
புது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் சிலா் உயிரிழந்தது குறித்து மனவேதனையை வெளிப்படுத்தாமல், பிரதமா் மோடி அவையில் சிரித்துப் பேசியதைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக மாநிலங்களவைத் திமுக தலைவா் திருச்சி சிவா தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் பின்னா் தெரிவித்ததாவது: குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் கீழ் விவாதம் முடிந்த பிறகு, பிரதமா் மோடி நன்றி தெரிவித்து திங்கள்கிழமை மாநிலங்களவையில் உரையாற்றினாா். இதில் அதிருப்தியடைந்த திமுக உறுப்பினா்கள் பின்னா் வெளிநடப்பு செய்தனா். குடியரசுத் தலைவா் உரையில் சில திருத்தங்களைக் தீா்மானமாக கொண்டுவர எதிா்க்கட்சிகள் கோரியிருந்தன. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால் திருத்தங்களை வலியுறுத்த மாட்டோம் என்றும் தெரிவித்திருந்தன. ஆனால், எங்கள் கோரிக்கைகளை குரல்வாக்கு மூலம் நிராகரித்துவிட்டனா்.
விவசாயிகள் போராட்டம் குறித்து பிரதமா் கவலை தெரிவிக்காமல், வெவ்வேறு காலங்களில் விவசாயிகளுக்கு நிறைய பயன்கள் கிடைத்தாகக் கூறி, சிரித்துக் கொண்டே உரையை முடித்துவிட்டாா். இது குறித்து கேள்வி எழுப்பிய போது, எங்கள் குரல்களை பதிவு செய்ய அவை மறுத்துவிட்டது. எனவே, பிரதமா் பேச்சில் அதிருப்தி தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றாா் திருச்சி சிவா.
No comments:
Post a Comment