Latest News

மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுப்பு

மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி.க்கு மத்திய அரசு வழங்கும் 27 விழுக்காடு மற்றும் தமிழகத்தில் பின்பற்றப்படும் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டில் வழங்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்புக்கான இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், பல் மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்குக் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 4,2842 இடங்கள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் ஒரு இடம்கூட இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு செய்யாமல், மத்திய பா.ஜ.க. அரசு சமூக நீதியைச் சவக் குழியில் தள்ளிவிட்டது.

இந்த நிலையில்தான் மருத்துவப் படிப்புகளில் மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு அளிக்கும் 27 விழுக்காடு இடஒதுக்கீடு மற்றும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 50 விழுக்காடு ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 27 விழுக்காடு மற்றும் தமிழகத்தில் பின்பற்றப்படும் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு 2020 -21 நடப்புக் கல்வி ஆண்டில் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு நிலுவையில் உள்ள போது, நடப்பு ஆண்டில் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் 1,417 காலிப் பணியிடங்களை நிரப்பும் போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அகில இந்தியத் தொகுப்புக்கு மாநில அரசுகளால் வழங்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில், ஓ.பி.சி. மாணவர்களுக்கு சட்ட ரீதியாகக் கிடைக்க வேண்டிய இடஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதியாகும். பா.ஜ.க. அரசின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.எனவே, நடப்பு ஆண்டிலேயே மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தாம் வலியுறுத்துவதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.