
வரும் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவையில் அவர் செய்தியாளர்களிடம் இன்று (16-ம் தேதி) கூறியதாவது:
''பல்வேறு தரப்பினரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். கோவையில் தொழிலதிபர்கள் 120 பேரும், கரூரில் திமுகவைச் சேர்ந்த 1,500 பேரும் இணைந்துள்ளனர். இதேபோல, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பலரும் பாஜகவில் இணைய உள்ளனர். அண்ணாமலையைப் போல பல அரசு அதிகாரிகளும் பதவியிலிருந்து விலகி, பாஜகவில் இணையத் தயாராக உள்ளனர்.
இரண்டாவது கட்ட வேல் யாத்திரை திட்டமிட்டபடி தருமபுரியில் நாளை (நவ.17) தொடங்குகிறது. இந்த யாத்திரை, கோவைக்கு வரும் 22-ம் தேதி வருகிறது. இதில் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா கலந்து கொள்கிறார்.
வரும் 21-ம் தேதி தமிழகம் வரும் மத்திய அமைச்சர் அமித் ஷா, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அவரது வருகை கட்சியினருக்கு ஊக்கமும், தைரியமும் அளிக்கும். பல்வேறு மாநிலத் தேர்தல்களில் அவர் வெற்றியைத் தேடித் தந்துள்ளார். எனவேதான், அவரது வருகை எதிர்க் கட்சிகளுக்குப் பயத்தைக் கொடுக்கும் என நான் தெரிவித்தேன். தமிழகத் தேர்தலில் அவரது வருகை மாற்றத்தை ஏற்படுத்தும்.
மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி, அமித் ஷாவைச் சந்திப்பாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது. அதேபோல, அவர் பாஜகவில் இணைவது குறித்தும் என்னுடன் பேசவில்லை. அதிமுக கட்சி நாளேட்டில் வந்த செய்தி குறித்தும் எனக்குத் தெரியாது. முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் கட்சியின் தேசியத் தலைமைதான் முடிவெடுக்கும்.
கந்தசஷ்டி கவசம் அவமானப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், மனவேதனையடைந்த முருக பக்கதர்களுக்கு ஆறுதல் கூறவும்தான் வேல் யாத்திரை நடத்தப்படுகிறதே தவிர, அரசியல் நோக்கத்துக்காக அல்ல. அதேபோல, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதும், கரோனா முன்களப் பணியாளர்களைப் பாராட்டுவதும் இதன் மற்றொரு நோக்கமாகும்.
டாஸ்மாக் கடைகள் உள்படப் பல்வேறு இடங்களில் கரோனா நோய்த் தடுப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. வேல் யாத்திரை தொடர்பான அதிமுகவின் குற்றச்சாட்டுக்குப் பதில் கூறத் தயக்கம் கிடையாது. தமிழக அரசும், காவல்துறையும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது.
கூட்டணிக்கும், கொள்கைக்கும் வேறுபாடு உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஏற்பட்ட கூட்டணி இப்போதும் நீடிக்கிறது. தேர்தலின்போது அதிமுக, பாஜக இணைந்து செயல்படும். வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும். அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்வார். அவரைப் பணி செய்ய விடாமல் தடுக்கவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கருதுகிறோம்''.
இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
No comments:
Post a Comment