
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி:
திமுக தலைவர் ஸ்டாலின்:
அமமுக பொருளாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வெற்றிவேல் கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சென்னை மாநகர மேயராக இருந்தபோது - மாமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றி, அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை, தேவைகளை மாமன்றத்தில் எடுத்து வைத்து, அவற்றிற்குத் தீர்வு கண்டவர்.
சட்டப்பேரவை உறுப்பினராக, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் தொகுதி மக்களின் பிரச்சினைகளைச் சட்டப்பேரவையில் ஆக்கபூர்வமாக எடுத்துவைத்துப் பேசக்கூடியவர்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், திருநாவுக்கரசர் எம்.பி.:
வடசென்னையைச் சேர்ந்த அமமுக கட்சியின் பொருளாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வெற்றிவேல் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன். எந்தக் கட்சியில் இருந்தாலும் இருக்கிற கட்சிக்கு விசுவாசமாகவும் பொதுமக்கள் நலனை மனதில் கொண்டும் துடிப்பாகச் செயல்பட்டு வந்தவர் வெற்றிவேல்.
அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் கட்சியினர் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமாகா தலைவர், ஜி.கே.வாசன் எம்.பி.:
அமமுக பொருளாளர் வெற்றிவேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
வெற்றிவேல் இளம் வயதிலேயே பொது வாழ்விற்கு வந்தவர். மாநகராட்சி உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும், சிறப்பாகப் பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், இயக்கத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment