
வெற்றிவேல் மறைவு அமமுகவுக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அமமுகவினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தி:
''அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், எனது இனிய நண்பருமான P.வெற்றிவேல் Ex.MLA மறைந்தார் என்ற செய்தியை நம்பமுடியாமல் தவிக்கிறேன். மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரமும் என் தொண்டையை அடைக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவின் பேரன்பைப் பெற்றவர். என் மீது அளவிட முடியாத பாசம் கொண்டவர். எதையும் உரிமையோடு பளிச்சென பேசுபவர். 'என்ன நடந்தாலும் நான் தியாகத்தின் பக்கம், உண்மையின் பக்கமே நிற்பேன்' என்று உறுதிபடச் சொல்லி, இறுதிவரை அமமுக மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர்.
துரோகத்திற்கு எதிராக நடத்தி வருகிற புனிதப் போரில் ஒரு தளபதியாகக் களத்தில் நின்றவர். 'வெற்றி… வெற்றி' என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் பேசப்போகிறோம் என்று நினைக்கிற போதே எதற்காகவும் கலங்காத என் உள்ளம் கலங்கித் தவிக்கிறது.
வெற்றிவேல் மறைவு கட்சிக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன். நம்முடைய லட்சியப்பயணத்தில் 'வெற்றிவேல்' என்கிற பெயர் எப்போதும் நிலைத்திருக்கும். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்''.
இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிப்பு- அமமுக நிகழ்ச்சிகள் ரத்து
வெற்றிவேல் மறைவையொட்டி அமமுக கொடிகள் அனைத்தும் ஒருவாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது என்றும், அமமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்படுகின்றன என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment