Latest News

ஆப்கானிஸ்தான்: ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் 9 வீரர்கள் பலி #இன்றைய முக்கிய செய்திகள்

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் தென் பகுதியில் காயம் அடைந்த வீரர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டபோது இரண்டு அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த குறைந்தபட்சம் 9 வீரர்கள் பலியானார்கள்.

அங்குள்ள நாவா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே, இங்கு தாலிபானுக்கும் அமெரிக்க படையினருக்கும் இடையே கடுமையான தாக்குதல்கள் தரையிலும் வான் வழியாகவும் நடந்து வருகின்றன. அருகே உள்ள லஷ்கர் கா நகரை தாலிபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதைத்தொடர்ந்து அவர்களுடன் அமெரிக்க படையினர் மோதி வருகிறார்கள்.

ஹெல்மாண்ட் மாகாணத்தை விட்டு இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் வெளியேறி விட்டதாக ஆஃப்கானிஸ்தானுக்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட கத்தாரில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட பிறகு நடக்கும் மிகப்பெரிய தாக்குதலாக ஹெல்மாண்டில் பதிவாகும் சம்பவம் குறித்து அங்குள்ள நிலைமையை கவனித்து வரும் பிபிசி செய்தியாளர் செகந்தர் கெர்மானி தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்கான வழிமுறைகளை இறுதிப்படுத்தும் நடவடிக்கையை அரசு தரப்பும் தாலிபான்களும் தொடங்கிய வேளையில், அமைதிப்பேச்சுவார்த்தை, ஆட்சிப்பகிர்வு போன்ற விரிவான விஷயங்கள் தீர்க்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில், தற்போதைய தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

முன்னதாக, கடந்த வாரம் சமாதானத்தை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறி தாலிபான்கள் செயல்பட்டு வருவதற்கு ஆஃப்கானிஸ்தானுக்கான நேட்டோ படைகள் தளபதியான அமெரிக்க ஜெனரல் ஸ்காட் மில்லர் கண்டனம் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை ஹெல்மாண்டின் சில பகுதிகள் மற்றும் காந்தஹாருக்கு மின் விநியோகம் செய்யும் மின் நிலையங்களை தாலிபான்கள் தாக்கியதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அங்கு தொலைத்தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு ரூ. 9,652 கோடி கடன் வாங்க இந்திய நிதித்துறை அனுமதி

சரக்கு,சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி வருவாய் குறைப்பால் ஏற்பட்ட இழப்பை சரி செய்யும் விதமாக ரூ. 9,652 கோடி கடன் வாங்க தமிழக அரசுக்கு இந்திய நிதித்துறை அனுமதி அளித்திருக்கிறது.

தற்போதைய நடைமுறைப்படி, மாநிலங்கள் அவற்றின் வருவாய் இழப்பை எதிர்கொள்ள இரண்டு கடன் திட்டங்களை இந்திய அரசு முன்மொழிந்தது. அதில் ஒரு திட்டமாக, ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து குறைந்த வட்டி விகிதத்தில் மாநில அரசுகள் ரூ. 97 ஆயிரம் கோடி வரை கடன் பெறலாம். மற்றொரு திட்டப்படி மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் பற்றாக்குறையான ரூ. 2.35 லட்சம் கோடியையும் கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் மாநில அரசுகள் கடன் பெறலாம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில், மொத்த உள் மாநில உற்பத்தியில் 0.5 சதவீதம் அளவுக்கு கூடுதலாக மாநிலங்களால் கடன் பெற முடியும் என தீர்மானிக்கப்பட்டது இந்த விவகாரத்தில் மத்திய அரசு முன்மொழிந்த இரு யோசனைகளில் ஒன்றை மாநிலங்கள் தேர்வு செய்யலாம். அதன் அடிப்படையில் மாநிலங்கள் கடன் பெறலாம் என இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிஹார், கோவா, குஜராத், ஹரியாணா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிஷா, சிக்கிம், திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகண்டு ஆகிய 20 மாநிலங்கள் கடன் வாங்க இந்திய நிதித்துறை அனுமதி அளித்திருந்தது. இந்த வரிசையில் 21ஆவது மாநிலமாக தற்போது தமிழ்நாடு சேர்ந்திருக்கிறது. இதன் மூலம் இந்த 21 மாநிலங்கள் வாங்கும் கடன் தொகை ரூ. 78,542 கோடி ஆக இருக்கும் என இந்திய நிதித்துறை தெரிவித்துள்ளது.

ஆனால், மத்திய அரசு அறிவித்த இரு திட்டங்களில் எதையும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் அல்லாத கட்சிகள் ஆளும் அரசுகள் தேர்வு செய்யவில்லை.

