
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கால்நடை சந்தைக்கு மாநகராட்சி திடீரென்று தடை விதித்தது. தடையை மீறி கால்நடைகளுடன் திரண்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மேலப்பாளையம் கால்நடை வாரச்சந்தை செவ்வாய்க்கிழமைகளில் கூடுவது வழக்கம். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த கால்நடைகளை வளர்ப்போரும், விவசாயிகளும், வியாபாரிகளும் ஆடு, மாடு, கோழிகளை விற்பனைக்காக இச்சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்வார்கள்.
இதனால் செவ்வாய்க்கிழமைகளில் இச்சந்தையில் கூட்டம் அலைமோதும். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை ஏராளமானோர் திரண்டுவந்து கால்நடைகளை விற்பனை செய்தனர். ரூ.1 கோடிக்குமேல் கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருந்தது. ஆனால் இச்சந்தையை நடத்துவதற்கு மாநகராட்சி அனுமதி அளிக்கவில்லை என்று தெரிகிறது.
சமூக இடைவெளியின்றி ஏராளமானோர் கால்நடை சந்தையில் திரண்டதை அடுத்து கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த சந்தையின் நுழைவு வாயில் கேட்டை பூட்டினர். கரோனா பரவல் காரணமாக மறுஉத்தரவு வரும்வரையில் சந்தை இயங்காது என்றும் மீறி வருபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்தது.
இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த தடையைமீறி ஏராளமானோர் ஆட்டோ, வேன், மினி லாரிகளில் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். சந்தை அமைந்துள்ள சாலையோரமாக கால்நடைகளை விற்பனைக்கு நிறுத்தினர்.
அங்கு கூட்டம் கூடியது. இது குறித்து தெரியவந்ததும் மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் சுகிபிரேமலதா, உதவி செயற்பொறியாளர் லெனின், மண்டல சுகாதார அலுவலர் சாகுல் மற்றும் போலீஸார் அங்குவந்து ஆடு, மாடு, கோழி வியாபாரம் செய்வதை தடுத்து நிறுத்தினர். அப்போது வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்க கூடாது என்று தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினரும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். ஆனால், தடையை மீறி வியாபாரம் செய்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சில ஆடு மற்றும் கோழிகள் பறிமுதல் செய்யப்பட்டு மண்டல அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அபராதம் செலுத்தியவர்களுக்கு கால்நடைகள் திருப்பி வழங்கப்பட்டன.
கரோனா பரவல் காரணமாக இந்த வாரச்சந்தை செயல்பட தடை நீடிக்கிறது. மறுஉத்தரவு வரும்வரை இந்த சந்தைப் பகுதியிலோ, சாலையோரங்களிலோ கால்நடைகளை விற்பனை செய்ய கூடாது. தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
59 பேருக்கு கரோனா:
திருநெல்வேலி மாவட்டத்தில் 59 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:
திருநெல்வேலி மாநகராட்சி- 24, அம்பாசமுத்திரம்- 1, மானூர்- 3, நாங்குநேரி- 8, பாளையங்கோட்டை- 13, ராதாபுரம்- 4, வள்ளியூர்- 4, சேரன்மகாதேவி- 1, களக்காடு- 1.
No comments:
Post a Comment