Latest News

10% உள் ஒதுக்கீட்டை 7.5% ஆகக் குறைத்து 100 மாணவர்களின் கல்வி வாய்ப்பைத் தட்டிப் பறித்தது ஏன்?- முதல்வருக்கு தங்கம் தென்னரசு கேள்வி

 

மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு பரிந்துரைத்தும், அதனை 7.5% ஆகக் குறைத்து கூடுதலாக 100 மாணவர்கள் கல்வி பயிலும் வாய்ப்பைத் தட்டிப் பறித்தது ஏன் என்பதற்கான காரணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? என்று தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை எல்லா வகையிலும் சீர்குலைப்பதில் முன்னணி வகித்துவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏதோ அவரால்தான் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கான கனவு நிறைவேறி வருவதைப்போல, தான் போகும் இடம் எல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கின்றார்.

'நீட்' தேர்வைத் தமிழ்நாட்டிற்குள் அனுமதித்துவிட்டு; 'இனி செட்' (INI-CET) தேர்வு குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வாய்மூடி மெளனியாக இருந்து, தன் பதவி சுகத்தை மட்டும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் காவு கொடுக்கத் துணிந்துவிட்ட முதல்வர், தான்தான் மாணவர்களின் எதிர்காலத்தைக் காக்க வந்த ரட்சகன் போலப் பேசுவது நகைப்பிற்குரியது.

தமிழகத்தில் பயிலும் மாணவர்களில் ஏறத்தாழ 40 சதவீதம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் என்ற நிலையில், ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டை 10 சதவீதமாக வரையறுத்துப் பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையினைக் கூட அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அதிலும் தன் திருக்கரத்தை வைத்து அதை 7.5 சதவீதமாகக் குறைத்தது யாருடைய அரசு என்பதைத் எடப்பாடி பழனிசாமி சொல்லத் தயாரா?

என்ன அடிப்படையில் இவ்வாறு குறைக்கப்பட்டது; அதன் காரணம் என்ன என்று சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் எழுப்பப்பட்ட குரல்களுக்கு எந்தவிதமான பதிலையோ அல்லது விளக்கத்தையோ இன்றுவரை எடப்பாடி பழனிசாமியின் அரசு வெளிப்படையாகத் தெரிவிக்காததன் மர்மம்தான் என்ன?

அவ்வாறு 7.5 சதவீதமாகக் குறைத்ததன் காரணமாக இன்னும் ஒரு 100 மாணவர்கள் கூடுதலாக மருத்துவப் படிப்புகளில் இடம்பெறும் வாய்ப்பைத் தட்டிப் பறித்தது, இன்று வெட்கம் ஏதும் இல்லாமல் வீண் பெருமை பேசிக்கொண்டு, வினா எழுப்பும் செய்தியாளர்களிடம் வீராப்புக் காட்டிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அல்லவா?

இன்னும் சொன்னால் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக அனுமதி வழங்காதபோது, முதல்வர், அரசின் சார்பாக உரிய அழுத்தத்தை அளிக்க முன்வராத நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்களை ஒரே நாளில் ஆளுநர் மாளிகை முன்னால் திரளச் செய்து, இந்தச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதலளிக்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன், ஆளுநருக்கு ஜனநாயக நெறிப்படி அழுத்தம் அளித்து, அதில் வெற்றி கண்டவர் திமுக தலைவர் ஸ்டாலின் அல்லவா?

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குப் பெறுவதில் படுதோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் மறைமுகமாக மத்திய பாஜக அரசோடு இணைந்து அதற்குப் பட்டுக் கம்பள வரவேற்பையும் அளித்துவிட்டு இன்றைக்கு ஏழை - எளிய மாணவர்களுக்கு உதவி புரிய வந்த உத்தமர் எனப் பகல் வேஷம் போடும் முதல்வரின் முகத்திரை கிழிந்து தொங்குவதையும்; அதன் உள்ளே தெரியும் துரோக முகம் அவர்களை யார் என்று தெளிவாகவே அடையாளப்படுத்துவதையும் நாட்டு மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றார்கள்.

எனவே, அரசு உதவி பெறும் பள்ளிகள் எல்லாம் தனியார் பள்ளிகள் என்பது போன்ற புதிய, அரிய கண்டுபிடிப்புகளை அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் முதல்வர், இனியாவது ஏன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு 7.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வேண்டுகின்றேன்'.

இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.