ஹாத்ரஸ் வழக்கு: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு; 24 மணி நேரம் கண்காணிப்பு

ஹாத்ரஸ் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியதாக கூறப்பட்ட பெண் உயிரிழந்த வழக்கில் அவரது குடும்பத்தாருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் வீட்டைச் சுற்றி எட்டு சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இது தவிர, அவரது வீட்டைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று மாநில அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்ணின் பெற்றோர், இரு சகோதரர்கள், உறவினர், பாட்டி ஆகியோருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு ஆய்வாளர், ஒரு தலைமை காவலர், நான்கு காவலர்கள், இரண்டு பெண் காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருப்பதாகவும் வீட்டுக்கு வெளியே ஒரு உதவி ஆய்வாளர் என மொத்தம் 51 காவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாத்ரஸ் பெண் உயிரிழந்த சம்பவத்தில் அவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக கூறப்படும் விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளிவந்தவாறு உள்ளனர். உத்தர பிரதேசத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சாதகமாக இந்த வழக்கில் மாநில காவல்துறை செயல்படலாம் என பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும் அரசியல் கட்சியினரும் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஹாத்ரஸ் பெண் உயிரிழந்தது தொடர்பான வழக்கை மாநில அரசு நியமித்த சிறப்புக்குழுவும் தனியாக விசாரித்து வருகிறது. இதில், பெண்ணின் சகோதரர்கள் இருவரை விசாரணைக்கு வருமாறு புதன்கிழமை சிபிஐ சம்மன் அனுப்பியிருக்கிறது.

ரஜினிகாந்த் சொத்து வரியில் தள்ளுபடி கோரிய வழக்கு: உயர்நீதிமன்றம் கண்டிப்பு

தனது திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பாக ரஜினிகாந்த் தொடர்ந்திருந்த வழக்கில் அபராதம் விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதையடுத்து வழக்கைத் திரும்பப் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு 6.5 லட்ச ரூபாய் சொத்து வரி விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

ரஜினிகாந்த் தாக்கல் செய்திருந்த அந்த மனுவில், அந்தத் திருமண மண்டபத்திற்கு தான் தொடர்ந்து வரி செலுத்திவருவதாகவும் கடைசியாக பிப்ரவரி மாதம் வரி செலுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா தொற்று பரவலின் காரணமாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மார்ச் 24ஆம் தேதிக்குப் பிறகு தனது திருமண மண்டபத்தை யாரும் வாடகைக்கு எடுக்கவில்லை; இந்தச் சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி சென்னை மாநகராட்சியிலிருந்து வந்த நோட்டீஸில் 6.5 லட்சம் செலுத்தும்படி கூறப்பட்டிருந்ததாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு மார்ச் 24ஆம் தேதிக்குப் பிறகு செய்யப்பட்ட பதிவுகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டு, வாங்கப்பட்டிருந்த முன்பணம் திரும்பக் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ள ரஜினிகாந்த், வருமானம் இல்லாத காலகட்டத்தில் சொத்துவரியை பாதியாகக் குறைத்து வசூலிக்கலாம் எனக் கோரி செப்டம்பர் 23ஆம் தேதி சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியபோதிலும் அது தொடர்பாக பதில் ஏதும் வரவில்லையென்பதால் நீதிமன்றத்தை அணுகியிருப்பதாகவும் ரஜினிகாந்தின் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி அனிதா சம்பத் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது "மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட 10 நாட்களுக்குள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளீர்கள். அவர்கள் பதிலளிக்க உரிய கால அவகாசம் வழங்க வேண்டாமா? அப்படியும் பதில் இல்லையென்றால் நினைவூட்டல் கடிதங்களை அனுப்ப வேண்டும். அப்படி ஏதும் செய்யமால் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறீர்கள். இது நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக உள்ளது. இந்த வழக்கை அபராதத்துடன் ஏன் தள்ளுபடி செய்யக்கூடாது?" என நீதிபதி கேள்வியெழுப்பினார்.

இதையடுத்து, வழக்கைத் திரும்பப் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான மனுவைத் தாக்கல்செய்யும்படியும் இன்று பட்டியலிடப்பட்ட வழக்குகள் முடிந்த பிறகு, அந்த மனு பரிசீலிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படுமென நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

கொரோனா பொது முடக்கத்துக்கு மத்தியில் வளர்ச்சியடைந்துள்ள சீன வர்த்தகம்

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் முக்கிய உலக நாடுகளின் பொருளாதாரம் சரிவை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில், வர்த்தகத்தில் வலுவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது சீனா.

அதிகாரப்பூர்வ தகவல்படி செப்டம்பர் மாதம் சீனாவின் ஏற்றுமதி 9.9 சதவீத அளவில் உயர்ந்துள்ளது. அதேபோல இறக்குமதிகள் 13.2 சதவீத அளவு உயர்ந்துள்ளது.

பல முக்கிய உலக நாடுகளின் பொருளாதாரம், கொரோனா பொது முடக்கத்தாலும், மக்களின் வாங்கும் திறன் குறைந்திருப்பதாலும் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஆனால் இந்த அதிகாரப்பூர்வ தகவல், சீனா வேகமாக மீண்டு வருகிறது என்பதைக் காட்டுகிறது.

கடந்த வருடம் முதன்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது சீனாவில்தான்.

உலகின் இரண்டாம் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு சீனா. ஆனால் சீனாவின் பொருளாதாரம், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கடுமையான பொது முடக்கத்தால் பாதிப்படைந்தது. பின் ஜூன் மாதம் அது சரிவிலிருந்து மீளத்தொடங்கியது.

ஜூன் மாதத்திலிருந்து சர்வதேச அளவில் வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள், மருத்துவ கருவிகள், ஆடைகள், பாதுகாப்பு கவசங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்ததால் சீனாவின் வர்த்தகம் வளர்ச்சியைக் கண்டுள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இருப்பினும் சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் இந்த தேவையின் அளவு குறையவும் செய்யலாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

CSK vs SRH: சென்னை அணியின் வெற்றிக்கு உதவிய தோனியின் வியூகங்கள்

தோல்விக்கான காரணங்கள் என்னவென்று கூறுவதை விட, வெற்றிக்கு இவை தான் காரணங்கள் என துல்லியமாக கூறுவது மிகவும் சிரமம். `சக்ஸ்ஸ் ஆஸ் மெனி ஃபாதர்ஸ்` (Success has many fathers).என்று துவங்கும் பிரபல வாக்கியமே இதற்கு மிக சிறந்த சான்று.

2020 ஐபிஎல் தொடர் லீக் போட்டியில், ஹைதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வென்றது. ஒற்றை வரியில் கூறுவதென்றால், அவ்வளவே. ஆனால் இந்த வெற்றிக்கான பின்னணியும், வியூகங்களும் சற்று விரிவாக அலசப்பட வேண்டியவையே.

தொடர்ந்து இரு மோசமான தோல்விகள், பேட்ஸ்மேன்களின் மோசமான பங்களிப்பு, பிளே ஆஃப் சுற்றுக்கு அணி தகுதி பெறுமா என்ற சந்தேகம் என ஏராளமான பாதக அம்சங்களை தாண்டியே செவ்வாய்க்கிழமை சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக துபையில் நடந்த போட்டியில் சென்னை அணி களமிறங்கியது.

விரிவாக படிக்க: வெற்றி பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே - சாத்தியமாக்கிய வியூகங்கள் மற்றும் 'டீம் கேம்'

தனிஷ்க் விளம்பரம்: இந்து வலதுசாரிகள் 'லவ் ஜிகாத்' எதிர்ப்பால் நீக்கம்

தீவிர வலதுசாரி ஆதரவாளர்களின் கடும் எதிர்ப்பால் இந்தியாவின் முன்னணி நகை விற்பனை நிறுவங்களில் ஒன்றான தனிஷ்க், சமீபத்தில் தாம் வெளியிட்ட விளம்பரம் ஒன்றை விலக்கிக்கொண்டுள்ளது.

தனது இஸ்லாமிய புகுந்த வீட்டினர், ஓர் இந்துப் பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி செய்வதைப் போல அந்த விளம்பரத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

அந்த விளம்பரம் 'லவ் ஜிகாத்தை' தூண்டும் விதத்தில் இருப்பதாக தீவிர இந்து வலதுசாரிகள் குற்றம் சாட்டினர்.

தனிஷ்க் நிறுவனத்தில் நகை வாங்க வேண்டாம் என்று வலியுறுத்தி 'பாய்காட்தனிஷ்க்' எனும் ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

இந்த விளம்பரத்தை எதிர்த்து பதிவிடப்பட்ட பல பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களையும் இன்னொரு சாரார் சமூக ஊடகத்தில் கடுமையாக எதிர்த்து வந்தனர்.

விரிவாக படிக்க: இந்து வலதுசாரிகள் 'லவ் ஜிகாத்' எதிர்ப்பு: தனிஷ்க் நகை விளம்பரம் நீக்கம்

லடாக் காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டது சட்டவிரோதம் - சீனா

இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை பிராந்தியத்தில் இந்தியா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதைத் தாங்கள் எதிர்ப்பதாகவும், லடாக் யூனியன் பிரதேசம் இந்தியாவால் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டது என்றும் சீனா தெரிவித்துள்ளது.

சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள லடாக், ஜம்மு - காஷ்மீர், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் இந்தியாவின் பாதுகாப்பு படைகள் எளிதில் போக்குவரத்தை மேற்கொள்வதற்காக கட்டப்பட்ட 44 பாலங்களின் பயன்பாட்டை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார்.

இதன் பின்னணியில் இந்தியா குறித்து சீனா இவ்வாறு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

விரிவாக படிக்க: எல்லையில் இந்தியா கட்டிய 44 பாலங்கள்: கோபத்தில் சீனா

மலேசிய அரசியலில் திடீர் பரபரப்பு - மன்னரின் முடிவுக்காக காத்திருக்கும் அன்வார் இப்ராகிம்

மலேசிய அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பும் புதிய எதிர்பார்ப்புகளும் நிலவுகின்றன. ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று காலை மலேசிய மன்னரைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது நாட்டின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்க தமக்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒட்டுமொத்த மலேசியாவும் மன்னரின் முடிவுக்காக காத்திருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடப்புப் பிரதமர் மொகிதீன் யாசினின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது என்றும், தமக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்றும் பகிரங்கமாக அறிவித்திருந்தார் அன்வார் இப்ராகிம்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.