
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் தொடர்பாக நாளை எதிர்க்கட்சிகள் கலந்து ஆலோசித்து, ஒருமித்த முடிவு எடுத்து குடியரசுத் தலைவரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் 13-வது நாளாகத் தொடர்கிறது. விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சுவார்த்தை முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமுகமான தீர்வும் எட்டப்படவில்லை.
விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப் பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி இன்று (8-ம் தேதி) விவசாயிகள் பாரத் பந்த் அதாவது நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடந்தது.
இந்த வேலை நிறுத்தத்திற்கு டிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ் கட்சி, சிவசேனா, திமுக, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில் 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடக்கிறது. இதற்கு முன்னதாக விவசாயிகள் அமைப்பினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று மாலை சந்திக்கின்றனர்.
இந்தச் சூழலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று நிருபர்களுக்கு டெல்லியில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் அனைவரும் நாளை கூடி ஆலோசிக்க இருக்கிறோம். அந்த ஆலோசனையில் ஒருமித்த முடிவு எடுத்தபின், நாளை மாலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து முறையிடுவோம் என எதிர்பார்க்கிறேன்.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக எங்கள் கவலைகள், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்டவற்றை குடியரசுத் தலைவரிடம் தெரிவிப்போம். வேளாண் சட்டங்களுக்கு எந்தெந்த கட்சிகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தனவோ அந்தக் கட்சிகள் சேர்ந்து நாளை ஒரு முடிவெடுக்கப் போகிறோம்''.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.
இதற்கிடையே டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று சரத் பவார் சந்தித்துப் பேசினார். அப்போது, புனே மாவட்டத்தில் புரந்தர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக ராஜ்நாத் சிங்கிடம் சரத் பவார் ஆலோசனை நடத்தினார்.
No comments:
Post a Comment