
திருச்சியில் இன்று ரயில் மறியலில் ஈடுபட்ட வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் 52 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட 7 சாதி உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து வேளாளர் என அரசாணைப் பிறப்பிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதாக தமிழ்நாடு முதல்வர் கே.பழனிசாமி அண்மையில் அறிவித்தார். இதற்கு வெள்ளாளர் சங்கத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அரசின் இந்த முடிவைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களில் மாநிலம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று (டிச. 06) கோவையில் இருந்து மயிலாடுதுறை சென்ற சிறப்பு ரயிலை வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் தண்டவளாத்தில் அமர்ந்து மறித்தனர். தகவலறிந்து போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் சென்று மறியலைக் கைவிட்டு கலைந்து போகுமாறு கூறியும் கேட்காததால், அவர்களை அப்புறப்படுத்த போலீஸார் முயன்றனர்.
ஆனால், வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் அவர்களுடன் மல்லுக்கட்டியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு நேரிட்டது. இதையடுத்து, ரயில் மறியலில் ஈடுபட்ட 52 பேரை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். இந்த மறியல் காரணமாக ரயில் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. மேலும், இந்தப் போராட்டம் காரணமாக ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதேபோல், தேவேந்திர குல வேளாளர் நலச் சங்கம் சார்பில் தில்லைநகர் பாஸ்போர்ட் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment