
சண்டீகர்: ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், காப்பீட்டுப் பணத்துக்காக, காரில் வைத்து எரித்துக் கொல்லப்பட்டதாக நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தான் கொல்லப்பட்டது போல ஒரு உடலை காரில் வைத்து எரித்துவிட்டு, காரில் இருந்த ரூ.11 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள் அவரை எரித்துக் கொன்றுவிட்டது போல நாடகமாடி, ரூ.2 கோடி காப்பீட்டுப் பணத்தைப் பெற திட்டமிட்ட தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறியிருப்பதாவது, ராம் மேஹார் (35), சட்டீஸ்கர் மாநிலத்தில் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரை கைது செய்துள்ளோம். இப்போது, செவ்வாய்க்கிழமை இரவு காரில் வைத்து எரிக்கப்பட்ட உடல் யாருடையது என்று விசாரணை நடத்தி வருகிறோம்.
முன்னதாக மேஹர் எரித்துக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரை அடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று, மேஹர் தனது குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வங்கியில் இருந்து தான் ரூ.11 லட்சத்தை எடுத்துக் கொண்டு வந்திருப்பதாகவும், தன்னை யாரோ சிலர் பின்தொடர்ந்து வருவதாகவும் கூறி அழைப்பை துண்டித்துள்ளார். இந்த நிலையில், அவரது கார் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அவரிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர்.
இந்த விசாரணையின் தொடக்கத்தில், ஹரியாணா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில், 11 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள், தொழிலதிபரை காரில் வைத்து எரித்துக் கொன்றதாகக் கருதி, எரிந்து கரிக்கட்டையான உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து ஹரியாணா மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கூட சட்டம் ஒழுங்கு குறித்து கடும் விமரிசனங்களும் எழுந்தன.
ஆனால், தீவிர விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. எரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ராம் மேஹார் உயிருடன் இருப்பது குண்டுபிடிக்கப்பட்டது. அவர் சட்டீஸ்கர் மாநிலம் பிலாஸ்புரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து அழைத்து வர உள்ளோம் என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொள்ளை மற்றும் கொலை நடந்தது போல நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
காரில் வைத்து எரிக்கப்பட்ட உடல் யாருடையது என்று கண்டுபிடிக்கப்பட்டு, அது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது குற்றவாளியான மேஹரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டால் மேலதிகத் தகவல்கள் கிடைக்கும்.
அவர் தனது பெயரில் இரண்டு காப்பீடுகளை எடுத்துள்ளார், ஒன்று ரூ.1 கோடி, மற்றொன்று ரூ.50 லட்சம். அவர் மரணம் அடையும்பட்சத்தில், அவரது வாரிசுக்கு அந்த பணம் கிடைக்கும். எனவே, இந்த ஒட்டுமொத்த நாடகத்துக்கும் இதுவே காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அவரது தொழில் முன்புபோல லாபகரமாக செல்லவில்லை என்றும், அதிகக் கடன் ஏற்பட்டிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment