
திண்டுக்கல் சிறுமி கொலையில் விடுதலையான இளைஞரை மேல்முறையீடு மனு விசாரணை முடியும் வரை சிறையில் அடைக்கக்கோரிய மனுவில் சம்பந்தப்பட்ட இளைஞர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குரும்பபட்டியில் 13 வயது சிறுமி ஒருவர், கடந்த ஆண்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் வீடு அருகே வசித்த 19 வயது கிருபானந்தம் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றம் விசாரித்து, கிருபானந்தமை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து உயர் நீதிமன்றக் கிளையில் கிருபானந்தம் விடுதலையை ரத்து செய்து தண்டனை வழங்கக்கோரி வடமதுரை காவல் ஆய்வாளர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணவள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வடமதுரை காவல் ஆய்வாளர் புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
கிருபானந்தம் ஆடையில் இருந்த ரத்த மாதிரியும், சிறுமியின் பெற்றோரின் ரத்த மாதிரியும் மரபணு சோதனையில் ஒத்துப்போகின்றன. இதன் அடிப்படையில் கிருபானந்தத்துக்கும் தண்டனை வழங்க வேண்டும். தற்போது கிருபானந்தம் வெளியே இருக்கிறார். விசாரணை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சிறுமியின் பெற்றோருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே மேல்முறையீடு மனு மீதான விசாரணை முடியும் வரை கிருபானந்தத்தை சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனு தொடர்பாக கிருபானந்தம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment