
234 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராக உள்ளது என்று அக்கட்சிப் பொருளாளர் பிரேமலதா ஆண்டிபட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் தேமுதிக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'தற்போது வரை நாங்கள் அதிமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம். இது ஜனநாயக நாடு ரஜினி மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.
இதில் ஏற்படும் சோதனைகள் வேதனைகளைக் கடந்து சாதனை படைப்பது மிகவும் சிரமம்
முதலில் அவர் கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளட்டும் அதன்பின்னர் பேசுகிறேன்.
டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு விவசாயிகளும் உடன்பட வேண்டும். இந்தப் போராட்டத்தை வைத்து கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன.
நிவர், புரெவி புயல்களில் உயிர்பலி ஏற்படவில்லை, மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர், உணவு வழங்கப்பட்டது என்பது ஆறுதலான விஷயம். ஆனால் போதுமான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வீணாக கடலில் கலந்தது
வரும் ஜனவரி மாதம் விஜயகாந்த் தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறும். அதில் எடுக்கும் முடிவுகளின்படி கூட்டணி அமையும். தேர்தல் பிரச்சார நிறைவு நாட்களில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க போட்டியிடும் அத்தனை தொகுதியிலும் வெற்றி பெற்று மக்கள் நலப்பணிகளை தீவிரமாக மேற்கொள்வோம். தே.மு.தி.க 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment