Latest News

உதகை மலை ரயில் சேவை தனியார் மயமாகிறதா? உண்மை என்ன?

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் உதகைக்கு இடையே இயங்கி வந்த மலை ரயில் சேவை தனியார் மயமாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில் அது தொடர்பான உண்மையை நிலையை கண்டறிய முற்பட்டுள்ளோம்.

இந்த மலை ரயில் சேவையை 13 நாட்கள் தனியார் நிறுவனத்தினர் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக பிபிசி அறிகிறது.

ஆனால், அந்த நடவடிக்கை, ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதற்கான ஆரம்பகட்ட செயல்கள் என பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மார்ச் 20ம் தேதி முதல் மேட்டுப்பாளையம் - நீலகிரி இடையேயான மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பொது முடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த சனிக்கிழமை முதல் மீண்டும் உதகை மலை ரயில் சேவை தொடங்குவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், TN43 எனும் தனியார் நிறுவத்தினர் டிசம்பர் 5ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை தினங்கள் உள்ளிட்ட 13 நாட்களுக்கு உதகை மலை ரயில் சேவையை வாடகைக்கு எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தனியார் நிறுவனத்தினரால் இயக்கப்பட்டு வரும் உதகை மலை ரயிலில் ஒரு வழிக் கட்டணமாக ரூ.3,000/- வசூலிக்கப்படுகிறது. பயணத்தின்போது டீ மற்றும் உணவுகள் வழங்கபடுகின்றன. பயணிகளை வரவேற்பதற்காக தனியார் நிறுவன ஊழியர்களும், உதவிக்காக பணிப்பெண்களும் நியமிக்கபட்டுள்ளனர். நான்கு பெட்டிகளோடு இயக்கப்படும் இந்த ரயிலில் சுமார் 120 பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதே வேளை, "விடுமுறைக்காக சுற்றுலா வரும் குடும்பங்களுக்கு, எந்தச் சிறிய கொண்டாட்டமும், குதூகலமும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமையை ரயில்வே உருவாக்கக் கூடாது" என்று கமல் கூறியுள்ளார்.

 

ரயில்வே நிர்வாகத்தின் இந்த முடிவு உதகை மலைரயிலில் பயணம் செய்ய நினைக்கும் ஏழை எளிய மக்களை பாதிக்கும் என கூறுகிறார் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன்.

"நீண்ட நாட்களுக்கு பிறகு நீலகிரி மலை ரயில் தற்போது இயக்கபடுகிறது. இந்த ரயில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுவதாக தெரிகின்றது. இதில் பயணிப்பதற்கான கட்டணமாக ஒரு நபருக்கு 3 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விழாக்காலங்களில், கோடைகாலத்தில் இந்த கட்டணம் பல ஆயிரங்கள் உயரும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் நூறு ஆண்டுகள் கண்ட இந்த மலை ரயிலில் பயணம் செய்யவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும்."

"உடனடியாக தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்து, அரசே இந்த ரயிலை இயக்க வேண்டும். ஏழை, எளிய மக்களும் பயணம் செய்கின்ற வகையில் கட்டணங்கள் இருக்க வேண்டும். இப்போது இருக்கின்ற இந்த நிலை நீடித்தால் ரயில்வே நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்" என தெரிவிக்கிறார் கோவை ராமகிருஷ்ணன்.

உதகை மலை ரயில் சேவையை தனியாரிடம் ஒப்படைத்திருக்கும் ரயில்வே நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தனியார் சுரண்டலுக்கு வழிவகுக்கும் என கூறுகிறார் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்.

"தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தளத்திற்கான ரயில் சேவையை தனியாரிடம் ஒப்படைத்திருப்பது ஏற்புடையதல்ல. உதகை மலை ரயிலின் சிறப்பம்சங்களை வைத்து தான் யுனெஸ்கோ அமைப்பு இதற்கு அங்கீகாரம் வழங்கியது. அந்த அங்கீகாரமே சலுகை கட்டணத்தில் அனைத்து தரப்பு மக்களையும் ரயிலில் கூட்டிச் சென்று மகிழ்விப்பதற்காகத் தான் வழங்கப்பட்டது. தற்போது இந்த ரயில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கட்டுள்ளதால் எளிய மக்கள் இதில் பயணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது."

"ஐந்து நபர்களைக் கொண்ட ஒரு நடுத்தர குடும்பம் இப்போது உதகை மலை ரயிலில் பயணிக்க, அறுபதாயிரம் பயணக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதனால் இந்த ரயில் சேவை எளிய மக்களுக்கு எட்டாக் கணியாகவே மாறி விடும். மற்ற ரயில்களை இயக்காமல் இதை மட்டும் இயக்குவது ஏன்? என்ற கேள்வி தான் தனியார்மயமாக்கல் குறித்த பல சந்தேகங்களை எழுப்புகிறது. ஜனவரி 01 வரை மட்டுமே வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறுகிறது. ஆனால் 'ஜனவரி முதல் தினசரி இயங்கும்' என தனியார் நிறுவனத்தினர் விளம்பரம் செய்துள்ளனர். அடுத்தடுத்த நாட்களில் பயண கட்டண விலையும் அதிகமாகும் என கூறப்படுகிறது" என்கிறார் இவர்.

