
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் கைதான காவலருக்கு தந்தை இறுதி சடங்கில் பங்கேற்க 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலையான வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் மெய்ஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஒருவர். தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தாமஸ் பிரான்சிஸ் தந்தை சேவியர் பிரான்சிஸ் அக். 16-ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் 3 நாள் இடைக்கால ஜாமீன் கேட்டு தாமஸ் பிரான்சிஸ் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மனுதாரர் ஜூலை 6 முதல் சிறையில் உள்ளார். இரட்டை கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ முடித்து மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் 25.9.2020-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது. மனுதாரரின் ஜாமீன் மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மனுதாரரின் தந்தை இறந்ததால் இறுதி சடங்கு செய்வதற்காக மனுதாரருக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.
சிபிஐ தரப்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி, மனுதாரரின் தந்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை உறுதி செய்தார்.
இதையடுத்து, தாமதஸ் பிரான்சிஸ்-க்கு இன்று முதல் அக். 19 மாலை 6 மணி வரை
இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. இடைக்கால ஜாமீன் நாட்களில் தினமும்
மெய்ஞ்ஞானபுரம் காவல் நிலைய ஆய்வாளர் முன்பு காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக
வேண்டும், அக். 19 மாலையில் தவறாமல் மனுதாரரை சிறையில் அடைக்க வேண்டும்.
இடைக்கால ஜாமீன் காலத்தில் மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அதிகாரிகள் விதிக்கும் நிபந்தனைகளை மனுதாரர் ஏற்க வேண்டும் என நீதிபதி
உத்தரவிட்டார்.
பினனர் விசாரணையை அக். 22-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment