
டெல்லி: டெல்லி-நொய்டா எல்லைப்பகுதி ஒரு போர்க்களம் போல காட்சியளிக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அவர்களுடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான பெண்ணின் குடும்பத்தாரை சந்திக்க கிளம்பியதும், அதை போலீசார் தடுத்ததும்தான் இதற்கு காரணம்.
டெல்லிக்கும், பலியான பெண் கிராமத்துக்கும் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். சாலை மார்க்கமாக அங்கு செல்ல திட்டமிட்டபோது காவல்துறையினர் தடை உத்தரவு இருப்பதாக காரணம் காட்டி தடுத்தனர். ராகுல் காந்தி கீழே இறங்கி நடந்து செல்ல முற்பட்டபோது போலீசார் அவரை பிடித்து கீழே தள்ளினர்.
இதன் பிறகு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை கைது செய்தனர். இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி செல்ல முடிவெடுத்தனர்.
கடந்த முறையை போல காவல் துறை தங்கள் தலைவர்கள் மீது கை வைத்து விடக்கூடாது என்பதற்காக நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ராகுல் காந்தியுடன் அணி வகுத்துள்ளனர். அவர்கள் காங்கிரசையும் அதன் தலைவர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.
காங்கிரஸ் கட்சியினர் ஆக்ரோஷமாக இருப்பார்கள் என்பதை அறிந்த காவல்துறையும் டெல்லி-நொய்டா எல்லையில் நூற்றுக்கணக்கான போலீசாரை குவித்தது. தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் பீச்சி அடிக்கும் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
காவல்துறையினர் மூன்று அடுக்குகளாக நிற்கிறார்கள். ஒவ்வொரு அடுக்காக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உடைத்துக் கொண்டு வந்தாலும் அவர்களை விடக் கூடாது என்பதற்காக மூன்று பிரிவாக போலீசார் அணி வகுத்து நின்றனர்.
காங்கிரஸ் தொண்டர்களில், திரளாக பெண்களும் வருவதால் அவர்களை தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான பெண் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொண்டர்கள் நெருங்கியதும், அவர்களை போலீஸ் தடுத்தனர். அப்போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவர் வாகனங்களையும் போலீசார் மேற்கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. இந்த தள்ளு முள்ளு காரணமாக பல கி.மீ தூரத்திற்கு பிற வாகனங்கள் அணி வகுத்து நின்கின்றன. ஆம்புலன்சுகளும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
No comments:
Post a Comment