Latest News

அதிமுகவுக்கு வி.கே.சசிகலா; திமுகவுக்கு மு.க.அழகிரி!

அதிமுகவில் வி.கே.சசிகலாவை 100 சதவீதம் சேர்க்க மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்து, தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். மு.க.அழகிரியைத் திரும்பக் கட்சியில் சேர்த்துக் கொள்வது குறித்து திமுக தலைவர் எதுவுமே தெரியாததுபோல மெüனம் சாதிக்கிறார்.

அரசியல் பாதை எவ்வளவு கரடு முரடானது என்பதற்கு இவை நல்ல எடுத்துக்காட்டுகள்.

பெங்களூருவில் இருந்து சென்னை தியாகராய நகர் வரையில் சசிகலாவுக்கு தொண்டர்கள் அளித்த வரவேற்பு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோன்ற பயணத்தையும், வரவேற்பையும் தமிழக அரசியல் ஏற்கெனவே பார்த்திருக்கிறது. அலைக்கற்றை வழக்கில் கனிமொழி சிறையில் இருந்து திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் இருந்து சிஐடி காலனி வரை வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்துக்கே கருணாநிதி நேராகச் சென்று கனிமொழியை வரவேற்று அழைத்து வந்தார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள வேதியியல் மாற்றங்களில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பவராக மு.க.ஸ்டாலின் காணப்படுகிறார். திமுகவில் நிகழ்ந்திருப்பது "இயற்பியல்' மாற்றம் என்றும் அதிமுகவில் ஏற்படுவது "வேதியியல்' மாற்றம் என்றும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். திமுகவின் தலைவராகிவிட்டோம் என்பதையே மறந்து சாதாரண தொண்டர்போல, ""பெங்களூருவில் இருந்து கிளம்பிவிட்டார் (சசிகலா). இனி அதிமுகவில் நடக்க வேண்டியது எல்லாம் நடக்கும்'' என்று சசிகலா வருகைக்கு கிட்டத்தட்ட 'ரன்னிங் கமென்டரியே' ஸ்டாலின் கொடுத்தார்.

""ஒரு விரலை நீட்டி பிறரைக் குற்றம்சாட்டும்போது, மூன்று விரல்கள் நம்மை நோக்கியே இருப்பதை மறக்கக்கூடாது'' என்று அண்ணா கூறியதைத்தான் நினைக்கத் தோன்றுகிறது.

அதிமுகவில் சசிகலா மூலம் மூண்டுள்ள நெருப்பைப் பார்த்து மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி அடைகிறார். திமுகவில் மு.க.அழகிரி மூலம் ஏற்கெனவே நெருப்பு மூண்டு பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

சசிகலாவோ இன்னும் முழுமையாக வாய் திறக்காமல் உள்ளார். ஆனால், மு.க.அழகிரியோ திமுகவுடனான, குறிப்பாக மு.க.ஸ்டாலினுடனான, தன் குமுறல்களை மனம் திறந்து ஏற்கெனவே தெரிவித்து விட்டார்.

""திமுகவில் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்தான். அவருக்கு பக்கபலமாக இருப்பேன் என்று ஸ்டாலினிடமே கூறினேன். இதை மறுக்க முடியுமா?'' என்று மு.க.அழகிரி கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பிறகும் மு.க.அழகிரியைத் திமுகவில் சேர்த்துக்கொள்ள ஸ்டாலின் மறுப்பது ஏன்? கருணாநிதி தனது கடைசிக் காலங்களில் அழகிரியை கட்சிக்குள் சேர்க்க நினைத்தார். அது கட்சியினர் அனைவருக்கும் தெரியும். அப்படியும் சேர்த்துக்கொள்ளப்படாதது ஏன் என்றால் மு.க.அழகிரி மீது மு.க.ஸ்டாலினுக்கு இருக்கும் அச்சம்தான் என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

திமுகவுக்குள் மு.க.அழகிரி வந்துவிட்டால், எங்கே தனக்குள்ள அதிகாரம் பறிபோய்விடுமோ என்கிற ஸ்டாலினின் அச்சம்தான் காரணம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பது திமுகவின் சாதாரண தொண்டர்கள் கூட அறிந்ததுதான். இதே ஸ்டாலின்தான், "சசிகலா வருகையால் எடப்பாடி பழனிசாமி அச்சப்படுகிறார்' எனக் கூறுகிறார்.

தென் மண்டலப் பகுதியில் திமுகவின் அசைக்க முடியாத தூணாக இருந்தவர் மு.க.அழகிரி. திருமங்கலம் இடைத்தேர்தல், மதுரை மாநகராட்சி தேர்தல் உள்பட பல தேர்தல்களில் திமுகவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர். எத்தனையோ பேர் மத்திய, மாநில அமைச்சர்களாகவும், மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக ஆவதற்குக் காரணமாக இருந்தவர். ""மு.க.அழகிரி திமுகவில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு 7 ஆண்டுகளுக்கும் மேலாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படிக் கேட்பவர் வேறு யாரும் இல்லை. மு.க.ஸ்டாலினின் சொந்த அண்ணன். தனது சொந்த அண்ணனின் குரலுக்குச் செவிமடுக்காத நிலையில்தான், அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியடைந்து வருகிறார்'' என்று அதிமுகவினர் கேலி பேசுகிறார்கள்.

தன்னை ஸ்டாலின் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளத் தயாராக இல்லை என்பது அழகிரிக்கு நன்றாகவே தெரியும். ""மு.க.ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது. எனது ஆதரவாளர்கள் மு.க.ஸ்டாலினை முதல்வராக விடமாட்டார்கள்'' என்று சூளுரைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார் அழகிரி. தனிக் கட்சி தொடங்கி தேர்தலைச் சந்திக்கப் போவதில்லை என்றாலும் நேர்முக எதிர்ப்பு தெரிவித்து தென்மண்டலப் பகுதியில் திமுகவைத் தோல்வி அடையச் செய்வதற்கான வேலைகளுக்கு அழகிரி தயாராகி வருகிறார். இதற்கு திமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் மறைமுக ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

கருணாநிதி மறைவுக்குப் பிறகு சென்னையில் மு.க.அழகிரி அமைதிப் பேரணி நடத்தி தனது பலத்தைக் காட்டியதில் தொடங்கி பல்வேறு நிகழ்வுகளில் அவர்கள் தொடர்ந்து மறைமுகமாக உதவுகின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் அவர்கள் அழகிரியை ஆதரிக்க உள்ளனர். இதனால், திமுகவுக்கு தேர்தலில் பெருத்த நெருக்கடி ஏற்பட உள்ளது.

அதிமுகவில் சசிகலாவாலும், திமுகவில் அழகிரியாலும் எழுந்துள்ள பிரச்னையை பொதுவாகப் பார்க்கும்போது அண்ணன் - தம்பி பிரச்னையாக அல்லது குடும்பப் பிரச்னையாகத் தோன்றலாம். ஆனால், தேர்தல்களில் இதுபோன்ற பிரச்னைகள்தாம் வெற்றி-தோல்வியைத் தீர்மானிப்பவையாக அமைந்து விடுகின்றன.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.