
கல்லுாரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், இறுதி பருவத் தேர்வில் புத்தகங்களை பார்த்து விடையளிக்கலாம் என, புதுச்சேரி பல்கலைக் கழகம் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:-
புதுவை பல்கலைக்கழகத்தில் இறுதி தேர்வு எழுத ஆன்லைன், ஆப்லைன் என மாணவர்கள் விரும்பும் வகையில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது. பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரையின்படி இறுதியாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு அறைகளில் புத்தகம், குறிப்பேடுகள் மற்றும் பிறஆய்வு பொருட்களை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது.
கேள்விகளுக்கான பதில்களை மாணவர்கள் புரிந்து கொண்டு பதில் அளிக்க இந்தமுறை வழிவகை செய்யும். தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் மாணவர்கள் தங்கள் புத்தகம் மற்றும் குறிப்பேடுகளை பரிமாறாமல் இருப்பதை தலைமை கண்காணிப்பாளர் உறுதி செய்வார்கள்.
தேர்வுகளின் காலம் மற்றும் பிற நிபந்தனைகளும், வினாத்தாள்களின் முறை ஆகியவை ஏற்கனவே முன்பு இருந்த படியே இருக்கும். மாணவர்கள் ஏ4 வெள்ளைத் தாளில் கருப்பு மை கொண்டு பதில் அளிக்க வேண்டும். தேர்வு எழுதிய அனைத்து பக்கங்களையும் தேர்வு முடிந்த 30 நிமிடத்திற்குள் ஸ்கேன் செய்து அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முதல் பக்கத்தில் மாணவர்களின் பதிவு எண், பாடம், பிரிவு, தேதி ஆகியவற்றை குறிப்பிட்டு தங்கள் கையெழுத்தை முழுமையாக எழுத வேண்டும். 2-ம் பக்கத்தில் இருந்து விடைகளை எழுத தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment