
காரைக்காலில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹி காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
காரைக்காலில் பிரெஞ்சு நிர்வாகத்தின்போது கட்டப்பட்ட கட்டிடத்தில் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அக்கட்டிடம் பழுதடைந்ததாலும், போதிய வசதிகள் இல்லாததாலும் காரைக்கால் புறவழிச் சாலையில் 4 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.19.61 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் குடியிருப்புகள் கட்டுமானப் பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு, வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம், இலவச சட்ட உதவி மையம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
இதன் திறப்பு விழா இன்று (அக். 10) காலை புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹி சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்துப் பேசினார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஆர்.சுப்பையா ஆகியோர் உடன் பங்கேற்றனர்.
காரைக்காலில் நடைபெற்ற நிகழ்வில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்றுப் பேசுகையில், "வழக்கறிஞர்களின் கோரிக்கையின் அடிப்படையில், அனைத்து வசதிகளுடன் விரைவாக இப்பணி முடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மாநில அரசால் இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். புதுச்சேரியில் ரூ.35 கோடி செலவில் குற்றவியல் நீதிமன்றமும், ரூ.20 கோடி மதிப்பில் நீதிபதிகளுக்கான குடியிருப்பும் கட்டும் திட்டம் உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த திறமையான வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தகுதி அடிப்படையில் புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவும், புதுச்சேரியில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை அமைக்கவும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பரிசீலிக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரி அமைச்சர்கள் ஏ.நமச்சிவாயம், ஆர்.கமலக்கண்ணன், புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், தலைமைச் செயலர் அஸ்வனி குமார், சட்டத்துறை செயலர் ஜூலியட் புஷ்பா, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், காரைக்கால் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.செல்வகணபதி, புதுச்சேரி, காரைக்கால் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுச்சேரி தலைமை நீதிபதி பி.தனபால் வரவேற்றார். காரைக்கால் மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் நன்றி கூறினார்.
குளிரூட்டப்பட்ட 7 திறந்த நீதிமன்றங்கள், 7 நீதிபதி அறைகள், தபால் அலுவலகம், உணவகம், ஏடிஎம் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. நாளை மறுநாள் (அக். 12) முதல் இக்கட்டிடத்தில் நீதிமன்றம் செயல்படத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment