Latest News

"பட்டாசு இல்லாத தீபாவளி தான் கொண்டாட முடியும்": உற்பத்தி குறைந்துள்ளதால் தவிக்கும் உரிமையாளர்கள்! திணறும் தொழிலாளர்கள்!

 

தீபாவளி பண்டிகை இந்த மாதம் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கரோனா கொடூரத்துக்கு நடுவே வரும் இந்த பண்டிகை சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான் என்ற சூழலில் இந்த ஆண்டு பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்கள் தங்களின் அவல நிலையை விளக்கியுள்ளனர்.

சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் கூலி வேலை செய்யும் மாரீஸ்வரி என்பவர் பேசுகையில், "எங்கள் வீட்டில் 5 பேர் உள்ளோம். மார்ச் மாதம் முதல் கூலி வேலையே இல்லை. கடந்த 2 மாதங்களாக தான் வேலைக்கு வருகிறோம். அதிலும் தினமும் வேலை இருப்பதில்லை. வாரத்தில் 4 நாட்கள் வேலை கிடைப்பதே பெரிதாக உள்ளது. சென்ற ஆண்டு பட்டாசு தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக சென்ற போது எங்களுக்கு ஓவர் டைம் எல்லாம் கிடைக்கும். வருமானமும் ஓரளவுக்கு இருந்தது. இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தியும் குறைந்துவிட்டது. எங்கள் முதலாளியிடம் தினமும் வேலை வேண்டும் என்று கேட்டபோது ஆர்டர் வந்தால் தானே வேலை கொடுக்க முடியும் என்று சொன்னார். அவருக்கும் கஷ்டம் தான். ஒரு நாளைக்கு டீ, போண்டா செலவே 50 ரூபாய் ஆகும். அதிலும் வேலை இல்லாமல் இருந்த 6 மாதங்கள் வட்டிக்கு காசு வாங்கி தான் சாப்பிட்டோம். இப்போது அந்த காசையும் கொடுக்க முடியாமல் வட்டி மட்டுமே செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டு மோசமான ஆண்டாக அமைந்துவிட்டது. எங்களுக்கு மாற்று தொழிலும் தெரியாது. பட்டாசு கடைகள் இங்கு திறந்து தான் உள்ளது. ஆனாலும் வாங்க யாரும் வருவதில்லை." என்று தனது கவலையை பதிவு செய்தார்.

சிவகாசியில் 16 ஆண்டுகளாக பட்டாசு ஆலை வைத்திருக்கும் கனிமுத்து என்பவர் பேசுகையில், "கரோனா மூலம் அதிக அளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெரிய முதலாளிகளும் பொருளாதார சரிவை தான் சந்தித்து வருகின்றனர். நானே வேறு தொழிலுக்கு மாறலாம் என்று யோசித்து 20 ஆட்டுக்குட்டிகளை வாங்கியுள்ளேன். ஆனால், அது எப்படி கை கொடுக்கும் என்பது தெரியவில்லை. என்னை நம்பி என் பட்டாசு ஆலையில் வேலை பார்க்கும் நபர்களுக்கும் என்னால் உதவ முடிவதில்லை. கரோனா ஒருபக்கம் என்றால் சீன பட்டாசுகள் வருகை மறுபக்கம். பட்டாசு ஆலைக்கு வாடகை கூட தரமுடிவதில்லை. எந்த பெரிய ஆர்டரும் வரவில்லை. மொத்தத்தில் இந்த தீபாவளி வழக்கமானதாக எங்களுக்கு இருக்காது." என்று தெரிவித்தார்.

வழக்கமாக சிவகாசியில் தீபாவளி பட்டாசு ஆர்டர்கள் குவியும். பண்டு போட்டு பட்டாசு வாங்கும் தொழில் செய்பவர்களும் ஆர்டர்கள் வழங்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு கரோனா தொற்றோடு பல சறுக்கள்கள் உள்ளதால், பண்டு கட்டிய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கட்டிய தொகையையே பலர் திருப்பி அளித்து வருகின்றனர். இதனால் வழக்கமாக வரும் ஆர்டர்கள் வெகுவாக குறைந்துள்ளதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Pic Coutesy - The Hindu

லாக்டவுன் சமயத்தில் பட்டாசு உற்பத்தி முடங்கியது. பொதுமக்களும் பட்டாசு வாங்கி தீபாவளி கொண்டாடும் அளவுக்கு இல்லை என்பதை உணர்ந்து சில்லறை வியாபாரிகளும் இந்த ஆண்டு பட்டாசு வாங்க முன்வரவில்லை. சேலம் மாவட்டத்தில் பட்டாசு விற்பனை செய்ய உரிமம் பெற கடந்த ஆண்டு 314 பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 241 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதனால் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டும் பெரிதாக யாரும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகின்றது.

இதுகுறித்து பேசியுள்ள பட்டாசு மொத்த விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி, "இந்த ஆண்டு பட்டாசு விற்பனை செய்ய உரிமம் கேட்டுள்ளவர்களில் பலர் கடந்த ஆண்டு விற்பனைக்கு வாங்கி மீந்துள்ள பட்டாசுகளை விற்பனை செய்ய தான் திட்டமிட்டுள்ளனர். ஏப்ரல், மே மாதங்களிலேயே பட்டாசுகளுக்கான ஆர்டர்கள் கொடுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு லாக்டவுன் காரணமாக உற்பத்தி குறைந்தது. வழக்கமாக செய்யப்படும் பட்டாசுகளை விட இந்த முறை 30% பட்டாசுகள் தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதனால் குறைவான அளவு பட்டாசுகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பல பட்டாசுகளின் விலையும் 10% வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் சில்லறை வியாபாரிகளும் பட்டாசு வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இதனால் இந்த ஆண்டு பட்டாசு இல்லாத தீபாவளியாக தான் பலருக்கும் இருக்கும்." என்று கூறியுள்ளார்.

வழக்கமாக சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை பெரிய அளவில் நடைபெறும். இந்த ஆண்டு வரும் 6-ம் தேதி முதல் பட்டாசு விற்பனை அங்கு தொடங்க உள்ளது.தீவுத்திடலில் தீபாவளிக்கு 20 நாட்களுக்கு முன் தொடங்கப்படும் பட்டாசு விற்பனை, இந்த ஆண்டு 10 நாட்களுக்கு முன்பு தான் தொடங்குகிறது. குறுகிய கால டெண்டரை சுற்றுலா வளர்ச்சிக்கழகம் விட்டுள்ளது. நவம்பர் 6-ம் தேதி தொடங்கும் இந்த விற்பனை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. 70 கடைகள் இருக்கும் இடத்தில் இப்போது 50% கடைகள் மட்டுமே திறக்க அனுமதி கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.