
தஞ்சாவூர் மாவட்டத்தில் இடை விடாத கனமழை காரணமாக 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை இடைவிடாமல் மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பொதுப் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியதால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மல்லிப்பட்டினம், மனோரா கடற்கரை பகுதிகளில் கடல் அலை அதிக உயரத்துக்கு எழுந்ததால், கடல் நீர்மட்டம் 5 அடி அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. மேலும், 200 அடி தொலைவில் உள்ள மனோரா கலங்கரை விளக்கம் வரை கடல்நீர் உட்புகுந்ததால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துக்குள்ளாகினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சூரக்கோட்டை, மேல உளூர், ஆழிவாய்க்கால், தென்னமநாடு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் முன்கூட்டியே சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள், தற்போது கதிர் வந்து, அடுத்த 2 வாரங்களில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக 300 ஏக்கர் வயல்களில் தண்ணீர் தேங்கி, நெல்மணிகள் நீரில் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சிறுமி உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந் தட்டை வட்டம் பசும்பலூரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் யோசனா(7), பசும்பலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக, வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த யோசனா உயிரிழந்தார்.
No comments:
Post a Comment