
கேரளாவின் வயநாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புச் சூழலை ஆய்வு செய்ய அந்தத் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 3 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வயநாட்டில் ராகுல் காந்தி ஆய்வு நடத்துகிறார்.
கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 7,283 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 95 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 1,113 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சூழலில் வயநாடு தொகுதியில் கரோனா பாதிப்புச் சூழல் குறித்து ஆய்வு செய்ய அந்தத் தொகுதியின் எம்.பி. ராகுல் காந்தி வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை அங்கு பயணம் மேற்கொள்கிறார்.
ராகுல் காந்தி பயணம் குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுல்தான்பத்ரி எம்எல்ஏ ஐசி பாலகிருஷ்ணன் கூறுகையில், 'டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் கோழிக்கோட்டிற்கு 19-ம் தேதி செல்லும் ராகுல் காந்தி, மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்துகிறார். அங்கிருந்து புறப்பட்டு கல்பேட்டாவில் உள்ள அரசு விருந்தனர் மாளிகையில் அன்று இரவு ராகுல் காந்தி தங்குகிறார்.

மறுநாள் அதாவது 20-ம் தேதி ராகுல் காந்தி வயநாடு புறப்படுகிறார். வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி, திஷா குழுவிடமும் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தை முடித்துக்கொண்டு அன்று இரவு மீண்டும் கல்பேட்டா அரசு விருந்தினர் இல்லத்துக்கு ராகுல் காந்தி வருகிறார்.
21-ம் தேதியன்று காலை மனன்தாவடி அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு நடத்தும் ராகுல் காந்தி, அதை முடித்துக்கொண்டு கண்ணூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து புதுடெல்லி புறப்படுகிறார்' எனத் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்தப் பயணத்தின்போது காங்கிரஸ் கட்சி சார்பில் எந்தவிதமான பொதுக்கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்யப்படவில்லை.
No comments:
Post a Comment