவே, அரசாங்கக் கட்டுப்பாட்டு விவசாயச் சந்தை உள்ளிட்ட ஒட்டுமொத்த உட்கட்டமைப்பும் நிர்மூலமாக்கப்படப்போவதன் மூலம், ஒட்டுமொத்த விவசாயச் சந்தைக் கட்டமைப்பும் பகாசுர நிறுவனங்களால் கைப்பற்றப்பட்டுவிட்டால், வெளிப்படையான பதுக்கலுக்கு வழியேற்பட்டு, நிலைமை படுமோசமாகி விடும். ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்புச் சங்கிலியும் கேள்விக்குறியாகிவிடும்.

விவசாயிகள் (அதிகாரப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் அவசரச் சட்டம் 2020 மூலம், மொத்த விற்பனையாளர்கள், பெரும் சில்லறை வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள் தங்களது வர்த்தகத் தேவைகளின்படி, வரப்போகும் சந்தைக்கான பொருட்களை விவசாயிகள் உற்பத்தி செய்ய வேண்டும் என நிர்பந்திப்பார்கள்.

ஓர் ஒப்பந்தத்தின் மூலம், விவசாயச் சேவைகள் என்ற பெயரில், கடனையும், உரங்களையும், விதைகளையும், விவசாயக் கருவிகளையும் விவசாயம் சார்ந்த தொழில்நுட்பத் தகவல்களையும் அவர்கள் விவசாயிகளுக்கு வழங்குவார்கள். பதிலுக்கு, விவசாயி அவரது பயிரை அந்நிறுவனத்துக்கு விற்றாக வேண்டும்.

என்ன விலையில் அதை அந்நிறுவனம் வாங்கும் என்பதை, விதைப்புக்கு முன்னதாகவே போடப்படும் அந்த ஒப்பந்த்தம் முடிவு செய்யும். இத்தகைய ஒப்பந்தமானது, ஒருபோக சாகுபடி முதல், ஐந்து வருட சாகுபடி, அல்லது அதற்கும் மேலான கால சாகுபடிக்கான ஒப்பந்தம் என்பதாக இருக்கும். நிலத்தில் எதை விதைக்க வேண்டும், எங்கு விற்க வேண்டும் என்பதை விவசாயிகள் தீர்மானிக்க முடியாது.

இதுபோன்ற ஒரு சூழலில், பெருமளவில் தம்பட்டமடிக்கப்படும் 'ஒரே தேசம், ஒரே சந்தை' என்பதை எங்கும் காண முடியாது. விவசாயி பயிர்களை விற்றபின், முதலில் கடன் மற்றும் பிற சேவைகள் வழங்கியற்கான தொகையை ஒப்பந்த நிறுவனம் எடுத்துக்கொளும். விவசாயியின் கைக்கு எவ்வளவு தொகை வரும் என்பது எவருக்கும் தெரியாது.

இச்சட்டம் மூலம், நீதிமன்றம் செல்வது தடைசெய்யப்பட்டிருக்கிறது. இண்டிகோ வண்ணப் பயிர் வளர்த்தற்காக ஆங்கிலேயர்கள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். ஒப்பந்தச் சாகுபடி முறையின்கீழ், இப்போது அதைச் சுலபமாகச் செய்யலாம். ஒருபுறம், ஒரு ஏக்கர், அரை ஏக்கர், இரண்டு ஏக்கர்கள் வைத்திருக்கும் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் இருக்கின்றனர்.

மற்றொருபுறம், இத்தகைய பகாசுர பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் மீது எவ்விதக் கட்டுப்பாடும் இருக்காது. அரசாங்கச் சட்டத்தின் அதிகாரம் அவர்களிடம் இருக்கப்போகிறது. சிறு விவசாயிகள் அந்நிறுவனங்களின் பிடியில் மெல்ல மெல்ல வந்துவிடுவார்கள். கடந்தகால அனுபவம் அதைத்தான் கூறுகிறது.

ஆக, இத்தகைய சூழலில், விவசாயம் செய்வதும், உயிர்வாழ்வதும் துரதிர்ஷ்டவசமானதாக இருக்கப் போகிறது. முதலாளித்துவவாதிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரண்டிக் கொள்ளையடித்ததால், ஏற்கெனவே நான்கு லட்சம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இதிலிருந்து தப்பிப்பதற்கான வழி ஒன்று உள்ளது. போராட்டப் பாதைதான் அந்த வழி.

இப்பணியில் அகில இந்திய விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் சங்கமானது, விடுதலை பெற்ற காலம் தொடங்கி ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அகில இந்திய விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் (ஏஐகேகேஎம்எஸ்) முக்கிய அங்கம் வகிக்கும், 250 விவசாயச் சங்கங்களை உள்ளடக்கிய மிகப்பெரும் மேடையான அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (ஏஐகேஎஸ்சிசி) பாஜக அரசாங்கத்தின் விவசாயிகள் விரோதக் கருப்புச் சட்டங்களுக்கு எதிரான, ஒடுக்குமுறைக் கொள்கைகள் மற்றும் முடிவுகளுக்கு எதிரான, எதிர்ப்புப் போராட்டமாக 25 செப்டம்பர் அன்று, அகில இந்திய கிராமிய பந்துக்கு அறைகூவல் விடுத்திருக்கிறது.

இதை வெற்றிகரமாக்கிட வேண்டும் எனச் சுரண்டப்படும் மற்றும் பாதிக்கப்படும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை உழைக்கும் மக்கள் அனைவரையும் அகில இந்திய விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வேண்டிக்கொள்கிறது''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.