Latest News

வீரபாண்டிய கட்டபொம்மன் 221-வது நினைவு தினம்; தூக்கிலிட தேதி குறித்த பிறகு காரணம் தேடிய ஆங்கிலேயர்கள்: பாஞ்சாலங்குறிச்சி போரின் வரலாற்றுத் தகவல்

ஆங்கிலேயருடனான போரில் வீரமரணத்தை தழுவிய பாளையக்கார மன்னன் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 221-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (16-ம் தேதி)கடைபிடிக்கப்படுகிறது. பாஞ்சாலங்குறிச்சி போர் குறித்து ஆங்கிலேயர்கள் எழுதிய குறிப்புகள் கட்டபொம்மனின் வீரம், தியாகத்தை வெளிப்படுத்துகின்றன.

பாஞ்சாலங்குறிச்சி போர் 1799 முதல் 1801 வரை 3 ஆண்டுகள் நடைபெற்றது. `போரில் பாஞ்சாலங்குறிச்சிக்காரர்கள் யுத்த தர்மத்தை காத்தனர். இரக்க குணத்தால் அவர்கள் தோல்வியைத் தழுவ நேரிட்டது' என்று, போரை நடத்திய கர்னல் வெல்ஸ் தனது, 'ராணுவ நினைவுகள்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக, வரலாற்று ஆய்வாளர் பெ.செந்தில்குமார் தெரிவிக்கிறார்.

அவர் மேலும் கூறியதாவது:

கர்னல் வெல்ஸ் தனது புத்தகத்தில், ஸ்பெயின் நாட்டில், உயர்ந்த மலைப்பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்ட 'ஜிப்ரால்டர்' கோட்டையைப் போன்றது பாஞ்சாலங்குறிச்சி கோட்டை. அதனை உடைக்க முடியாமல் ஆங்கிலேய ராணுவம் திணறியது' என குறிப்பிட்டுள்ளார்.

1799-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி மேஜர் ஜான் பானர்மேன் தலைமையில் விசாரணை நடைபெற்று, கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். ஆனால், சென்னையில் இருந்து தலைமைச்செயலர் ஜோசையா வெப், மேஜர் பானர்மேனுக்கு அக்.2-ம் தேதி எழுதிய கடிதத்தில், `கட்டபொம்மனைத் தூக்கிலிட வலுவான ஆதாரங்களை சேகரித்துவைத்துக் கொள்ளுமாறு லார்ட்ஷிப்விரும்புகிறார்' என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கட்டபொம்மனை தூக்கிலிடுவது என 14 நாட்களுக்கு முன்னரே முடிவெடுத்துள்ளனர்.

பானர்மேன் கடிதம்

கட்டபொம்மனை தூக்கிலிட்டது குறித்து, மேஜர் ஜான் பானர்மேன், தலைமைச்செயலர் ஜோசையா வெப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ''கட்டபொம்மனுடன் ஏனைய பாளையக்காரர்களும் என்னை சந்திக்க வந்திருந்தனர். கட்டபொம்மன் கப்பம்கட்ட மறுத்ததுடன், ஆட்சியர் லூசிங்டனின் சம்மன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுத்துவிட்டார்.

ஆயுதம் தாங்கிய வீரர்களுடன்தான் ஆட்சியரை சந்திக்க முடியும் என கூறிவிட்டார். செப்டம்பர் 5-ம் தேதி அவரது கோட்டைக்கு அருகே முகாமிட்டிருந்த என்னைசந்திக்குமாறு சம்மன் அனுப்பினேன். அதற்கும் பணிய மறுத்துவிட்டார். மேலும், கிழக்கிந்திய கம்பெனி படையினர் பலரை, அவரது ஆட்கள் கொன்றனர். அப்போது கட்டபொம்மன் கோட்டையில் தான் இருந்தார். எனவே, எங்கள் உரிமையை நிலைநாட்டுவதற்காக கட்டபொம்மு நாயக்கருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்ற அரசாங்கத்தின் அச்சம் தரும்தீர்மானத்தை அவருக்கு அறிவித்தேன்.

அச்சமின்றி தூக்குமேடை

பின்னர், கயத்தாறு கோட்டைக்கு அருகில் தூக்கிலிடப்படார். தூக்கிலிட அழைத்துச் சென்றபோது, சிறிதும் அச்சமின்றி உறுதியான நிமிர்ந்த நடையுடன் சென்றார். தனது வாய்பேச முடியாத சகோதரரை (ஊமைத்துரை) நினைத்து அவர் கவலையை வெளிப்படுத்தினார்' என, பானர்மேன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் நடந்த போர்களை பற்றி அப்போது பணிபுரிந்த ஆங்கிலேய அதிகாரிகள் கடிதமாக பதிவு செய்துள்ளனர். அதில்1670-ம் ஆண்டு முதல் 1907-ம் ஆண்டு வரையிலான அனைத்துஆவணங்களும் சென்னையில் உள்ள தமிழக அரசு ஆவணக்காப்பகத்தில் உள்ளன. கட்டபொம்மனை பற்றிய குறிப்புகள் அடங்கிய 1,357 பக்கங்கள் அவரது வீர வரலாற்றைக் கூறுகின்றன.

சுதந்திரப்போருக்கு அச்சாணி

ஆங்கிலேயருக்கு எதிராக, கட்டபொம்மன் கொண்டு வந்த பொருளாதாரத் தடையே, இந்திய சுதந்திரப் போருக்கு அச்சாணியாக இருந்துள்ளது. சுதந்திர போராட்டம் குறித்த வரலாறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்'' என்றார் செந்தில்குமார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.