
சென்னை சென்ட்ரல் அருகேஏற்பட்ட பள்ளத்தை முழுமையாக சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதால், சென்ட்ரல் மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயலால் சென்னையில் கனமழை பெய்ததால், சாலைகள், குடியிருப்புகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடின. இதனிடையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்த நவம்பர் 25-ம்தேதி இரவு நேரத்தில் சாலையின் நடுவே 20 அடி பள்ளம் தோன்றியது. உடனடியாக இந்த சாலையை இரும்பு தகடுகளால் தற்காலிகமாக சீரமைத்து, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.
இந்நிலையில், அந்த பள்ளத்தை முழுமையாக சீரமைக்கும் பணிகள் நேற்று தொடங்கின. இதனால், பல்லவன் சாலை வழியாக சென்ட்ரல் செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், சென்ட்ரலுக்கு செல்லும் வாகனங்கள் மன்றோ சிலை, தீவுத்திடல் வழியாக திருப்பிவிடப்பட்டன. பொதுமக்கள் சிலர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நடந்தே சென்றனர்.
4 நாட்களில் நிறைவு
போக்குவரத்து போலீஸார்கூறும்போது, ''கனமழையின்போது சென்ட்ரல் அருகே ஏற்பட்ட பள்ளத்தை நிரந்தரமாக சீரமைக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனால்,பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு பல்லவன் சாலை வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இரு மார்க்கமாகவும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. எனவே, பணிகள் நிறைவடைந்தவுடன் சாலை மீண்டும் திறக்கப்படும்'' என்றனர்.
No comments:
Post a Comment