
மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மையில் தேசிய அளவில் மதுரை மாநகராட்சி இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
கடந்த கால் நூற்றாண்டு முன்பு வரை மதுரை மாவட்டத்தில் விவசாயம் செழித்து நடந்தது. வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுண்டு ஓடியதால் குடிநீருக்கும் பற்றாக்குறை வரவில்லை.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீரில்லாமல் வைகை ஆறு வறண்டுகிடக்கிறது. விவசாயமும் பெரியாறு பாசன தண்ணீர் வந்தால் மட்டுமே நடக்கிறது. நிலத்தடிநீர் 1,000 அடிக்கு கீழ் சென்றது. வைகை அணையில் தண்ணீர் இருந்தால் மட்டுமே மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு வராமல் இருக்கிறது.
கண்மாய்கள், குளங்கள் பராமரிப்பு இல்லாமல் வறண்டதால் மதுரைக்கான குடிநீர் ஆதாரமும், நிலத்தடி நீர் ஆதாரமும் கேள்விகுறியானது. அதனால், மழைநீரை சேகரிக்க வேண்டிய கட்டாயநிலைக்கு மதுரை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் தள்ளப்பட்டன.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சி நிர்வாகம், மதுரையின் நீர் ஆதாரத்தை பெருக்க வீடுகள் முதல் குளங்கள் வரை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தும் நடவடிக்கயை தொடங்கியது.
மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்தாத கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதியை நிறுத்தி வைத்தது. அதுபோல், மாநகராட்சி நகர்ப் பகுதியில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள 33 குளங்களையும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்றும் நடவடிக்கை தொடங்கியது.
இதில், 11 குளங்களை மாநகராட்சி நேரடியாக நிதி ஒதுக்கியும், ஸ்பான்சர் மூலமாகவும் தூர்வாரியது. தற்போது அந்த குளங்களில் வடகிழக்கு பருவமழையில் பெய்யும் தண்ணீர் சேகரிக்கப்படுகிறது.
16 குளங்கள் தற்போது தூர்வாரப்பட்டுக் கொண்டிருக்கிறது. நகர்ப்பகுதியில் குடிநீருக்காக போடப்பட்ட பயன்படாத 412 ஆழ்துளை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றியது.
மாநகர் பகுதியில் 266 தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. 40 ஆண்டிற்கு பிறகு வண்டியூர் மாரியம்மன் குளத்திற்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
மழைநீரும் இக்குளத்தில் சென்றடைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தல்லா குளம் பெருமாள் கோயில் தெப்பக்குளம், டவுன் ஹால் ரோடு கூடழகர் பெருமாள் கோயில் குளம் போன்றவற்றில் மழைநீர் கொண்டு சென்றது.
அதனால், மதுரை நகரின் நிலத்தடி நீர் மட்டம் ஒரளவு உயரத்தொடங்கியுள்ளது. மாநகராட்சியின் இந்த நீர் பாதுகாப்பு மற்றும் சேகரிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் 'ஜல் சக்தி அபியான்" என்ற திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டன.
இந்தத் திட்டம் மூலம் மத்திய அரசு நாடு முழுவதுமே உள்ளாட்சி அமைப்புகளில் இந்த நீர் மேலாண்மை திட்டங்களை ஊக்குவித்தது. தற்போது இதில் தேசிய அளவில் நகர்ப் பகுதி உள்ளாட்சி அமைப்புகள் அடிப்படையில் மதுரை மாநகராட்சி இரண்டாவது இடம் பெற்று சாதனைப்படைத்துள்ளது.
அந்தமான் நிக்கோபார் போர்ட் பிளேயர் மாநகராட்சி முதல் இடத்தை பெற்றது. இரண்டாவது இடத்தை மதுரை மாநகராட்சி இடம்பிடித்துள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேயர் மாநகராட்சி முதல் இடத்தை பிடித்துள்ளது.
விரைவில் டெல்லியில் நடைபெறவிருக்கும் விழாவில் மாநகராட்சி ஆணையர் விசாகன் ஐஏஎஸ் விருதினை பெறவிருக்கிறார்.
No comments:
Post a Comment