"மேலும், ரயிலின் வண்ணம், எண்கள் என அரசு உடமைக்கான அனைத்து அடையாளங்களும் இப்போதே மாற்றப்பட்டுள்ளன. பயணிகளுக்கான ரயில் இயங்கிய பின்பு, இந்த நடவடிக்கையை எடுத்திருந்தால் கூட ஏற்புடையதாக இருக்கும். ஆனால், ஒரே ரயில் சேவை, அதுவும் தனியார் நிர்ணயம் செய்யும் கட்டணத்தில் தான் மக்கள் பயணிக்க முடியும் என்றால், இது தனியார் சுரண்டலுக்கு வழிவகுப்பதோடு, சுற்றுலாத்தளங்களை திறந்து வைத்து விட்டு வழியை மூடும் ஏற்பாடாகத் தான் இதை பார்க்க முடிகிறது" என தெரிவிக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்.

இது குறித்து தெளிவுபெற சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, 'பயணிகள் மத்தியில் வரவேற்பு இருந்தால் வாடகை ரயில் தொடர்ந்து இயக்கப்படலாம்' என்ற தகவல் கிடைத்தது.

"இதற்கு முன்னர் பல முறை உதகை மலை ரயில் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தான் இப்போதும் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 3ம் தேதியோடு இந்த ஒப்பந்தம் முடிகிறது. தனியார் இயக்கும் ரயில் சேவைக்கு வரவேற்பு இருந்தால் ஜனவரிக்கு பிறகு அவை இயங்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், இந்த ரயில்களினால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இது சுற்றுலா நிறுவனங்களுக்கான ரயில் சேவையாக இருக்கும். பொதுமுடக்கம் முடிந்து இயல்புநிலை திரும்பியதும் சாதாரண கட்டணத்திலான மலை ரயில் சேவையும் துவங்கிவிடும்" என ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

உதகை மலைரயில் சேவையை வாடகைக்கு எடுத்துள்ள TN43 நிறுவனத்திடம் பேசியபோது, ஒரு வழி பயணக் கட்டணமாக மூவாயிரம் ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுவதாக தெரவித்தனர். மேலும், ஜனவரிக்கு பிறகு அவர்களது சேவை நீடிக்குமா என்ற கேள்விக்கு, அதுகுறித்த உறுதியான தகவல் எதுவுமில்லை என பதிலளித்தனர்.

ரயில்வே துறை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, ரயில்வே தொழிலாளர்களின் வேலைகள் பறிக்கப்படும் என கூறுகிறார் ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோவிந்தன்.

"இப்போது புகழ்பெற்ற உதகை மலைரயிலின் பெயர் TN43 என மாற்றப்பட்டுள்ளது. ஒருமுறை மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை சென்று மீண்டும் திரும்புவதற்கு தனியார் நிறுவனம் ரயில்வே நிர்வாகத்திற்கு வாடகைத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளது. ஜனவரி 3 ம் தேதி வரை வாடகைத் தொகையை தனியார் நிறுவனம் ரயில்வேக்கு செலுத்திவிட்டது. ரயில் பெட்டி ஒவ்வொன்றிலும் விமான பணிப்பெண் போல ஒரு இளம் வயது பணிப்பெண்ணை நியமித்திருக்கிறார்கள். இரண்டு ஸ்நாக்ஸ் பாக்கெட், ஒரு வாட்டர் பாட்டில் இலவசமாக தரப்படுகின்றன".

"இந்த ரயிலில் அரசு ரயில்வேயின் பழைய கட்டணம் ரூ.30/-, இப்போது தனியார் ரயிலின் புதிய கட்டணம் ரூ.3000/-. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான டிமான்டை பொருத்து இந்த கட்டணம் ரூ.8000 முதல் ரூ.12000 வரை நிர்ணயிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஸ்டேஷன் வாசலிலும் ஒரு தனியார் டிக்கெட் கவுண்ட்டர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் பரிசோதகர், ரயில்வே கவுண்ட்டரில் டிக்கெட் கொடுக்கும் கமர்சியல் தொழிலாளர், டிக்கெட் ரிசர்வ் செய்யும் ரிசர்வேஷன் பிரிவு ஊழியர்கள், பராமரிப்பு மற்றும் எலக்ட்ரிக்கல் பணியாளர்கள் என அனைத்து தொழிலார்களின் வேலையும் பறிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது" என்கிறார் இவர்.

கடந்த சனிக்கிழமை முதல் தனியார் சார்பில் இயக்கப்படும் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலைரயில் சேவைக்கான பயணச்சீட்டுகள் அனைத்தும் ஆன்லைன் ரிசர்வேஷன் முறையில் வழங்கப்படுவதில்லை. மாறாக தனியார் நிறுவனத்தினரை தொடர்புகொண்டு மட்டுமே பயணச்சீட்டு பெற முடிகிறது. இந்த நடைமுறைகளாலும், தனியார் நிறுவனம் அதிக கட்டணம் வசூலிப்பதாலும் பெரும்பாலான பயணிகள் உதகை மலைரயில் சேவையை பயன்படுத்த முடிவதில்லை என்கின்றனர் பயணிகள் நலச்சங்கத்தினர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.