Latest News

இந்தியப் பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவை மத்திய அரசு கலைக்க வேண்டும்: திருமாவளவன்

மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தியப் பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்காகக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவே வேண்டாம். மத்திய அரசு உடனடியாக இந்தக் குழுவைக் கலைக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தியப் பண்பாட்டு வரலாற்றை எழுதுவதற்காகக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் தென்னிந்தியாவைச் சார்ந்தவர்களோ, மதச் சிறுபான்மையினரோ, தலித்துகளோ இடம்பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தக் குழுவை மாற்றியமைக்கப் போவதாகவும் அதில் பலரையும் உள்ளடக்கப் போவதாகவும் இப்போது செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு நாட்டின் பண்பாட்டு வரலாற்றை எழுதுகிற வேலை அரசாங்கத்தைச் சார்ந்தது அல்ல. அரசாங்கத்தால் குழு அமைத்து எழுதப்படுகிற எந்த ஒரு வரலாறும் நம்பகத்தன்மை கொண்டதாக, ஒரு சார்பற்றதாக இருக்க முடியாது. இது எந்தவொரு நாட்டுக்கும் பொருந்தும். எனவே, இத்தகைய ஒரு குழுவை அமைக்கத் தேவையில்லை.

பண்பாட்டு வரலாற்றை எழுதும் பணியைக் கல்வியாளர்களிடமும் வரலாற்றறிஞர்களிடமும் விட்டுவிட்டு நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றும் பணியில் மத்திய அரசு அக்கறை காட்டவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

மோடி அரசு 2014 ஆம் ஆண்டு பதவி ஏற்றதுமே இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதுவதற்கு முயன்றது. அதற்காக கடந்த ஆட்சியின்போது 14 பேர் கொண்ட குழுவொன்றை கே.என்.தீட்சித் என்பவர் தலைமையில் அமைத்தது. 'இந்தியாவின் தொன்மை வரலாற்றை மாற்றி எழுதுவதற்கான பரிந்துரைகளைக் கொடுப்பதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது'என கே.என்.தீட்சித் அப்போது கூறியிருந்தார்.

ஆரியர்கள் இந்த நாட்டின் பூர்வகுடிகள் அல்ல; அவர்கள் இந்த நாட்டுக்கு வெளியிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள். அவர்களுக்கு முன்பே இங்கு சிறப்பான பண்பாட்டுடன் மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பதே வரலாற்று உண்மை. அண்மைக்காலங்களில் டிஎன்ஏ அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வுகளும் அதையே மெய்ப்பித்துள்ளன. அதுமட்டுமின்றி சிந்துவெளிப் பண்பாடும் திராவிடப் பண்பாடும் ஒன்றே எனவும் சிந்துவெளி மக்கள் பேசிய மொழி தமிழ்தான் எனவும் அந்த ஆய்வுகள் அறிவியல் அடிப்படையில் மெய்ப்பித்துள்ளன.

'இந்த நாடு முழுவதும் நாகர்களே ஆட்சி புரிந்தனர். அவர்கள் பேசிய மொழி தமிழ்தான். தமிழர் என்பதே சமஸ்கிருதத்தில் திராவிடர் என திரிபடைந்தது. இந்தியா முழுதும் பரவியிருந்த திராவிடர்கள் ஆரியர் குடியேற்றத்துக்குப் பின்னர் தென்னிந்தியாவுக்குத் தள்ளப்பட்டனர்' என புரட்சியாளர் அம்பேத்கர் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு தெளிவுபடுத்தியுள்ளார். அறிவியல் அடிப்படையிலான இந்த வரலாற்று உண்மைகள் இன்றைய இந்துத்துவவாதிகளுக்குப் பிடிக்கவில்லை. அதனால் இதைப் புராணங்களின் அடிப்படையில் மாற்றி எழுத முயல்கிறார்கள். அதற்காகவே இந்தமாதிரியான குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட கே.என்.தீட்சித் குழுவும் கலாச்சார அமைச்சகத்தின் கீழ்தான் அமைக்கப்பட்டது. அப்போதே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. அந்தக் குழு என்ன ஆனது, அது அறிக்கையைச் சமர்ப்பித்ததா என்பது பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. இந்நிலையில் பண்பாட்டு வரலாற்றை மாற்றி எழுதப் போகிறோம் என்று இப்பொழுது மத்திய அரசு குழு அமைத்திருப்பது தேவையற்ற ஒன்றாகும். இந்தியாவை ஒரே மதம் ஒரே பண்பாடு கொண்ட நாடாக உருவாக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுவதை விடுத்து கரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதிலும்; வரலாற்றில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கிற பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளிலும் மோடி அரசு அக்கறை காட்டவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மத்திய அரசு அமைத்திருக்கும் குழுவில் எங்களுக்கும் இடம் கொடுங்கள் என்று கேட்பதைவிடவும் இந்தக் குழுவே வேண்டாம் என்று உரத்து முழங்கவேண்டியதே இன்றைய தேவை. மத்திய அரசு உடனடியாக இந்தக் குழுவைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். கல்வியாளர்களும், வரலாற்றறிஞர்களும் இந்தக் குழுவை நிராகரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்''.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.