Latest News

India vs Pakistan: "கில்கிட் விஷயத்தில் இம்ரான் கான் எல்லை மீறக்கூடாது" - இந்தியா கடும் எச்சரிக்கை

காஷ்மீர் விவகாரத்தில் மற்றொரு திருப்பமாக தனது நிர்வாகத்தின்கீழ் இருக்கும் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்துக்கு தற்காலிக சிறப்பு மாகாண அந்தஸ்து வழங்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

ஆனால், அந்த பிராந்தியத்தை தனது ஒருங்கிணைந்த பகுதி எனக்கூறும் இந்திய வெளியுறவுத்துறை, "சட்டவிரோதமாக அங்கு மேற்கொள்ளப்படும் மாற்றம் எதையும் இந்தியா நிராகரிக்கும்" என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, "1947ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தத்தின்படி கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியம், ஜம்மு காஷ்மீரின் சட்டப்பூர்வமான ஒருங்கிணைந்த பகுதி" என்று தெரிவித்தார்.

"இந்த விவகாரத்தில் இந்திய பிராந்தியங்களின் அமைப்பை மாற்றுவதற்கு பதிலாக, அந்த பகுதிகளில் மேற்கொண்டுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்து உடனடியாக பாகிஸ்தான் வெளியேற வேண்டும். பிராந்திய விவகாரத்தில் பாகிஸ்தான் எல்லை மீறக்கூடாது" என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், கில்கிட்-பால்டிஸ்தான் மக்களின் நீண்ட கால கனவை நான் நிறைவேற்றப்போகிறேன். இந்த பிராந்தியத்துக்கு சிறப்பு மாகாண அந்தஸ்தை வழங்குகிறேன். இதனுடன் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக பொருளாதார தொகுப்புதவி நிதியும் வழங்க பரிசீலித்து வருகிறேன் என்று தெரிவித்தார்.

ஆனால், இந்த பிராந்தியத்துக்கு எத்தகைய நிதி வழங்கப்படும் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. 

கில்கிட் பால்டிஸ்தான் சுதந்திர தினத்தை, பாகிஸ்தான் படையினரின் உயிர்த்தியாகம் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான அந்நாட்டின் நடவடிக்கையை விவரிக்க இம்ரான் கான் பயன்படுத்திக் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.

அந்த நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறித்தும் அவர் பேசினார்.

"இந்தியாவில் நரேந்திர மோதி அரசு, வெறும் இந்துத்துவா சிந்தனையை மட்டுமே நம்புகிறது. அந்த சித்தாந்தத்தின் பெயரால் அப்பாவி காஷ்மீரிகள் கொல்லப்படுகிறார்கள்," என்று இம்ரான் கான் பேசினார்.

பாகிஸ்தான் வளமும் முன்னேற்றமும் பெற, வலுவான சட்டம் ஒழுங்கை பேணுவது அவசியம் என்றும் அதை செய்யும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் நீதித்துறைக்கும் நற்சான்றிதழ் தராமல் மோதியின் குரலாக இங்கே சிலர் ஒலிக்கிறார்கள் என்று இம்ரான் கான் கூறினார். 

கடந்த வாரம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு சாதகமான கருத்தை எதிர்கட்சி உறுப்பினர்கள் பதிவு செய்ததன் பின்னணியில், இம்ரான் கானின் இந்த உரை அமைந்திருந்ததாக கருதப்படுகிறது.

கில்கிட்-பால்டிஸ்தான் பற்றி பேசும்போது, நாட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள பகுதிகளை மேம்படுத்த அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், சிறப்பு மாகாண அந்தஸ்து மூலம் இந்த பிராந்தியம் வளம் பெறும் என்றும் இம்ரான் கான் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கில்கிட் - பால்டிஸ்தான் ஆளுநர் ராஜா ஜலால் ஹுசேன் மக்பூன் பேசும்போது, வருங்கால தலைமுறைகளுக்கு மிகவும் முக்கியமானதாக இந்த பிராந்திய வளர்ச்சி இருக்கும் என்றும் அதற்கான முயற்சிகளை மிகக் கடுமையாகவே பாகிஸ்தான் முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

எனினும் பாகிஸ்தான் அரசின் விமர்சகர்கள், அந்த பிராந்தியத்தில் வரும் 15ஆம் தேதி பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டியே இதுபோன்ற கருத்தை திடீரென்று இம்ரான் கான் பதிவு செய்வதாக கூறினார்கள். 

இந்தியா கடும் எதிர்வினை

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் கில்கிட்-பால்டிஸ்தான் தற்காலிக சிறப்பு மாகாண அந்தஸ்து தொடர்பான தகவல் வெளி வந்ததும், இந்தியா அதன் வெளியுறவுத்துறை மூலம் எதிர்வினையாற்றியது.

கில்கிட் பால்டிஸ்தான் பிராந்தியத்தில் வரும் 15ஆம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளிவந்தபோது அதை இந்தியா கடுமையாக எதிர்த்தது. இந்தியாவின் பிராந்தியங்களை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளதை மறைக்கவே இதுபோன்ற நடவடிக்கையை அந்நாட்டு அரசு மேற்கொள்வதாக இந்திய வெளியுறவுத்துறை கூறியது.

"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற பகுதி சட்டப்பூர்வமாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. 1947ஆம் ஆண்டில் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் ஒன்றிணைந்தபோது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி அதுவே சட்டப்பூர்வமான நிலைப்பாடு. அந்த ஒப்பந்தம் மாற்றத்துக்கு இடமில்லாத ஒன்று" என இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

பனி போர்த்திய பசுமை மலைகள், மிக நீளமான பள்ளத்தாக்குகள், பழத்தோட்டங்கள் போன்றவை கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தின் அடையாளம்.

ஆனால், "இவற்றை விட கேந்திர ரீதியிலான அந்த பிராந்தியத்தின் அமைப்புதான் அதற்கு உரிமை கோர சம்பந்தப்பட்ட நாடுகளை தூண்டி வருகின்றன. காரணம், இந்த ஒரு பிராந்தியம் மட்டுமே இந்தியா, பாகிஸ்தான், சீனா, தஜக்ஸ்தான் ஆகியவற்றின் எல்லையை இணைக்கிறது. இதனால்தான் இந்த பிராந்தியத்தை விட்டுக் கொடுக்க முடியாது என இந்தியா உறுதியாக நிற்கிறது. காஷ்மீர் தொடர்பான இந்தியாவுக்கு எதிரான மோதலில் இந்த பிராந்தியத்தை ஒரு தருப்புச்சீட்டு போல பாகிஸ்தானும் பயன்படுத்தி வருகிறது" என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

 

 

 

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.