Latest News

அமெரிக்க அதிபர் பைடன் அரசில் இந்திய - அமெரிக்க உறவு தழைக்குமா? என்னென்ன சிக்கல்கள்?

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக் காலத்தில், இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் ராஜரீக ரீதியிலான உறவுமுறைகள் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உறவுமுறைகள் அதிகரித்தன. பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிரான பிரச்னைகளில், இந்தியாவுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடர்ந்து கிடைத்து வந்தது. இது போக அமெரிக்காவிடமிருந்து அதிநவீன போர்க் கருவிகளையும் இந்தியா பெற்று வந்தது.

இந்த விவகாரங்களில் இருநாட்டுக்கு மத்தியிலான உறவு தொடரும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையிலான அரசின் கீழ், மதச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் போன்ற விவகாரங்களை, அமெரிக்கா அணுகும் முறை மாறுபடலாம். வர்த்தக விவகாரங்களிலும் சில முரண்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோதி அரசின் ஜனநாயகம் குறித்த விவகாரங்களில் அழுத்தம்:

உலக அளவில் வளர்ந்து வரும் சீனாவைச் சமாளிக்கும் மாற்று சக்தியாக இந்தியாவைக் கருதுகிறது அமெரிக்கா. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான பிரச்னைகள் புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பைடன் நிர்வாகமும் இந்தியாவை ஒரு மாற்று சக்தியாகக் கருதும் எனத் தோன்றுகிறது. ஆனால் இந்தியா ஜனநாயக மதிப்புகளை உறுதி செய்யும் விவகாரத்தில், டிரம்பை விட பைடன் அதிக அழுத்தம் கொடுப்பார் எனலாம்.

உலகம் முழுக்க ஜனநாயகத்தை வளர்த்தெடுப்பது மற்றும் பாதுகாப்பது, பைடனின் முக்கிய வெளி விவகாரத் திட்டங்களில் ஒன்று எனக் கூறப்படுகிறது. சுதந்திர உலகத்தில் நாடுகளின் உற்சாகம் மற்றும் தேசங்களின் நோக்கங்களைப் புதுப்பிக்கவும், ஜோ பைடன் தன் முதல் ஆண்டிலேயே ஒரு உலக அளவிலான உச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்கிற ரீதியில், அந்நிகழ்ச்சியில் இந்தியா இயற்கையாகவே அமெரிக்காவின் கூட்டாளியாக இருக்கும். ஆனால், தற்போது இந்திய மத்திய அரசின் இந்துத்துவக் கொள்கையினால், இந்தியாவில் ஜனநாயகப் பாரம்பரியம் சிதைவதற்கான சமிக்ஞைகளைக் காண்பதாக சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

"உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அத்தனை வேகமாக தன் ஜனநாயகத்தில் இருந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கான மோசமான எதிர்வினைகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன," என தி டெலிகிராஃப் பத்திரிகையில் எழுதியுள்ளார் அரசியல் ஆய்வாளரான அசிம் அலி. அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையில் ராஜரீக ரீதீயிலான உறவுமுறை பாதிக்கப்படாமல், இந்தியாவை மெல்ல ஜனநாயகத்தின் பக்கம் திசை திருப்ப, பைடனிடம் பல விஷயங்கள் கைவசம் இருக்கின்றன.

மோதியின் அரசோடு கூட்டாளியாக இருக்கும் ஊடகங்கள் மற்றும் நீதித் துறை மூலம் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பற்ற தன்மைகளை மெல்ல வலுவிழக்கச் செய்து வருகிறார்கள் என மோதி அரசை விமர்சிக்கும் சிலர் கூறுகிறார்கள். இதை அரசியல் விமர்சகர் பிரதாப் பானு மேத்தா "நீதித்துறையின் காட்டுமிராண்டித்தனத்தில் வீழ்வது" என்கிறார்.

மூன்று புதிய வேளாண் சட்ட மசோதாக்கள், மோதி அரசை விமர்சிக்கும் விமர்சகர்களுக்கு மற்றும் ஒரு முக்கிய விஷயமாகி இருக்கிறது. அச்சட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்கள், பாஜகவின் உறுப்பினர்கள் மற்றும் ஆதாரவாளர்களால் `துரோகிகள்` என்றும், `தீவிரவாதிகள்` என்றும் முத்திரை குத்தப்படுகிறார்கள்.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலர் விமர்சனங்களை ஒடுக்க இம்மாதிரியான சொற்றொடர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

"தழைத்தோங்கும் ஜனநாயகத்துக்கு அமைதியான போராட்டங்கள் ஒரு பெரும் அடையாளம் என நாங்கள் காண்கிறோம். கருத்து வேறுபாடுகள் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளப்பட ஊக்குவிக்கிறோம்," என கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.

காஷ்மீர் விவகாரம்

கடந்த ஆகஸ்ட் 2019-ல், இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில், காஷ்மீரின் தன்னாட்சியை ரத்து செய்தது இந்திய அரசு. அதோடு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, இணையம் துண்டிக்கப்பட்டது. கடந்த வாரத்தில் தான் காஷ்மீர் பகுதியில் மீண்டும் அதிவேக இணைய வசதி கொண்டு வரப்பட்டது.

