Latest News

சேலம் முதியவரை ஐஸ் பெட்டியில் அடைக்க யார் காரணம்? காவல்துறை ஆணையாளர் விசாரணை

சேலம் கந்தம்பட்டியில் உள்ள வீட்டில் 74 வயது முதியவரை சடலத்தை வைக்க பயன்படுத்தப்படும் குளிரூட்டி பெட்டியில் அவரது குடும்பம் 24 மணி நேரத்துக்கும் மேலாக அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த முதியவர் கடந்த 12ஆம் தேதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்து விட்டதாக தனியார் மருத்துவர் கூறியதாகவம் அதன் பேரிலேயே அவரை ஐஸ் பெட்டியில் வைக்க குடும்பத்தினர் முற்பட்டதும் தற்போது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய வளாகத்தில் உள்ள வீட்டில் 73 வயது முதியவர் பாலசுப்ரமணியம், அவரது சகோதரர் சரவணன், அவரது மனைவி, மகள்கள் கீதா, ஜெயஸ்ரீ ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருக்கும் பாலசுப்ரமணியம் இறந்து விட்டதாகக் கூறி சடலம் வைக்க பயன்படுத்தப்படும் தனியார் குளிர் பெட்டியை வாடகைக்கு வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்ட சரவணன், ஒரு குளிர் பெட்டியை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

அதன்படி ஒரு பெட்டியை அவரது வீட்டுக்கு கொண்டு வந்த வைத்த ஊழியர்கள், மறுதினம் அதை பெற்றுக் கொள்வதாகக் கூறிச் சென்றனர்.

இந்த நிலையில், மறுதினம் வீட்டுக்கு வந்த ஊழியர்கள், பெட்டிக்குள் முதியவர் பாலசுப்ரமணியம் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.

இது குறித்து சரவணனின் குடும்பத்தாரிடம் கேட்டபோது, "அண்ணன் ஏற்கெனவே இறந்து விட்டார். அவரது ஆன்மா துடித்துக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் இறந்து விடுவார்" என்று எந்த பதற்றமுமின்றி தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், தங்களுடைய செல்பேசியிலேயே பாலசுப்ரமணியம் மூச்சு விடும் காட்சியை பதிவு செய்தனர். "பெரியவர் நன்றாகவே மூச்சு விடுகிறார். அவரைப் போய் ஐஸ் பெட்டியில் அடைத்திருக்கிறீர்களே" என்றும் அந்த குடும்பத்திடம் கூறிய ஊழியர்கள், அவர்களாகவே காவல்துறையிடமும் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சூரமங்கலம் காவல்துறையினர் சரவணன் வீட்டுக்கு வந்து பாலசுப்ரமணியத்தை மீட்டு அவசரஊர்தி வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், "பெரியவருக்கு உயிர் உள்ளது. ஐஸ் பெட்டியில் அவர் 24 மணி நேரம் உயிருடன் இருந்ததே ஆச்சரியமான விஷயம்" என்று கூறினர்.

காவல்துறை ஆணையாளர் விளக்கம்

அதிர்ச்சியடைய வைக்கும் இந்த சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் செந்தில் குமாரிடம் பிபிசி கேட்டபோது, பாலசுப்ரமணியத்தின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அலட்சியமாக முதியவரை கையாண்டது தொடர்பாகவும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 238, 336 ஆகியவற்றின் கீழ் உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பாலசுப்ரமணியம், நரம்பியல் நோய் குறைபாடு பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்ததாகவும் கடந்த 12ஆம் தேதி தனியார் மருத்துவமனைக்கு மீண்டும் அவர் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் இறந்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர் கூறியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால்தான் அந்த முதியவரை மீண்டும் வீட்டுக்கே கொண்டு வந்து ஐஸ் பெட்டியில் வைக்க குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்ததாகவும் தற்போது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பாலசுப்ரமணியத்தின் சகோதரர் சரவணன் மிகவும் மன அழுத்தத்துடன் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஆணையாளர் செந்தில் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

உடல் நலன் சரியில்லை என்ற காரணத்துக்காக 74 வயது முதியவரை ஐஸ் பெட்டியில் வைத்து அவரது உயிர் பிரிவதற்காக காத்திருந்த குடும்பத்தினரின் செயல் உள்ளூர்வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அந்த பெரியவர் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த காட்சிகளும், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் காட்சியும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதையடுத்து, மனிதாபிமானமின்றி அந்த குடும்பத்தினர் செயல்பட்டுள்ளதாகக் கூறி தங்களின் எதிர்ப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

முதியோர் பாதுகாப்பு சிறப்புத் திட்டம் என்ன சொல்கிறது?

வீட்டில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியோர், தங்களுக்கு உதவி தேவைப்படும் சூழல் எழுந்தால் அவர்களுக்கு உதவ சிறப்புத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. சில இடங்களில் தனியாக இருக்கும் முதியோர்கள் மாரடைப்பு போன்ற நோயினால் தீடீரென்று பாதிக்கப்படும் போது உதவிக்கு ஆள் இல்லாமல் மடிந்து போகும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு காவல்துறையினரே வீடு தேடிச் சென்று உதவி செய்யும் ஒரு சிறப்புத் திட்டம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளது.

இதேபோல, செல்பேசியில் எண்-2 ஐ அழுத்தினால் அருகே உள்ள காவல் நிலைய தொலைபேசி ஒலிக்கும். உடனே தொலைபேசியில் பேசும் காவலர்களிடம் தங்களுக்கான உதவியை முதியோர் கேட்டுப் பெறலாம். தேவைப்பட்டால் வீட்டுக்கே அழைத்து தேவையான உதவிகளை பெறலாம். ஆபத்தான நேரத்தில் கூட செல்பேன். எண்.2 -ஐ அழுத்தி போலீசாரை உதவிக்கு கூப்பிடலாம். ஆனால், களத்தில் இந்த சேவைகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை விரிவாக ஆராய வேண்டியுள்ளது.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.