Latest News

உ.பி.யின் அரசு கடைகள் ஏலத்தில் துணை ஆட்சியர், டிஎஸ்பி முன்பாகப் பயங்கரம்: தன் போட்டியாளரை சுட்டுக்கொன்ற பாஜக நிர்வாகி

உத்தரப் பிரதேசம் பலியாவில் அரசு கடைகள் ஏலம் நேற்று மதியம் நடைபெற்றது. இதில், எழுந்த மோதலில் தன் போட்டியாளரை பாஜக நிர்வாகி, துணை ஆட்சியர் சுரேஷ் பால், டிஎஸ்பி சந்திர பிரகாஷ் சிங், ஆகியோர் முன்னிலையில் சுட்டுத் தள்ளியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரணாசிக்கு அருகிலுள்ள பலியா மாவட்டத்தின் ரிவாதி தாலுக்காவின் துர்ஜான்பூரில் உ.பி. அரசால் நியாயவிலைக் கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கான ஏலமுறை அங்குள்ள பஞ்சாயத்து பவன் மைதானத்தில் நான்கு சுயதொழில் வேலைவாய்ப்புக் குழுக்களுக்கு இடையே நடைபெற்றது.

அங்கு கூடி இருந்த பார்வையாளர்கள் கூற்றின்படி, ஒருமித்த கருத்து உருவாகாமையால் வாக்குப்பதிவு முறையில் கடைகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமே வாக்களிக்க அனுமதி என அறிவிக்கப்பட்டது.

ஒரு குழுவின் சிலருக்கு அடையாள அட்டை எதுவும் இல்லாமல் போகவே அதை மற்றொரு குழுவினர் எதிர்த்தனர். இதில் எழுந்த வாக்குவாதம், பெரிய மோதலாகி வெடித்தது.

இதில், ஒரு குழுவின் தலைவரும் பாஜக நிர்வாகியுமான தீரேந்திர பிரதாப் சிங் தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால், போட்டி குழுவின் தலைவர் ஜெய் பிரகாஷ் பால் (45) என்பவரைச் சுட்டுத் தள்ளியுள்ளார்.

இதற்கு எந்த எதிர்ப்பும் அளிக்காமல் துணை ஆட்சியர் சுரேஷ் பாலும், டிஎஸ்பியான சந்திரபிரகாஷ் சிங் அதிர்ந்து போய் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்கள் கண்முன்னே சுட்டவரான தீரேந்தர பிரதாப்பும் அங்கிருந்து வெளியேறி உள்ளார்.

இந்த தகவல் வெளியில் பரவியதை அடுத்து அங்கு இரண்டு குழுக்களின் ஆதரவாளர்களும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் குவிந்தனர். இவர்களுக்கு இடையே திரைப்படங்களை மிஞ்சும் வகையில் சுமார் அரைமணி நேரம் 20 ரவுண்டு குண்டுகளுடன் துப்பாக்கி சண்டையும் நடைபெற்றது.

அதன் பிறகு போலீஸார் படை, களம் இறங்கி மோதலை முடிவிற்கு கொண்டு வந்தது. இதில், பாஜக நிர்வாகியான தீரேந்தர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குகள் பதிவாகி அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து பலியான ஜெய் பிரகாஷின் சகோதரரான தேஜ் பகதூர் பால் கூறும்போது, 'தீரேந்தர் பிரதாப் தன் துப்பாக்கியால் எனது அண்ணனை சுட்டுக் கொன்றார். இவர் பாஜக எம் எல் ஏவான சுரேந்தர்சிங்கின் நெருங்கிய சகா ஆவார்.

தொடர்ந்து நிகழ்ந்த மோதலில் தீரேந்தரின் ஆட்கள் சிலரை பிடித்தப் போலீஸார் பிறகு கைது செய்யாமல் விடுவித்து விட்டனர். பாதுப்பிற்கு வந்தவர்களில் இரண்டு மகளிர் காவலர் உள்ளிட்ட 12 போலீஸார் மட்டுமே இருந்தனர். இவர்களும் குற்றவாளிகள் தரப்பினரை காக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டனர்.' எனத் தெரிவித்தார்.

இதையடுத்து உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், பலியா வழக்கில் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் எனத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சம்பவத்தின் போது பார்த்து கொண்டிருந்த அதிகாரிகளுக்கும் இதில் சம்பந்தம் உள்ளதா? என விசாரித்து உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து உபியின் எதிர்கட்சியான சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் ட்விட்டரின் பதிவில், 'அரசு நிர்வாகம் மற்றும் அதிகாரி முன்பாக நடந்த பயங்கரம் உ.பியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட நிலையை பறை சாற்றுகிறது.

சுட்டுத்தள்ளிய பாஜக நிர்வாகி அங்கிருந்து அமைதியாக வெளியேறியதும் உபியின் கிரிமினல்களுக்கு அரசு மீது அச்சம் இன்மையை காட்டுகிறது.' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வாரணாசிப் பகுதியின் ஏடிஜியான பிரிஜ் பூஷண் சம்பவ இடத்திற்கு காலை வந்து விசாரணை மேற்கொண்டார்.

விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தீரேந்தரின் ஆதரிப்பவரான பலியாவின் பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் கூறிய கருத்தும் சர்ச்சையை கிளம்பி உள்ளது. அவர், 'ஏலத்தின் போது எழுந்த வாக்குவாதத்தில் தவறான செயலுக்கு அளிக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை.' எனத் தெரிவித்துள்ளார்.

Source : www.hindutamil.in

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.