Latest News

தமிழகத்தில் ஆதரவற்று சாலையில் சுற்றும் நபர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொறியியல் பட்டதாரி! 18 மாவட்டங்களில் தொடரும் சேவை!

சாலைகளில் பயணிக்கும் போது பலர் யாசகம் வேண்டி கையேந்தும் காட்சியை கடந்திருப்போம். ஒருசிலர் அவர்களுக்கு பணமும், ஒரு சிலர் அவர்களுகு ரணமும் தருவார்கள். இப்படி பிச்சை எடுக்கிறீர்களே என்று கேவலமாய் விமர்சித்தவர்களும் உண்டு. ஆனால் என்றாவது அவர்கள் யார்? எதற்காக பிச்சை எடுக்கிறார்கள்? என்று யாரும் யோசித்திருக்க வாய்ப்பில்லை. அப்படி யோசித்து தனது வாழ்க்கை பயணத்தையே மாற்றிக்கொண்டவர் தான் நவீன் குமார். திருச்சி முசிறியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் படிப்பில் நம்பர் ஒன். அதனால் பொறியியல் கல்லூரி வரை மதிப்பெண்களை வைத்தே முன்னேறிவிட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கேட் நுழைவுத் தேர்வுக்காக சேலத்தில் பயிற்சி பெற்று வந்த இவருக்கு ஒரு சில நிகழ்வுகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பயிற்சி முடிந்து தினமும் இரவு 15 ரூபாயை வைத்துக் கொண்டு சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் நவீன். அப்படி இருக்க ஒருநாள் இரவு அங்கிருந்த கோவில் ஒன்றின் அருகில் வயதான மூதாட்டி ஒருவர் உறவினர்களால் கைவிடப்பட்டதாகவும், சொந்த ஊருக்கு செல்ல பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அப்போது தன் கையில் இருந்த அந்த 15 ரூபாயை அவருக்கு கொடுத்து பட்டினியாக படுத்துள்ளார் நவீன். இதுபோன்ற சம்பவங்களை அடிக்கடி சந்தித்த இவருக்கு யாசகர்களே இல்லாமல் செய்ய வேண்டும் என்ற லட்சியம் உதித்துள்ளது. அதன் விளைவு தான் இன்று அட்சயம் அறக்கட்டளை என்ற பெயரில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 400 பேருடன் பொதுசேவை செய்து யாசகர்களை மீட்டு வருகிறார். இதில் பலருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

யாசகம் கேட்பவரை மீட்கும் அட்சயம் அறக்கட்டளை உறுப்பினர்கள்

2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அட்சயம் அறக்கட்டளை மூலம் இதுவரை 5,000 யாசகர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளதோடு, 547 பேருக்கு வேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவருக்கு உடல் ஊனமுற்ற தந்தையும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தாயும் உள்ளனர். இவர்களை பார்த்த நவீனுக்கு நிச்சயம் யாசகர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. உடனே அவர் தனது நண்பர்களையும், கல்லூரி பேராசிரியர்களையும் அணுகியுள்ளார். ஆனால் அதில் பலர் யாசகர்களை மீட்பது படிப்பையும், எதிர்காலத்தையும் வீணடித்து விடும் என்று எச்சரித்து அவரை குழப்பியுள்ளனர்.

சிலர் இந்திய அரசாங்கமே இந்த பிரச்னையை எப்படி கையாள்வது என்று தெரியாமல் இருக்கும் சூழலில், உன்னால் என்ன செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனாலும் அவர் தனது லட்சியத்தில் தெளிவாக இருந்துள்ளார். இதற்கு நடுவே ஒரு யாசகரை மீட்டு அவருக்கு வாட்ச்மேன் வேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த நிகழ்வு அவருக்கு உத்வேகம் அளிக்க உடனே 2014-ம் ஆண்டு யாசகர்கள் இல்லா இந்தியாவை உருவாக்க அட்சயம் அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். அறக்கட்டளை வேலைகளுக்கு நடுவே பொறியியலில் முதுகலை பட்டமும் படித்துள்ளார்.

அறக்கட்டளையை ஆரம்பித்தவுடன் இவர் சந்தித்த முதல் பிரச்னை பணம் தான். தேவையான பண வசதி அவருக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து சமீபத்தில் பேசிய நவீன் குமார், "என்னால் வீட்டில் பணம் கேட்க முடியவில்லை மற்றும் நன்கொடை பெறவும் முடியவில்லை. எனது நண்பர்களிடம் நன்கொடை கேட்ட போது நீயும் பிச்சை கேட்பது போல செயல்படுகிறாயே என்று என்னை மிகவும் கேவலமாக பேசினார்கள். ஆனாலும் நான் தொடர்ந்து நன்கொடை சேகரிக்க ஆரம்பித்தேன். ஒருசிலர் 500 ரூபாய், 1000 ரூபாய் கொடுப்பார்கள். ஒரு யாசகம் கேட்பவரை நாங்கள் மீட்டு அவருக்கு மருத்துவ உதவி மற்றும் இதர தேவைகளுக்கு 4000 ரூபாய் செலவாகும். சில சமயங்களில் அட்சயம் அறக்கட்டளையை சேர்ந்த தன்னார்வலர்கள் சொந்த பணத்தில் உதவி செய்வார்கள். பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோவில்கள் மற்றும் பொது இடங்களில் யாசகம் கேட்டு சுற்றித்திரிபவர்களை கண்டுபிடித்து அவர்களிடம் பேசி அவர்களின் பிரச்னையை முதலில் கண்டுபிடிப்போம்.

யோகி ஆதித்யநாத்திடம் விருது பெரும் நவீன் குமார்

சில சமயங்களில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் தொலைபேசியில் கூட எங்களுக்கு இவர்கள் பற்றி தகவல் கொடுப்பார்கள். தினமும் சுமார் 10 தொலைபேசி அழைப்புகள் வரும். யாசகம் கேட்பவர்களை 19 வகைகளாக பிரித்து தான் சிகிச்சை கொடுப்போம். ஒருசிலர் வேலைக்கு செல்ல தகுதி பெறுவார்கள். சிகிச்சை முடிந்து தையல், வாட்ச்மேன், பெயிண்டர்கள், உணவகங்களில் சர்வீஸ் மேன் வேலை என பல இடங்களில் வேலைக்கு செல்வார்கள். ஒருசிலருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும். அவர்களை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைக்க முயற்சிப்போம். மனநல ஆலோசகர்கள், கல்லூரி மாணவர்கள் என பலர் தன்னார்வலர்களாக வந்து உதவி செய்வார்கள். யாசகர்களை கண்டுபிடித்ததும் அவர்களை சுத்தம் செய்து நல்ல உணவு மற்றும் துணிகளை வழங்கி பிறகு மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வோம்." என்று பேசியுள்ளார்.

அட்சயம் அமைப்பின் செயல்பாடுகளுக்காக சிறந்த சமூக சேவகருக்கான விருது, இந்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற இளைஞர் திருவிழாவில் சிறந்த இளைஞர் விருதும் நவீன்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. கூகுளில் அட்சயம் அறக்கட்டளை என்று தேடினாலே இந்த அமைப்பின் முழு தகவல்களும் கிடைத்துவிடும். அவர்களின் செயல்பாடுகளையும் பார்க்கமுடியும்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.