
மருத்துவக்கல்லூரியில் 7.5 சதவீத சட்டம் நிறைவேறும் என்பதை தெரிந்துகொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் நாடகமாடுகிறார் என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று (அக். 23) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளோம். எப்படியிருந்தாலும் இச்சட்டம் நிறைவேறும் என தெரிந்துகொண்டு இந்த பலன் அரசுக்கும், முதல்வருக்கும் கிடைக்கக்கூடாது என்று தன் போராட்டத்தால் கிடைத்தது என்ற தோற்றத்தை உருவாக்க ஸ்டாலின் நாடகமாடுகிறார். இதில் அரசியல் செய்து லாபம் கிடைக்குமா என்று பார்க்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் சட்டத்தை நீக்குவோம் என்றார். நாங்கள் எப்படி நீக்குவீர்கள் என்றபோது ஆட்சிக்கு வந்தால் நீக்குவோம் என்றார். அவருக்கு ஆட்சிக்கு வருவதே நோக்கம். அவருக்கு மக்களைப் பற்றிக் கவலையில்லை.

தமிழகத்தில் தற்போது ஒரு கலாச்சாரம் உருவாகியுள்ளது. மதங்களை கொச்சைப்படுத்துவது என்பது போன்றவை உருவாகியுள்ளது. கருப்பர் கூட்டம் கந்தசஷ்டி கவசத்தை இப்படித்தான் விமர்சித்தார்கள். இப்படிப்பட்ட கருத்துகளை நாம் ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, மக்களை சென்றடையும்போது ஜாக்கிரதையாக பேச வேண்டும் என்பதே என் கருத்து".
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment