Latest News

நான் எச்சரித்திருக்காவிட்டால் அண்ணா பல்கலைக்கழகம் இல்லாமல் போயிருக்கும்: ஸ்டாலின் பேச்சு

அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது பதவிக் காலத்தில் உயர்கல்வித் துறையையும் காப்பாற்றவில்லை. தனது அமைச்சர் பதவிக்கான அதிகாரத்துடனும் செயல்படவில்லை. மொத்தத்தில் அமைச்சர் என்று சொல்லிக்கொள்ள எதுவுமே செய்யவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட திமுக சார்பில் இன்று நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில் காணொலி வாயிலாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

''இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் உயர்கல்வித் துறைக்கு அமைச்சராக இருக்கிறார். அவர் பெயர் கே.பி.அன்பழகன். அவரால் உயர் கல்வித்துறைக்கு ஏற்பட்ட நன்மைகள் என்ன? உயர் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்பதாவது அவருக்குத் தெரியுமா?

அண்ணா பல்கலைக்கழகத்தையே தமிழக அரசுக்குச் சொந்தமில்லாமல் தனியாக மடைமாற்றம் செய்யத் துணைவேந்தர் சூரப்பா முயற்சி செய்தது, அமைச்சர் அன்பழகனுக்குக் களங்கம் அல்லவா? அமைச்சருக்குத் தெரிந்து இதனை சூரப்பா செய்தாரா? தெரியாமல் செய்தாரா?

உயர்கல்விச் செயலாளரின் ஒப்புதலோடுதான் இந்த முயற்சிகளைச் செய்தேன் என்று சூரப்பா சொன்னாரே? அதற்கு அன்பழகனின் பதில் என்ன? சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகத்தைக் கபளீகரம் செய்யப் பார்க்கிறார் என்று நான் அறிக்கை வெளியிட்ட பிறகுதான் தமிழக அரசு, திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல மாட்டிக்கொண்டது. சூரப்பா செய்வது தவறு என்று சொன்னது.

நான் அறிக்கை வெளியிட்டிருக்காவிட்டால், அண்ணா பல்கலைக்கழகத்தை சூரப்பா சுருட்டிக் கொண்டு ஓடி இருப்பார். அதுதான் உண்மை. அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்த்ததை அமைச்சர் அன்பழகன் எதிர்த்தாரா?

சூரப்பாவின் மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டது அமைச்சருக்குத் தெரியுமா? தெரியாதா? ஒரு பணியிடத்துக்கு சம்ஸ்கிருதம் தெரிந்தவரை மட்டும்தான் போட வேண்டும் என்று சூரப்பா சொன்னது அமைச்சருக்குத் தெரியுமா? தெரியாதா?

கரோனா காலம் என்பதால் அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்தது. ஆனால், அதனை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தை ஏற்க வைக்க அமைச்சர் அன்பழகனால் முடியவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தை ஏற்றுக்கொள்ள வைக்க அமைச்சரால் முடியவில்லை.

அதற்கு முன்னதாகவே மாணவர்களின் மனித தெய்வமே என்று விளம்பரம் செய்து கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அரசு உத்தரவை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ஏற்காதபோது அதிமுக அரசு என்ன செய்தது?

இதைவிட இன்னொரு கொடுமையான செய்தி. கலைக் கல்லூரிகளில் அரியர் தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. ஆனால், அந்த மாணவர்களை முதுகலை படிக்க சில அரசுக் கல்லூரிகளே அனுமதி மறுத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது.

மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவித்ததும் அரசுதான். தேர்ச்சி அடைந்தது செல்லாது என்று சொல்வதும் அரசுக் கல்லூரி நிர்வாகம்தான் என்றால், இந்த அரசாங்கத்துக்கு நிரந்தரமான கொள்கை எதுவும் கிடையாதா? எதற்காக மாணவர்களை ஏமாற்றுகிறீர்கள்?

புதிய கல்விக் கொள்கையை இந்த அரசு ஏற்றுக்கொள்கிறது. ஆனால், உயர்கல்விக்கு ஏராளமான தடைகளை அக்கல்வி முறை கொண்டு வரப்போகிறது. அதனை இவர்கள் எதிர்க்கவில்லை. அனைத்துக் கல்லூரிகளுக்கும் நுழைவுத்தேர்வு கொண்டு வரப்போகிறார்கள். அதனை அமைச்சர் அன்பழகன் எதிர்க்கவில்லை.

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார். அதனை இந்த அமைச்சர் அன்பழகன் மறுக்கவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்துக்குக் கர்நாடகாவில் இருந்து ஒருவர். சட்டப் பல்கலைக்கழகத்துக்கு ஆந்திராவில் இருந்து ஒருவர், இசைப் பல்கலைக்கழகத்துக்கு கேரளாவில் இருந்து ஒருவர் என்று வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களையே ஆளுநர் நியமிக்கும்போது அதிமுக அரசு தட்டிக் கேட்டதா?

கரோனா சிகிச்சைக்காக அண்ணா பல்கலைக்கழகத்தை நோயாளிகள் தங்க வைக்கப்படும் முகாமாக சென்னை மாநகராட்சி அறிவித்தது. ஆனால், அதனை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கவில்லை. இவ்வளவுதான் உயர் கல்வித்துறை அமைச்சருக்கு அதிகாரமே இருக்கிறது.

அமைச்சர் கே.பி.அன்பழகன் தனது பதவிக் காலத்தில் உயர்கல்வித் துறையையும் காப்பாற்றவில்லை. தனது அமைச்சர் பதவிக்கான அதிகாரத்துடனும் செயல்படவில்லை. மொத்தத்தில் அமைச்சர் என்று சொல்லிக்கொள்ள எதுவுமே செய்யவில்லை''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Source : www.hindutamil.in

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.