
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவி விலகச் சொல்லும் உரிமை மாயாவதிக்கு இல்லை என்று இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
இதனைக் கண்டித்து பல்வேறு பெண்கள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஹாத்ரஸ் வன்கொடுமையை கண்டித்து குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிய முதல்வர் யோகி ஆதித்யநாத் தமது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்திருந்தார்.
இதனிடையே இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ''முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவி விலகச் சொல்லும் உரிமை மாயாவதிக்கு இல்லை. ஹாத்ரஸ் வன்கொடுமை மனிதத்தன்மையின் மீது ஏற்பட்ட கறை. இளம்பெண்ணுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேரையும் தூக்கிலிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியை கொடுக்க வேண்டும். பெண்ணுக்கு எதிராக நடைபெற்ற இந்த அநீதியை அரசியலாக்க மாயாவதி முயற்சி செய்கிறார்'' என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment