
பொன்னேரி: பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவ கிராமமான கோரைக்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரையில், சனிக்கிழமை ஆளில்லா குட்டி விமானம் கரை ஒதுங்கியது.
பழவேற்காடு, அருகே உள்ளது கோரைக்குப்பம். கடலோர கிராமமான இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில் சனிக்கிழமை, அதிக அளவில் மழை பெய்ததாலும் கடலில் ராட்சத அலை அடிப்பதால் கடற்கரையில் நிறுத்தப்பட்ட படகுகள் கடலில் இழுத்துச் செல்லப்படும் நிலை உருவாகியது.
இதையடுத்து மீனவர்கள் தங்கள் படகுகளையும் வலைகளையும் பாதுகாப்பாக கடற்கரைக்கு வெளியே உள்ள காலியிடத்துக்கு, கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆளில்லா குட்டி விமானம் ஒன்று கரை ஒதுங்கியிருப்பதை அவர்கள் கண்டனர். இதையடுத்து மீனவர்கள். அதனை கரை பகுதிக்கு கொண்டு வந்தனர்.
இந்த ஆளில்லா குட்டி விமானம் 6 அடி நீளத்திற்கும், 10 அடி அகலத்திற்கும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன் பகுதியில் உள்ள, கருவிகள் சேதமடைந்த நிலையில் உள்ளது.
இந்த ஆளில்லா குட்டி விமானம் கடலில் விழுந்த நிலையில்,கடல் அலையால் அடித்துக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து காட்டூர் காவல்நிலையத்துக்கும், பொன்னேரி வருவாய் துறையினருக்கும், மீனவ மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காட்டூர் காவல்நிலைய காவலர்கள், அங்குச் சென்று, கரை ஒதுங்கிய ஆளில்லா குட்டி விமானம் சாதாரணமான பிளாஸ்டிக் விமானமா?அல்லது, விமானப் படையில் பயன்படுத்தும் விமானமா என விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment