
கோவிட்-19 தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் 7ம் கட்டப் பயணம் அக்டோபர் 29ம் தேதி தொடங்குகிறது என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அக்டோபர் 25ம் தேதி மட்டும், 4,322 இந்தியர்கள் வந்தே பாரத் விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
ஷார்ஜாவில் இருந்து திருச்சிராப்பள்ளி திரும்பிய 125 பேரும், அபுதாபியிலிருந்து சென்னை மற்றும் மதுரை திரும்பிய 125 பேரும், டொரன்டோவில் இருந்து டெல்லி மற்றும் சென்னை திரும்பிய 307 பேரும், சிகாகோவில் இருந்து டெல்லி மற்றும் சென்னை திரும்பிய 321 பேரும் இதில் அடங்குவர்.
கரோனா முடக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர வந்தே பாரத் திட்டத்தை, மத்திய அரசு கடந்த மே 7ம் தேதி தொடங்கியது. இதன் முதல் கட்டப் பயணம் கடந்த மே 7ம் தேதி தொடங்கி, மே 17ம் தேதி வரை நீடித்தது. அப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், பிலிப்பைன்ஸ், சவுதி அரேபியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு 84 விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.
வந்தே பாரத் 2ம் கட்டப் பயணம் மே 16ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 3ம் கட்டப் பயணம் ஜூன் 10ம் தேதி முதல் ஜூன் 22ம் தேதி வரை நீடித்தது. அப்போது சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளுக்கு 130 விமான சேவைகள் இயக்கப்பட்டன. 4ம் கட்டப் பயணம் ஜூலை 1ம் தேதி தொடங்கியது. 5ம் கட்டப் பயணத்தில், 766 விமானங்கள் ஷார்ஜா, அபு தாபி, துபாய், பாங்காங்க், கொழும்பு, டேரஸ் சலாம், ரியாத் ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்டது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சி- சிங்கப்பூர் இடையே சிறப்பு விமானங்களை இயக்கியது. 6ம் கட்டப் பயணம் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கி, 1626 விமான சேவைகளுடன், இம்மாத இறுதியில் முடிகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், திருச்சி - மஸ்கட் இடையே சிறப்பு விமானங்களை அக்டோபர் 28, 29 தேதிகளில் இயக்குகிறது. இதே வழித்தடத்தில், இந்த வாரம் ஏற்கனவே இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டன. திருச்சி-பஹ்ரைன் சிறப்பு வந்தே பாரத் விமானம், நவம்பர் 16ம் தேதி இயக்கப்படுகிறது.
ஒரு புறம், கொரோனா தொற்று இன்னும் நீடிக்கிறது. அதை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து முயற்சிக்கிறது. மறுபுறம், வேலைக்காவும், வாழ்வாதாரத்துக்காகவும் மக்கள் தங்கள் பயணங்களைத் தொடர விரும்புகின்றனர். இவர்களுக்கும், இவர்களது குடும்பத்தினருக்கும் வந்தே பாரத் திட்டம் மிகுந்த ஆதரவை அளித்து வருகிறது.
தற்போது, பல நாடுகள் முடக்கத் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. வர்த்தகம் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மக்கள் தங்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு திரும்பச் செல்லவுள்ளனர். நாடு திரும்பிய மற்றும் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள், மீண்டும் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல தற்சார்பு இந்தியா திட்டம் உட்பட பல திட்டங்களின் கீழ் மத்திய அரசு உதவி வருகிறது.
No comments:
Post a Comment