
வேலூர் சிறையில் 14-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனின் உடல் நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் கடந்த 29 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைத்துறை விதிகள்படி, 15 நாட்களுக்கு ஒருமுறை முருகனும், நளினியும் நேரில் சந்தித்து 1 மணி நேரம் பேசி வந்தனர். கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, முருகன் தனது மனைவி நளினியுடன் 'வாட்ஸ் அப்' காணொலி காட்சி மூலம் பேசி வந்தார்.
இதற்கிடையே, கடந்த மாதம் அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர்த்து முருகன் தனக்கு நெருக்கமான வேறு சில உறவினர்களிடம் காணொலி காட்சி மூலம் பேசியதாக, அவர் மீது பாகாயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 'வாட்ஸ் அப்' காணொலி காட்சி மூலம் உறவினர்களிடம் பேச முருகனுக்கு வேலூர் சிறைத்துறை அனுமதி மறுத்தது.
இதைத்தொடர்ந்து, முருகன் தனது தாயார், மகள் மற்றும் உறவினர்களுடன் 'வாட்ஸ் அப்' காணொலி காட்சி மூலம் பேச சிறைத்துறை அனுமதி வழங்க வேண்டும், இல்லையென்றால் தன்னை ஜீவ சமாதி அடைய அரசு அனுமதிக்க வேண்டும் அல்லது பரோல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த மாதம் நவ. 23-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 14-வது நாளாக முருகன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
சிறையில் வழங்கப்படும் உணவுகளை வாங்க மறுக்கும் முருகன் பழம் மற்றும் தண்ணீரை மட்டுமே அருந்துகிறார். சிறைத்துறை அதிகாரிகள் அவருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், தனது போராட்டத்தைக் கைவிட மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முருகனின் உடல்நிலையை சீராக வைத்துக்கொள்ள கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு 2 பாட்டில்கள் குளுகோஸ் ஏற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், முருகனின் உடல் நிலை குறித்து பரிசோதனை செய்த மருத்துவக்குழுவினர் அவரது ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு ஆகியவற்றைத் தொடர்ந்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
முருகனின் உடல் நிலை குறித்த விவரங்களை வேலூர் சிறைத்துறை நிர்வாகம் சார்பில், சிறைத்துறை கூடுதல் டிஜிபிக்கு அறிக்கையாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முருகனின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், மருத்துவக்குழுவினர் மூலம் முருகனின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment