
மழைநீர் கால்வாயில் தவறி விழுந்ததில் தாயும் மகளும் பலியான சம்பவம் மற்றும் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து வேளாண் துறையின் மாற்றுத்திறனாளிப் பெண் ஊழியர் பலியான சம்பவம் ஆகியவற்றை மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர், காஞ்சிபுரம் ஆட்சியர், வேளாண் துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தாய், மகள் பலி
சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வந்தவர் கரோலின் பிரிசில்லா (45). இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவரது மகள் இவாலின் (22). கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதை அடுத்து பொருட்கள் வாங்குவதற்காக நேற்று மாலை தனது மகளுடன் கரோலின் தனது இருசக்கர வாகனத்தில் கரோலின் சென்றுள்ளார். ஷாப்பிங் முடிந்து இரவு இருவரும் வீடு திரும்பியுள்ளனர்.
தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். நேற்று மாலை பெய்த மழையால் சாலையோரம் மழைநீர் வடிகாலில் தண்ணீர் தேங்கியிருந்தது. சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் மதுரவாயல் புறவழிச் சாலைக்கும், இணைப்புச் சாலைக்கும் இடையே 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 10 அடி ஆழம், 3 அடி அகலத்திற்கு மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைந்துள்ளது.
அது முறையான பராமரிப்பின்றி, 3 அடி ஆழத்திற்குச் சேறும், சகதியும் நிரம்பி கழிவுநீரும் கலந்து ஓடுகிறது. சாலையை ஒட்டி இடது பக்கம் திறந்த நிலையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. சாலைக்குச் சமமாக மூடியில்லாமல் திறந்த நிலையில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு இந்த வடிகால் சாலையோரம் தொடர்ந்து வரும்.
அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில் தாய், மகள் இருவரும் விழுந்து கால்வாயில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். சாலையில் இருசக்கர வாகனம் மட்டும் அனாதையாகக் கிடக்க, அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் நிறுத்திப் பார்த்தபோது காயத்துடன் கால்வாயில் பிணமாகத் தாய், மகள் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மூன்று வாரங்களில் சென்னை மாநகராட்சி ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளிப் பெண் பலி
காஞ்சிபுரம் களக்காட்டூர் வேளாண்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வந்த மாற்றுத்திறனாளி சரண்யா, அருகில் உள்ள குடியிருப்பில் இருந்த கழிப்பறையைப் பயன்படுத்தியுள்ளார். அப்போது, தொட்டிக்குள் தவறி விழுந்ததில் பலியானார்.
வேளாண்துறை அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லாததே சரண்யாவின் மரணத்திற்குக் காரணம் எனப் பணியாளர்கள் புகார் தெரிவித்த செய்தி வெளியானது.
இந்தச் செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இது சம்பந்தமாக மூன்று வாரங்களில் விளக்கம் அளிக்க வேளாண்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment