
கர்நாடகம் மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள கிராமத்தில் அனுமன் கோயிலுக்கு இஸ்லாமியர் ஒருவர் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலத்தை இலவசமாக வழங்கி உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூகத்தில் பல்வேறு வேறுபாடுகளின் அடிப்படையில் பிரிவினை ஏற்பட்டு வரும் அதேவேளையில் மதம் கடந்த சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையிலான சம்பவம் பெங்களூருவில் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள ஹோசகோட் ஹெஹ்ஸியில் அனுமன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான 1633.5 சதுர அடி நிலத்தை எச்.எம்.பாஷா என்பவர் வழங்கியுள்ளார்.
அடிப்படையில் இஸ்லாமியரான பாஷா சிறிய இடத்தில் அனுமன் கோயில் இருந்ததால் அங்கு வரும் பக்தர்கள் சிரமப்படுவதை கண்டு தனது நிலத்தை வழங்க முன் வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
"கோயில் சிறியதாக இருப்பதால் பலர் வழிபாடு செய்யும் போது கஷ்டப்படுவதைப் பார்த்தேன். எனவே, எனது நிலத்தின் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்க முடிவு செய்தேன். எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு ஒப்புக்கொண்டனர்" என பாஷா தெரிவித்துள்ளார்.
கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த அறங்காவலர் பைரே கவுடா, "எச்.எம்.ஜி பாஷா முழு மனதுடன் கோயில் கட்டுமானத்திற்காக நிலத்தை நன்கொடையாக வழங்கினார். கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பாஷா ஒரு இந்து கோயிலைக் கட்ட இவ்வளவு நிலங்களை நன்கொடையாக வழங்கியது அவருடைய பெருந்தன்மையாகும்" எனக் கூறினார்.
மத வேறுபாடு கருதாமல் நன்கொடை வழங்கிய பாஷாவை பாராட்டி கிராம மக்கள் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர்.
No comments:
Post a Comment