பைடன் மற்றும் முக்கிய ஜனநாயக கட்சித் தலைவர்கள், இந்தியா, காஷ்மீரில் மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்தார்கள். ஆனால் அக்கண்டனக் குரல்கள் அப்போது இந்தியாவில் பெரிதாக எடுபடவில்லை. அமெரிக்க காங்கிரஸ் சபையில் இடம்பெற்றிருந்த பிரமிளா ஜெயபால், காஷ்மீர் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்ததற்காக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், கடந்த டிசம்பர் 2019-ல் சில அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை உறுப்பினர்களுடனான சந்திப்பை ரத்து செய்தார்.

விவசாயிகள் போராட்டம் ஏன்? புதிய சட்டங்களில் என்ன பிரச்சனை?

நரேந்திர மோதி அரசின் வேளாண் மசோதாக்கள்: குடியரசு தலைவர் ஒப்புதல்

மனித உரிமை மீறல்களை வெளிப்படையாகப் பேசும் பிரமிளா ஜெயபால், இப்போது பைடன் நிர்வாகத்தில் மிகவும் முக்கிய பதவியில் இருக்கிறார். மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் எழுப்பும் ஜனநாயகக் கட்சியினர்களைக் கொண்ட குழுவில் அவர் இடம்பெற்றுள்ளார்.

"யாரும் வெளிப்படையான, கடுமையான கண்டனங்களை எதிர்பார்க்கவில்லை, இருப்பினும் பைடன் மோடிக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும்," என அலி எழுதியுள்ளார்.

அது நடக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். சீனா அல்லது ரஷ்யா ஜனநாயக மதிப்புகளை அவமானப்படுத்தும் போது அமெரிக்கா கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது, ஆனால் இந்தியாவை அவ்வாறு கண்டித்ததில்லை.

வர்த்தகப் பிரச்னைகள்

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் வர்த்தக ரீதியிலான விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கடந்த சில தசாப்தங்களாக, இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதிக வரி, அறிவுசார் சொத்துரிமை, விசா பிரச்னைகள் எல்லாம் இப்போது வரை தீர்க்கப்படவில்லை. இதில் மோதி அரசின் புதிய சுயசார்புத் திட்டங்களும் அடக்கம்.

தன் நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், மோதி அரசு அறிவித்திருக்கும் Protectionist கொள்கைகள் (உள்நாட்டிலேயே தயாரித்து, உள்நாட்டிலே நுகர்வது), வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வியாபாரம் செய்வதில் சிரமத்தை ஏற்படுத்தும். அதோடு வெளிநாட்டில் இந்திய வியாபாரங்கள் போட்டி போட்டும் திறனையும் பாதிக்கும்.

"இந்த பாதுகாப்புக் கொள்கைகள், உலகின் மதிப்புச் சங்கிலியில் இந்தியாவின் திறனை பாதிக்கும், இந்த கொள்கையை அமல்படுத்தும் நடவடிக்கையால், இந்திய நுகர்வோர்கள் பொருட்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி வரும்" என இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் கூறியதாக மிண்ட் பத்திரிகையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இந்திய சந்தையை அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிகமாகத் திறந்துவிட விருப்பமில்லாததால், இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் ஒரு வர்த்தக ஒப்பந்தம் இதுவரை நிறைவேறவில்லை. அமெரிக்காவில் சூழலைச் சரி செய்யும் வரை எந்த சர்வதேச ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடமாட்டேன் என பைடன் கூறியுள்ளார். பைடன் நிர்வாகத்தில் ஓர் ஒப்பந்தத்தை முடிப்பது என்பது அத்தனை எளிதான காரியமாக இருக்காது என நிபுணர்கள் நம்புகிறார்கள்.

நெருக்கமான வர்த்தக உறவுகள், ராஜரீக ரீதியில் பலன் கொடுப்பவையாக இருக்கும் என்கிறார் வெளி விவகாரத் துறை நிபுணர் அபர்னா பாண்டே. "அமெரிக்க நிறுவனங்களை விருப்பமான முதலீட்டாளர்களாக இந்தியா கருதுவதற்கும், இந்தியாவில் அமெரிக்க முதலீட்டை ஒரு ராஜரீக ரீதியில் முன்னுரிமை கொண்ட முதலீடாக ஊக்குவிப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாடும், அதிகரித்து வரும் சீனா என்கிற சவாலை இந்தியா எதிர்கொள்ள உதவும்," என அபர்னா பாண்டே, தி பிரின்ட் செய்தி வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.

சீனா உடனான பிரச்னை

கடந்த வாரம் அமெரிக்காவின் புதிய உள்துறைச் செயலர் அன்தோனி ப்ளின்கென், சீனாவின் யங் ஜீச்சிக்கு சீனாவின் மனித உரிமை மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்தும், இந்தியாவுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாகவும் ஒரு குறிப்பை எழுதினார். இதிலிருந்து அமெரிக்கா, டிரம்ப் காலகட்டத்தைப் போலவே சீனாவோடு கடுமையாக நடந்து கொள்ளும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

"மோதி இந்தியாவின் ஜனநாயகம் சரிவதை தடுத்தால், இது மோதிக்கு கிடைக்கும் மிகப் பெரிய வாய்ப்பு, இதை அவர் தவறவிடக் கூடாது," என டெக்கன் ஹெரால்ட் நாளிதழில் எழுதியுள்ளார் எஸ்.ரகோத்தமன்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.